Sat. Nov 23rd, 2024

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வத தொடர்பாக, முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது என்று ஆளுநர் புரோகித் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க. அ.தி.மு.க. தமிழ்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பேரறிவாளனும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, ஆளுநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது. வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசும் நான்கு நாட்களில் ஆளுநர் முடிவு அறிவிப்பார் என தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பன்வாரிலால் புரோகித்தை அண்மையில் நேரில் சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்தினார்.

ஆனால், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான பதிலை பிரமாண பத்திரமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் இந்த முடிவு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மற்றும் தமிழ் தேசியவாதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.