Fri. Nov 22nd, 2024

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் 20 ம் தேதி பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டன.

இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் விலை உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, அரசியல் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது உள்ளிட்ட 20 அம்சங்களில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்துவது உள்பட அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ம் தேதி வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதனையடுத்து, இன்று காலையிலேயே திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்களின் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் முன்னணி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் அன்பகம் அலுவலக கட்டடத்திற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக எம்.பி.யும், மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி, சிஐடி காலனியில் உள்ள தனது வீட்டு முன்பு மகளிரணி நிர்வாகிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் தி.நகர் அலுவலகம் முன்பு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மத்திய பாஜக அரச்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.