Sat. May 18th, 2024

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக, நிகழாண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியை தொடர்ந்தது. ஆனால், தற்போது 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்து, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக. விலகலுக்கான காரணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மருத்துவர் ராமதாஸ், அதிமுக.வில் வலிமையான தலைமையில்லாததால் பாமக.வின் வெற்றி வாய்ப்பு பறிபோனது என விமர்சனம் செய்திருந்தார். கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் கூட, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர், பாமக விலகலால் அதிமுக.வுக்கு எந்த இழப்பும் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், அதிமுக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களிடம், தலைவர்களின் பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் தென்காசி, திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களை தவிர்த்து எஞ்சிய 7 மாவட்டங்களில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த மாவட்டங்களில் பாமக.வுக்கு செல்வாக்கு அதிகம் இருந்தாலும்கூட, அதிமுக மற்றும் ஆளும்கட்சியான திமுக.வுக்கும் பாமக.வுக்கு இணையான செல்வாக்கு இருக்கிறது. அதுவும், கிராமப்புற மக்களிடம் இரட்டை இலை மீது இருக்கும் பக்தி இன்றளவிலும் குறைந்துவிடவில்லை.

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டால், அதிக இடங்களில் வெற்றிப் பெற்று, வடமாவட்டங்களில் பாமக செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவே, உள்ளாட்சித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தே, பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்தார் என்று மூத்த அரசியல் கள ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், ஆளும்கட்சியான திமுக, வடமாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ள பாமக.வின் வெற்றி வாய்ப்புகளை முழுமையாக தடுக்கவே, இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கியையும் முழுமையாக திமுக பக்கம் திருப்பவே, அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்து, வடமாவட்டங்களில் திமுக.வின் செல்வாக்கை அதிகரிக்க காய் நகர்த்திவிட்டார் என்ற ஒரு பேச்சு, பாமக மூத்த நிர்வாகிகளிடம் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியதால், வடமாவட்டங்களில் உள்ள 7 மாவட்டங்களில் திமுக.வின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிந்திருந்தபோதும், தனித்த முடிவு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்த முடிவு, அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில், திமுக, அதிமுக, பாமக என மும்முனை போட்டி ஏற்பட்டால், நிச்சயம் அனைத்து இடங்களிலும் திமுக.தான் வெற்றிப் பெறும். இதன் மூலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் போன்ற பதவிகளிலும் திமுக.வினரே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று தைலாபுரம் தோட்டத்திற்கு மாவட்ட அளவிலான பாமக நிர்வாகிகள் கருத்துகளை தெரிவித்தனர்.

இதனிடையே, ஊரக அளவிலான, அதாவது வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் போன்ற பதவிகளுக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுவிட்டு, ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில், ஆளும்கட்சியுடனான திமுக.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளை கணிசமாக பிடித்துவிடலாம் என கணக்குப் போட்ட தைலாபுரம் தோட்ட காவலர், அதற்காக ரகசியமாக திமுக மேல்மட்ட தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

திமுக மேல்மட்டத்தில் இருந்து சாதகமான சிக்னல் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த தைலாபுரம் தோட்ட காவலர், கீழ்மட்ட பாமக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் குறித்து, ஆழ்ந்து யோசித்து வந்த நிலையில், திமுக.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், நிச்சயம் வெற்றி என்று அடையாளம் காணப்படும் வார்டு உறுப்பினர் முதல் ஒன்றிய, மாவட்ட அளவிலான தலைவர்கள் பதவியையும் எளிதாக கைப்பற்றிவிடலாம் என இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறிய கருத்துகளை ஏற்றுக் கொண்டாராம்.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தும் சில,பல யோசனைகள் தைலாபுரம் தோட்டத்திற்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்காரணமாக, வடமாவட்டங்களில் திமுக.வின் வெற்றி வாய்ப்பை எளிதாக்காமல், கடும் போட்டியை ஏற்படுத்தும் நோக்கில், அதிமுக.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் என்ற ஒரு தகவல் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தே கசிகிறது.

அதற்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகலாம் என்று கூறும் பாமக மூத்த நிர்வாகிகள், வெளிப்படையாக கூட்டணி அறிவிக்கப்படாவிட்டாலும், 7 மாவட்டங்களில் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, போட்டியிடும் இடங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்ற நிலையையாவது உருவாக்கிவிடுவார் தைலாபுரம் தோட்ட காவலர் என்கிறார்கள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக மிக நெருக்கமான அதிமுக நிர்வாகிகள்.