Fri. Nov 22nd, 2024

எத்தனை தடைகள் போட்டாலும் அதை தகர்த்து அரசியலில் உதயநிதி ஸ்டாலின் பிரகாசிப்பார் என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார். அரசியல் நடத்துவதற்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கேட்டுக் கொள்கிறேன். இறைவன் சந்நிதானத்தில் அனைவரும் சமம். இறைவனை முன்னிறுத்தி அரசியல் செய்து அதன் வாயிலாக தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாக்குவது ஒன்றாக வாழுகிற மக்களிடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற செயல்களில் அரசியலை கொண்டு வரக் கூடாது என்பது எனது வேண்டுகோள். திமுக தலைவர் மகன் உதயநிதி ஸ்டாலினை பொத்தி பொத்தி வளர்த்தாலும் கூட அவர் அரசியலில் பிரகாசிக்க முடியாது என்று அண்ணாமலை சொல்லிகிறார். ஒரு செங்கல்லை வைத்து தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய துணை கன்டம் முழுவதிலும் உள்ள ஊடகங்களை தன்பால் இழுத்தவர். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மட்டுமே அவர் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஏற்கெனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் சூறாவளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்திரையை பதித்து இருக்கிறார். அவரை பாஜக விமர்சனம் செய்வதன் மூலம் அவரை உயர்ந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் என்று பாஜக முயல்கிறது. அவருக்கு எதிராக எத்தனை தடைகள் போட்டாலும், அவரது வெற்றிப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது. எத்தனை தடைகள் போட்டாலும் அதை தன்னுடைய உழைப்பால் உடைத்தெறித்து அரசியலில் உதயநிதி ஸ்டாலின் ஜொலிப்பார்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.