சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்க ஆளும்கட்சியான திமுக முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவையில் இன்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வுமான கே.பி.முனுசாமியை முழுமையாக பேச அனுமதி கொடுக்காததால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், பேரவைத்தலைவர் அப்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எழுந்து ஒரு பிரச்சனை பற்றி பேச முனைந்தார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர், நீங்கள் திடீரென இப்படி பேசினால் அமைச்சரால் பதில் கொடுக்க இயலாது. நீங்கள் நாளை பேசலாம். அனுமதி தருகிறேன் என்று கூறினார்..
ஆனாலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து பேச முற்பட்டார். அப்போது அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து விளக்கம் அளித்தார்.
அதையும் மீறி கே.பி.முனுசாமி தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை புகழ்ந்து பேசி தனது கருத்தை பதிய வைக்க முற்பட்டார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு இப்படி பேசுவதை மானிய கோரிக்கையில் தான் பேச வேண்டும். என்ன முக்கியமான விஷயம் உள்ளதோ அதை மட்டும் சொல்லுங்கள் என்று வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை முழுவதும் பேச விடுங்கள். பாதியிலேயே பேச்சை நிறுத்தச் சொன்னால் எப்படி என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கும், பேரவைத் தலைவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த கே.பி.முனுசாமிக்கு தொடர்ந்து பேச அனுமதி கொடுக்காததால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.