Fri. Nov 22nd, 2024
             தமிழக பாஜக-வின் கே.டி.ராகவன் மீது டிஜிபி  அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி புகார் அளித்துள்ளார். பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் கே.டி.ராகவன் பாஜக மகளிர் நிர்வாகிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக இன்று காலை வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அரை நிர்வாண மாக வாட்ஸ்அப் கால் மூலம் பேசும் கேடி ராகவன், எதிர்முனையில் உள்ள பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்.. இதேபோன்று மாநிலம் முழுவதும் பல பெண் நிர்வாகிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.. 
இதனையடுத்து பாஜக. வில் தான் வகித்த அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக கேடி ராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று மாலையில் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் கேடி ராகவனுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அதில், பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேடி ராகவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ட
 கொண்டுள்ளார். 

கரூர் எம்.பி. ஜோதிமணி வழங்கியுள்ள புகார் மனுவின் முழு விவரம் இதோ….

பெறுநர்:
திரு சைலேந்திரபாபு இ. கா.ப,
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்,
சென்னை.

வணக்கம்,
பொருள் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் மீது பாலியல் குற்றத்திற்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக.

பாஜக மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் என்பவரின் பாலியல் அத்துமீறல் தொடர்பான ஆபாச வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது.

இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர் .

சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் மீது ,அதே கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி பொதுச் செயலாளர் திருமதி காயத்ரி ,கலிவரதன் தன்னை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாகவும்,ஏமாற்றி பணம் பறித்ததாகவும் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் பேசும் ஆடியோவும் வெளியானது. அதில் பாதிக்கப்பட்ட திருமதி.காயத்திரியின் துயரை ,கண்ணீரை தமிழகமே கேட்டது.

அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய வித்யா பரிஷத்தின் தலைவர் சண்முகம் சுப்பையா அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த ஒரு பெண்ணிடம் ஆபாசமாகவும் ,பாலியல் வக்கிரத்துடனும் நடந்துகொண்ட வீடியோ தமிழகத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்பொழுது தன்னை கடவுள் பக்தர்,தனது கட்சியே கடவுளை காப்பாற்ற வந்த கட்சி என்று பொய் பேசி,ஊரை ஏமாற்றிவந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுசெயலாளர் கே.டி. ராகவன் ,பூசை அறை அருகில் நின்றுகொண்டு,ஒரு பெண்ணிடம் தகாத வகையில் ஆபாசமாக பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டுள்ளார்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் தலைவர்களை தொடர்ந்து காப்பாற்றி வருவது மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை ஊக்குவித்தும் வருகிறது. கலிவரதன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வேட்பாளரானர். சண்முகம் சுப்பையா தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மதுரையில் இன்னும் துவங்கப்படாத எயம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினராக மாண்புமிகு .நரேந்திர மோடி அரசால் நியமிக்கப்பட்டார்.

அன்று ஆட்சியில் இருந்த அதிமுக, பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகப் பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இந்த குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு மூடி மறைத்துவிட்டது.

பாஜக தலைவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் திரு. எடப்பாடி பழனிசாமி அரசால் மிரட்டப்பட்டார்கள். பாலியல் புகார்களை திரும்பப் பெறுமாறு அழுத்தம் தரப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக , பிஜேபி அரசுகளின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும்,அராஜகத்திற்கும், மிரட்டலுக்கும் பயந்து புகார்களை திரும்பப் பெற்ற அவலமும் நடந்தேறியது.

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ,அதிமுக தலைவர்களால் கொடுமையான பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டனர்.இந்த வழக்கு ஒன்றிய பாஜக அரசின் கீழ் இயங்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் இன்று வரை எவ்வித தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெயரளவிற்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்றைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு இந்த கொடுமையான பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் பரவலாக மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் அதிகார பலத்தோடு இன்னும் வெளியில் தான் இருக்கிறார்கள்.

அதிமுகவின் பாலியல் குற்றங்களை பாஜகவும், பாஜகவின் பாலியல் குற்றங்களை அதிமுகவும் தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது.

தொடர்ந்து தமிழ்நாட்டு சகோதரிகள் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த கொடும் பாலியல் குற்றவாளிகளால் பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டு வருகின்றனர். தங்களது மானத்திற்கும்,குடும்பத்தினரின் உயிருக்கும் பயந்து பல சகோதரிகள் உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கி,வேதனைப்பட்டு வருகிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறையின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மீறி பாதிக்கப்பட்டு,புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியே சொன்ன அவலமும் நிகழ்ந்தது. இது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கையில்லாமல் வெறென்ன?

காஷ்மீரில் எட்டு வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பிஜேபியின் அமைச்சர்கள் தேசியக்கொடியேந்தி ஊர்வலம் போன அவலத்தையும் இந்த நாடு பார்த்தது.

உத்திரப்பிரதேசத்தில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் ஒரு சிறுபெண்ணை பல ஆண்டுகளாக கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்து,பாதிக்கப்பட்ட குடும்பம் புகார் அளித்ததும் ,அந்தப் பெண்ணின் முதுகெலும்பை முறித்து அந்த குடும்பத்தையே கொலை செய்ததை மத்திய ,மாநில பாஜக அரசுகள் வேடிக்கை பார்த்ததைப் பார்த்து இந்த தேசமே அதிர்ச்சியில் உறைந்தது.

இதுபோல பல பாஜகாவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் சமூகத்திற்கும்,பெண்களுக்கும் கடும் அச்சுறுத்தலாக வெளியில் உலவிக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்த அவலம் நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

பாரதிய ஜனதா கட்சியின் பொதுசெய்லாளர் கே டி ராகவன் உள்ளிட்ட பாஜக,அதிமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்யவேண்டும்.
நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும்.

அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் பெண்களாகிய நாங்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் தலைநிமிர்ந்து நடக்க முடியும்.

கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றங்கள் உள்ளிட்ட , கொடுமையான பாலியல் வண்புணர்வு குற்றங்களையும், அதிமுக, பிஜேபி அரசுகளால் பாதுகாக்கப்பட்ட பாலியல் குற்றவாளிகளையும் ,இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்கிற உத்திரவாதத்தை, நம்பிக்கையை இந்த அரசு தமிழக மக்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறோம்.

நன்றி

இப்படிக்கு
திருமிகு.செ.ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்

One thought on “கே.டி.ராகவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி புகார்…”

Comments are closed.