சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானை அவரது முகாம் அலுவலகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகளை அழைத்து கொண்டு , தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் இன்று சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்..
அமைச்சருடனான சந்திப்பு குறித்து வ. கெளதமன் கூறியதாவது:
அன்போடு அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட அமைச்சர் அவர்கள் இரண்டு மணி நேரம் உரையாடி வெகு விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கிறோம் என வாக்குறுதி தந்ததோடு மட்டுமல்லாமல் அவரே தன் கையால் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு பேரன்போடு தனது இல்லத்தில் உணவளித்து பெரும் நம்பிக்கை தந்து வழியனுப்பினார். அமைச்சர் அவர்களுக்கு
உலகத் தமிழர்களின் சார்பாக நெகிழ்ந்த நன்றிகள்
இவ்வாறு வ. கெளதமன் கூறினார்…
ஈழத் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்கு நன்றி. இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என வ. கெளதமன் வலியுறுத்தியுள்ளார்
பெறுநர்,
மாண்புமிகு கே.எஸ். மஸ்தான் அவர்கள்,
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்,
தலைமைச் செயலகம்,
தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று, நம்பி ஓடிவந்து, 1983இல் தொடங்கி, இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஈழத் தமிழர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ்ப் பல நல்ல திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளதைத் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். இத்துறை நலன் சார்ந்த அமைச்சரான தங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கான விடுதலையை அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.
ஏதிலியர் முகாம்களில் பழைய பழுதடைந்த வீடுகளில் வசித்துக் கொண்டிருக்கிற 7,469 வீடுகளைக் கட்டித்தருவதற்கு 231 கோடியே 54 லட்சம் ரூபாய் ஒதுக்கியும் அதிலும் 3,510 வீடுகளை முதற்கட்டமாகக் கட்டித் தருவதற்கு 108 கோடியே 81 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருப்பதும் வரவேற்கத்தக்கது.
நல்ல மதிப்பெண் எடுத்த 50 மாணவர்களுக்கு, பொறியியல் படிப்புக்கான இலவசக் கல்வியும், அவர்களுக்கான விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்குமென்றும், வேளாண் படிப்பிற்காக 5 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான செலவுகளையும் அரசே ஏற்றுப் படிக்க வைக்கும் எனவும் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அதே சூழலில் ஈழத்தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவப் படிப்பிலும் தங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்பதைத் பரிசீலனை செய்து, மருத்துவ படிப்பிற்கான இடங்களையும், தாங்கள் முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்று உடனடியாக ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளில் மட்டுமல்ல அரசியல், அரசு சார்ந்த உரிமைகளிலும் கோலொச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அண்டை நாடான இந்திய ஒன்றியத்தில் மட்டும் இன்னும் குடியுரிமையும் கிடைக்கவில்லை, கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளிலும் அவர்கள் பங்கெடுக்கவில்லை. அதற்கு பெரும் தடையாக இருப்பது அவர்களுக்கான குடி உரிமை பிரச்சினை மட்டும்தான். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றும் விதமாக ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை விரைவில் உறுதி செய்ய வேண்டுமென்றும் தண்டனை காலத்தைத் தாண்டி தனது தாய் தந்தை பிள்ளைகள் மனைவியைப் பிரிந்து ஆற்ற முடியாத துயரத்தோடு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை வெகு விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இரட்டை குடியுரிமை சம்பந்தமாகவும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலை தொடர்பாகவும் எம்.பி.,- அமைச்சர், துறைச் செயலர் உள்ளிட்டவர்களோடு ஒரு குழு அமைத்து விரைந்து ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்திருப்பதையும் இந்நேரத்தில் நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் இனியும் காலம் தாழ்த்தாமல் 2016இல் 6 நபர்களை விடுதலை செய்ததை முன்னுதாரணமாகக் கொண்டு, அவர்களை விரைவாக விடுதலை செய்ய, விரைந்து முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஏதிலியர் முகாமில் அவர்களின் குடும்பத்தோடு வசிக்க விருப்பப்படுகிறவர்களையும் முகாமை விட்டு வெளியே பதிந்து இருப்பவர்கள் அல்லது ஈழத்திற்கு போக நினைப்பவர்களையும் அவரரவர்களின் விருப்பப்படி, இங்கு வாழவோ அல்லது ஈழத்திற்கு அனுப்பி வைக்கவோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். சிறப்பு முகாம்களில் உள்ள ஒரு சிலரை சிங்கள அதிகார வர்க்கம் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று மறைமுகமாக மீண்டும் ஒரு இனப்படுகொலையை அரங்கேற செய்வதற்கு காத்திருக்கிறது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதேபோன்று, மிக முக்கியமாக திருச்சி சிறப்பு முகாம்களில் தண்டனைக் காலங்களைக் கழித்தவர்களின் தண்டனைக் காலத்தையும் கணக்கில் எடுத்து அரசு போர்க்கால அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
வ.கெளதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
01.09.2021