கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். டூபாக்கூர் பிரமுகரான இவர், அகில் இந்திய அளவில் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி, தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதையே வாடிக்கையாக கொண்டிருப்பவர்.
இவர் மூலம்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டிருந்த போது, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக, டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் காவல்துறையினர் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர்.
ஆனால், போலீஸ் விசாரணையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றும், சுகேஷ் ஒரு மோசடி பேர்வழி என்றும் தெரியவந்தது.
இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற மோசடி நிகழ்வுகளில் ஈடுபட்டு சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருதாக மத்திய அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பெங்களுரில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவருக்கு சொந்தமாக உள்ள பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவில் இருந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று நண்பகல் இந்த சோதனை முடிவுக்கு வந்தது. சென்னை பங்களா வீட்டில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மயங்கி விழாத அளவுக்கு சுகேஷ் சந்திரசேகர் பங்களாவில் 20க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. டிராவல்ஸ் கம்பெனியில் இருக்கும் அளவுக்கு இத்தனை கார்களை ஒரே இடத்தில் கண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அதன் பிறகு அவரின் பங்களாவை சல்லடை போட்டு விடிய விடிய சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணமும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.