உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 8 பேர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, போலீசாரால் கைது செய்து செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார். அவரின் கைதுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உ.பி மற்றும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, இன்று காலையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகர் மற்றும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் புவனகிரியில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி முன்னணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடி, உ.பி.மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத் ஆகியோரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.