Sat. Nov 23rd, 2024

மறைந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்தான் போட்டி என்று நல்லரசு தமிழ் செய்திகளில் கடந்த தேதி சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்த அனைத்தும் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையிலான நிகழ்வுகள், அன்றைய தேதியில் இருந்தே தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டினால் கட்சி நடவடிக்கை பாயும் என்று மிரட்டல் விடுத்தாலும், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல், தென் மாவட்டங்களில் வரவேற்பு போஸ்டர் ஒட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கட்சித் தலைமைக்கே சவால் விடும் வகையில், சசிகலாவை வரவேற்க அவர்கள் ஆயத்தமாகி வருவதற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி தந்தது, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் சசிகலாவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுதான். சசிகலாவின் கட்டளைகள் என்ற நல்லரசு.வின் சிறப்பு கட்டுரையை படித்த, மூத்த அமைச்சர்களோடு மிக நெருக்கமாக உள்ள ஒரு முன்னணித் தலைவர், நம்மிடம் மனம் திறந்து பேசினார். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆஸிட் ரகம். அதை அப்படியே, அவரின் வாக்குமூலமாகவே இங்கு பதிவு செய்கிறோம்.

இன்றைய அ.தி.மு.க.வில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களில் 70 சதகிவிதம் பேர், சின்னம்மா சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள்தான். வெளி பார்வைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சிப் பதவிகளை வழங்கியிருந்தாலும்கூட, அதனுள் ஊடுருவிப் பார்த்தால், அத்தனை பேரும் ஏதாவது ஒருவகையில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் மூலம்தான் கட்சியில் பதவி பெற்றிருப்பார்கள். தங்களுக்கு கிடைத்த கட்சிப் பதவிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாக கூட கைங்கரியம் செய்திருப்பார்கள். அதுபோலதான், ஒன்றிரண்டு மூத்த அமைச்சர்களைத் தவிர, எஞ்சிய அனைவரும் சசிகலாவின் கடைக்கண் பார்வைபட்டதால்தான் இன்றைக்கு அமைச்சர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

2016 ல் ஜெயலலிதா மறைந்த பிறகு, தங்களின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள, ஆட்டுமந்தைகள் போல, அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் போட்டி போட்டுக் கொண்டுபோய் சசிகலா காலில் விழுந்தார்கள். பா.ஜ.க. மேலிடம் ஆடிய கபட நாடகத்தில் ஓ.பி.எஸ்., தர்மயுத்தம் நடத்த, சசிகலா சிறைக்குச் செல்ல, எடப்பாடி பழனிசாமி, அதிர்ஷ்டவசமாக முதல் அமைச்சராகிவிட்டார்.
கடந்த நான்காண்டுகளில் பதவி தந்த சுகமும், அதிகாரப் போதையும், தன்னிச்சையாக செயல்பட, சுருட்டிக் கொள்ள கிடைத்த சுதந்திரமும், இ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்களையும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளையும், மிதமிதப்பில் உலாவ வைத்துவிட்டது. இப்படிபட்ட நேரத்தில், சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்தால், தாங்கள் எல்லோரும் பழையபடி அடிமைகளாக மாற வேண்டுமே என்ற அச்சம் அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அதனால், பெரும்பான்மையான அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், சசிகலா வருகையை உண்மையாக விரும்பவில்லை என்றாலும்கூட, தாங்கள் விலகி நின்றால் மற்றவர்கள் அடிபணிந்து, அரசியலில் தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வார்களோ என்ற அச்சத்திலேயே இருக்கிறார்கள்.

அதுவும், தேர்தல் தேதி நெருங்க, நெருங்க, பல அமைச்சர்களுக்கு படபடப்பு அதிகமாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சிப் பெருமைகள் மக்களிடம் ரீச் ஆகியிருக்கும் நிலையிலும், பொங்கல் பரிசு 2,500 ரூபாய், மருத்துவச் சேர்க்கையில் 7.5 சதவிகித ஒதுக்கீடு, அரியர்ஸ் தேர்வு ரத்து, குடிமராமத்துப் பணி, பெரும்பான்மையான மாவட்டங்களில் வியந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள், கொரோனோ எனும் உயிர்க்கொல்லித் தொற்று வேகமாக பரவிய காலத்திலேயே உயிரைப் பற்றி கவலைப்படாமல், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்டந்தோறும் பயணம் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றே முன்களப் பணியாளராக களத்தில் நின்றதது போன்ற காரணிகளால், முதல்வர் இ.பி.எஸ்.ஸின் புகழ், தென்மாவட்டங்களில் கிராம அளவில் பரவியிருந்தாலும் கூட, இந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்காது என்ற சந்தேகம், பெரும்பான்மையான அமைச்சர்களிடமே உள்ளது.

அதற்கு காரணமாக பல காரணிகளை சொன்னாலும் கூட, சசிகலா விடுதலையால், கட்சிக்குள் எழுந்துள்ள குழப்பம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் மக்கள் கிராம சபை கூட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற நிகழ்ச்சிகளில் காணப்படும் மக்களின் எழுச்சியை கண்டு அமைச்சர்களே அதிர்ந்து போய்வுள்ளார்கள். எடப்பாடி என்ற பெயரை சாதாரண மக்களும் உச்சரித்து வரும் இந்த நேரத்திலும் கூட, அவரின் தலைமையை நம்பி, மீண்டும் தேர்தல் களத்தைச் சந்திக்க தற்போதைய அமைச்சர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் தயக்கம் காட்டி வருகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், கடந்த 2001 முதல் 2006 வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி, பெரிய அளவில் குற்றம், குறையில்லாமல், பரவலாக மக்களிடம் நல்ல பெயரை பெற்றிருந்த போதும், எண்ணற்ற விலையில்லா நலத்திட்டங்களை நடைமுறை படுத்தியிருந்த போதும் ஜெயலலிதாவும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டியிருந்த போதும், 2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. அம்மாவுக்கே அந்த கதி என்றால், எடப்பாடி பழனிசாமி எம்மாத்திரம் என்பதுதான்.


அம்மா இருந்தவரை ஒற்றைத் தலைமை. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. எடப்பாடி பழனிசாமி மீணடும் முதல் அமைச்சராக வந்து விடக்கூடாது என்பதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விட, சசிகலா, தினகரனை விட குறியாக இருக்கிறார் ஓ.பி.எஸ். அதனாலேயே அவர், தர்மயுத்தப் போராட்டத்தையெல்லாம் மறந்து சசிகலாவை ஆதரிக்கக் கூட தயாராகிவிட்டார் என்பதை அவரின் அண்மைக்கால செயல்பாடுகள், அவரது மகனின் வாழ்த்துச் செய்தி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் பகிரங்கமான ஆலோசனை உள்ளிட்ட நிகழ்வுகள் பட்டுவர்த்தனமாக வெளிப்படுத்தி வருகின்றன. இப்படி தனக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சி வலைகளை கண்டுதான், மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்த, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ஆதரவை எந்த விலை கொடுத்தாவது பெற வேண்டும் என காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலைமையோ மிக,மிக கவலைக்கிடமாக உள்ளதுது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப்பகுதி அமைச்சர்கள் எல்லோரும் சசிகலா, டி.டி.வி.தினகரனை கண்டு கதிகலங்கிதான் உள்ளனர். இந்த இருவரும் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகாத நிலை உருவானால், மீண்டும் அமைச்சர் ஆகும் கனவு சுக்குநூறாகிவிடும் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இந்த அமைச்சர்கள் எல்லோருமே கடந்த 2016 தேர்தலில் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்போதைய தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே, தங்கள் தொகுதியில் மீண்டும் வெற்றி கிடைக்குமா என்பதை உறுதி செய்துகொள்ள, பல்வேறு சித்துவேலைகளில் ஈடுபட்டவர்கள். தங்கள் எதிரிகளை, தங்களது அதிகார திமிரால் பாதிக்கப்பட்ட சொந்தக் கட்சி நிர்வாகிகள் என யார் யாரெல்லாம், தேர்தலில் காலை வாறிவிடுவார்கள் என பட்டியல் போட்டு, மானம் மரியாதையெல்லாம் பார்க்காமல் தேடிச் சென்று பார்த்து, ஆதரவைத் திரட்டினார்கள். அப்போதும் நம்பிக்கை ஏற்படாமல், தாங்கள் போட்டியிடும் தொகுதியில் மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள, தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக, தமிழக தேர்தல் களத்தில் ஆழ்ந்த அனுபவம் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள் சிலரை அணுகி, தங்கள் தொகுதியில் கருத்துக் கணிப்பு எடுத்து தாருங்கள் என்று நட்பு முறையில் கேட்டு, அதன் மூலம் தொகுதியின் சாதகம், பாதகம் என்ன என்பதை அறிந்து, தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்பட்டவர்கள்.
ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாக இருக்கிறது. தொகுதியில் உள்ள அதிருப்தியை போக்க அமைச்சர்கள் கீழே இறங்கிச் செல்ல தயங்குகிறார்கள். மேலும், கருத்துக் கணிப்பும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். எடப்பாடி பழனிசாமியை மட்டுமே நம்பி களத்தில் இறங்க, அவர்கள் தயங்குகிறார்கள். கட்சித் தலைமையில் நிலவும் கோஷ்டிப் பூசல், சசிகலா, தினகரனின் எதிர்ப்பு, தி.மு.க.வின் பக்கம் சாயும் மக்கள், பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி மீது இயல்பாகவே மக்களுக்கு ஏற்படும் அதிருப்தி, கூட்டணி அமைப்பதற்கு பா.ஜ.க. கொடுக்கும் கெடுபிடி போன்ற காரணிகளால், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கிறது என்ற மனநிலைக்கே அமைச்சர்கள் பலர் வந்துவிட்டார்கள். அதனால், தங்கள் தொகுதியில் மீண்டும் போட்டியிடாமல், ஒதுங்கிக் கொள்வோம். இத்தனை வருடங்களாக பாடுபட்ட சேர்த்த சொத்துகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வோம் என்ற முடிவுக்கே அமைச்சர்கள் பலர் வந்துவிட்டனர்.


அதேசமயம், தொகுதி தங்களின் பிடிக்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற பேராசையால், தங்களுக்கு விசுவாசமான நிர்வாகிகளை களத்தில் இறக்கி விஷப் பரீட்சையில் ஈடுபட்டு பார்க்கலாம் என்ற மனநிலையில்தான் அமைச்சர்கள் இருக்கிறார்கள். இப்படிபட்ட மனநிலையில் உள்ள அமைச்சர்களைச் சுற்றி உள்ள அவர்களது விசுவாசிகளும் இதுதான் நேரம் என்று தேர்தல் களத்தில் குதிக்க போட்டி போடுகிறார்கள். அப்படிபட்ட ஒருவரிடம் பேசினேன். என்னய்யா, திமிங்கலங்களே ஒதுங்கிப் போகும் போது நெத்தி மீனுக்கு எப்படியா இவ்வளவு தைரியம் வந்தது. தேர்தலில் ஜெயிச்சிடுவியா என்று கேட்டேன். அதற்கு இடியென சிரித்துவிட்டு, அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துப் போய்விட்டேன்.
வாழவா, சாவா என்ற போராட்டத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலில் தன்னுடைய எதிரிகளை ஒட்டுமொத்தமாக வேட்டையாட தீவிரமாக இருக்கிறாராம். அவரின் குறிக்கோளை நிறைவேற்ற, அ.தி.மு.க. போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 கோடி ரூபாயாவது செலவழித்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வெறியோடு கொங்கு மண்டலத்து வி.வி.ஐ.பி.க்கள் களத்தில் சுற்றி வர ஆரம்பித்து விட்டார்களாம். தேர்தலில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, அந்த 20 கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கையாவது ஆட்டையைப் போட்டுவிடலாமே.. தேடி வரும் அதிர்ஷ்ட தேவதையை நாம் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். கட்சிக்காரனே காசு வாங்கிக்கிட்டுதான் ஓட்டுப் போடறான். எல்லாப் பணமும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதுதானே. மீண்டும் அமைச்சராகவேண்டும் என்ற வெறியோடு இருப்பவர்கள், பொன்னுக்குப் பதிலாக வைரங்களைக் கூட சிதற விடுவார்கள். நமக்கு அந்த வெறியெல்லாம் இல்லை. 40 நாட்களுக்கு பேப்பர், டி.வி, என விளம்பர வெளிச்சத்தில் இருக்கலாம். பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்து, கட்சிக்காரர்களிடமும், வாக்காளர்களிடமும் நல்ல பெயரை வாங்க முயற்சிக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் தேர்தலில் வெற்றி கிடைக்கட்டும். முடியைக் கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை, போனால் மயிறு என்று அசால்டாக கூறுகிறார் அந்த நிர்வாகி.
அ.தி.மு.க.வை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், எந்த நோக்கத்திற்கு தொடங்கினாரோ, அந்த நோக்கத்தில் 100 சதவிகிதத்தில் 10 சதவிகிதம் கூட இன்றைக்கு இல்லை. எல்லோருக்கும் பணமே பிரதானம். அடிமட்ட தொண்டர்கள் முதல் தலைமையின் உச்சியில் இருப்பவர்கள் வரை அனைவருக்குமே பணம்தான் குறி. இப்படி அ.தி.மு.க. எனும் உடலே முழுமையாக கெட்டுப் போயிருக்கிறது. என்னத்தைச் சொல்ல.. இப்படி விரக்தியோடு பேசிய அந்த அ.தி.மு.க. முன்னணி தலைவர் மனக்குமறலோடு பேசியதோடு, ஓரிரு நிமிடங்கள் ஓடும் வீடியோவையும் நமது வாட்ஸ் அப்புக்கு ஃபார்வேர்டு செய்தார். அவரின் மனக்காயங்களுக்கு மருந்து தடவுவதறகும், அவர் தந்த வீடியோ உலகம் முழுவதும் பரவட்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் இந்த செய்திக் கட்டுரை…