தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையென்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியாரின் இந்தக் கவிதை வரிகள் ஆயிரமாயிரம் அர்த்தங்களை அள்ளிக் கொடுத்தாலும், இந்த வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் உள்ளார்ந்த அர்த்தங்கள் பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும்கூட, சோதனைமிகு காலகட்டத்தில் பெரும்பான்மையானனோரால் உச்சரிக்கப்படும் ஒரு வரி இந்தக் கவிதையில் உண்டு. அதுதான், பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற வரிகள்தான், அது. இந்த வரிக்கு உதாரணமாக பொருள் வடிவில் இன்றைக்கு காட்டவேண்டுமென்றால், அவர் சாட்சாத் எடப்பாடி பழனிசாமிதான்.
2017 பிப்ரவரி மாதத்தில் நம்பிக்கைக்குரிய சகோதரராக விளங்கிய எடப்பாடி பழனிசாமிதான், இந்த நான்கு ஆண்டுகளில் பிரமாண்டமாக அசுர வளர்ச்சிப் பெற்று வளர்ந்து நிற்கிறார். அரசாட்சியை நிலைநிறுத்த நல்லவனாக இருந்தால் நாக்குதான் வலிக்க வேண்டும். வல்லவனாகவும், சாம, தான, பேத, தண்டம் என அனைத்தையும் பயன்படுத்தினால்தான் அவன் ராஜதந்திரியாக நிலைத்து நிற்க முடியும் என்ற ஆதி பாடத்தை எடப்பாடி பழனிசாமி முழுமையாக கற்று தேர்ந்திருக்கிறாராம்.
அற்ப ஆயுசில் முடியப் போகவிருந்த அ.தி.மு.க. ஆட்சியை 2017 முதல் 2021 மே மாதம் வரை கட்டி காப்பாற்றி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை, அவரது எதிரிகளே மறக்க மாட்டார்கள். மறுக்கவும் மாட்டார்கள். உட்கட்சியில் எதிரிகள், துரோகிகள், கூட இருந்தே குழிப்பறித்தவர்கள், அருவி போல கொட்டிய அவமானங்கள் என ஆயிரமாயிரம் இக்கட்டுகளை எல்லாம் கடந்தும், துரோகங்களை, சோதனைகளை,வேதனைகளைப் பார்த்தும், அடிபட்ட புலியாக இன்று விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள். ஆட்சி அதிகாரம், தலைமைப் பண்பு என அரசாட்சிக்கு தேவையான அனைத்தையும் கற்று தேர்ந்தவராக காட்சியளிக்கும் எடப்பாடி பழனிசாமியை, அவரே துறவி போல ஒதுங்கி நின்றாலும் அவ்வளவு எளிதாக அனுமதிக்காத பெருங்கூட்டம் அவரைச் சுற்றி இருக்கிறது. தங்களின் சுயநலத்திற்காகவும், சுகபோகங்களுக்காகவும் அவரைபயன்படுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல, அந்தக் கூட்டம் தயாராக இருக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டின் சாபக்கேடு. அதில், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகார வர்க்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள், கண்ணியத்தையும், தர்மத்தையும் போதிக்கக் கூடிய நீதித்துறை மாண்புகள், எல்லாவற்றையும் துறந்த மடாதிபதிகள், பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ள தொழிலதிபர்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள், ஜிப்பா வாலாக்கள் என பெருங்கூட்டம் எடப்பாடியாரைச் சுற்றி இருக்கிறது. அவர்கள் நினைக்கும், சிந்திக்கும், எதிர்பார்க்கும் வேடங்களைதான், நித்தம்நித்தம் அணிந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள், அவர் பிறந்த மண்ணைச் சேர்ந்த ஆரம்ப காலத்து நண்பர்கள்.
ஆட்சி அதிகாரத்தின் அத்தனை சுகபோகங்களையும் கடந்த பத்தாண்டுகளாக அனுபவித்து வரும் பெருங்கூட்டம், அவற்றையெல்லாம் இழக்க தயாராக இல்லை என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எந்த ஆயுதத்தை ஏந்தியிருக்கிறார்களோ, அதையே தானும் கையில் எடுத்து, தனக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.வுக்கும் எதிரியாக நிற்கும் தி.மு.க என்ற அசுர சக்தியை மட்டுமல்ல, கூட இருந்து கொண்ட துரோகம் இழைப்பவர்களையும் (இ.பி.எஸ். பார்வையில் ஓ.பிஎஸ் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் சிலர் ) மட்டுமல்ல, முன்னாள் காட் ஃபாதரான சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி ராஜ்யத்தையும் வீழ்த்தி எறியவும் மனதளவில் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள், அ.தி.ம.க. முன்னணி தலைவர்கள் பலர். கடந்த பல நாட்களாக நள்ளிரவைத் தாண்டியும், நெருக்கமான சிலரோடு மனம் திறந்து பேசுகிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதை கேட்கும் எதிரிகளுக்குக் கூட அவர் மீது பச்சாதாபம் ஏற்பட்டு விடுகிறதாம். அதை அவர்கள் விவரிக்கும் பாணியே அலாதியானது..
“இப்போது போர்க்களத்தில் நிற்கிறேன். இன்றைய ஆட்சியின் முதல்வன் நான்..இந்த பீடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நான் நல்லவனாக, நன்றிக்கடன் பட்டவனாக, நட்பைப் பேணும் நாகரிகமானவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனகாகவும் இருக்க வேண்டும். என்னை சுற்றி இருக்கும் இந்தக் கூட்டம், நான் நல்லவன் என்பதற்காக கிடைத்தது இல்லை. முதலமைச்சர் என்ற பதவியால்தான் கிடைத்து இருக்கிறது. ஆகவே, இந்த பதவிக்கு தகுதியுடையவனாக இந்த நான்கு ஆண்டுகளில் என்னை நான் வார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக, தனியொருவனாக நான் மட்டுமே வலியை அனுபவித்தேன். இப்போதும் நான் அவமானங்களை தாங்கிக் கொண்டுதான் நடமாடுகிறேன். ஆனால் எனக்கு அடையாளத்தைக் கொடுத்த அ.தி.மு.க.வை விட, எடப்பாடியார் என்ற பெயர் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கச் செய்தததில் என்னுடைய உழைப்பும், சிந்தனையும், செயல்பாடுகளும் 100 சதவிகிதம் இருக்கிறது. அதற்கு வேறுயாரும் சொந்தம் கொண்டாட முடியாது
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நொடிக்கு நொடி மிரட்டிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வாக இருக்கட்டும், தூங்கி எழுந்தால் தலையில் இடி விழுகிற மாதிரி, தி.மு.க. செய்யும் அரசியலாகட்டும், கூட்டணியை வலுப்படுத்துகிறோம் என்று கூறி இணைந்த மற்ற அரசியல்கட்சித் தலைவர்களாகட்டும், இவர்களில் ஒருவர் கூட, என்னை விட மேலானவர்கள் என்றோ, நல்லவர்கள் என்றோ, நீதிக்கு அஞ்சுபவர்கள் என்றோ, தர்ம வழியிலேயே நடப்பவர்கள் என்றோ தமிழக மக்கள் சொல்லி விட மாட்டார்கள்.
எனது நான்கு ஆண்டு கால ஆட்சியைப் பற்றி பொதுமக்களின் தீர்ப்பையும், அம்மா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. வை வழிநடத்தியதில் நான் சோரம் போய்விடவில்லை என்பதை பற்றியும் அ.தி.மு.க. தொண்டர்களின் தீர்ப்பை மட்டுமே நான் எதிர்ப்பார்க்கிறேன். மற்றவர்களைப் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 2017 தர்மயுத்தம் போன்ற ஒரு காட்சி ஏற்பட்டுவிடாதோ என்று பலர் கற்பனையில் மிதக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடம் கொடுத்து விட மாட்டேன். போர்க்களத்தில் கடைசி வீரனைப் போல, போராடும் குணம் எனக்கு இருக்கிறது. டெல்லியில் இருந்து மிரட்டல் வந்தாலும், மன்னார்குடியில் இருந்து பிரம்மாஸ்திரங்கள் வந்தாலும், கோபாலபுரத்தில் இருந்து கண்ணிவெடிகள் என் உயிரையே காவு கேட்டாலும், நான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை என் கடந்த காலம் முக்கியமில்லை. என் முன்னே நீண்டு நெடிதாக காட்சியளிக்கும் எதிர்காலம்தான் முக்கியம். பதவி வெறியன், நன்றி கெட்டவன், கொள்கையற்ற கூட்டத் தலைவன் என்று எப்படி வேண்டுமானாலும் வசை படட்டும். அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னுடைய ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கைக்கும் நீதி வேண்டும். அதற்கு விடைகாண தமிழக மக்களை நோக்கி கை கூப்புகிறேன். அவர்கள் சொல்லட்டும் தீர்ப்பு. அதற்கு தலைவணங்குகிறேன். வெட்டி நாட்டாமைகள் சொல்லும் தீர்ப்புக்கு எல்லாம் கட்டுப்பட, நான் தயாராக இல்லை..எனது பயணத்திற்கு தடையாக யார் வந்தாலும் இடறிவிட்டு இல்லை, எட்டி உதைத்துவிட்டு செல்லவும் நான் தயாராகவே இருக்கிறேன். அம்மா சொன்னதைப் போல, அ.தி.மு.க. ஆட்சியை நூறு ஆண்டுகள் தொடர வைக்க முடியும். அதற்கு என் போக்கில் விட வேண்டும். தடைக் கற்கள் போட்டால், கற்களை தானே பார்ப்பேனே தவிர, அதைப் போட்டவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட யோசிக்க மாட்டேன். தடைக் கற்களை, படிக்கற்களாக மாற்றும் கலையை நான் கற்றிருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். தடைகளை உடைத்து எறிந்து முன்னே செல்வதுதான் போர் வீரனின் கம்பீரம். அதிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்…. இப்படியாகதான் நள்ளிரவு நேரங்களில் பொங்கி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.
கண் முன்னே போர்க்களம் தெரிகிறது. கீரிடத்தை தலை சுமக்குமா… தலையை கிரீடம் சுமக்குமா. காலத்தின் கையில் விடை..