மன்னார்குடியில் பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
தமிழ்நாட்டில் தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு நெல் சாகுபடி முழுமையும் அழிந்து விடுகிற நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்காக மறைந்த பிரதமர் விபி.சிங் தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.
மோடி அரசு காப்பீட்டு திட்டத்தில் தனியாரை அனுமதித்ததால் வணிக நோக்கத்தோடு செயல்படும் நிலை ஏற்பட்டு முழுமையாக விவசாயிகள் பயன் பெற முடியாத நிலை தொடர்ந்தது.இதனால் தமிழக அரசு தமக்கென தனி காப்பீடு திட்டத்தை துவங்கிட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகிறோம்.
மத்திய, மாநில அரசுகள் காப்பீடு செய்வது, இழப்பீடு பெறுவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வழிமுறைகளை கண்டறியாமல் காலங்கடத்தியது. தற்போது காப்பீடு திட்டத்தையே தமிழக அரசாங்கம் நெல்லுக்கு ரத்து செய்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
காப்பீடு குறித்து சட்டமன்றத்திலும், விவசாயிகளிடம் விவாதிக்காமல் சட்டமன்றம் நடைபெறும் நிலையில் வேளாண் துறை செயலாளர் மூலம் கொள்கை நிலை மாற்றம் குறித்து அறிக்கை வெளியிடுவது மரபை மீறிய செயலாகும்.
மேலும் 2021-22 சாகுபடி பருவத்திற்கு நெற்பயிர் காப்பீடு செய்ய தடை விதித்திருப்பதும்,அதற்கு பேரிடர் காலத்தில் பாதிப்பு ஏற்படுமேயானால் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசின் கொள்கைப்படி விவசாயி தனது நிலத்திற்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறுவது உரிமையாகும் என்ற நோக்கத்தில் சட்டமாகக் கொண்டு வரப்பட்ட திட்டத்தை தமிழக அரசு தன் விருப்பத்திற்கு நெற்பயிர் காப்பீடு செய்வதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது தனது பொருப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும். இதன் மூலம் தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. இச்செயல் தமிழக விவசாயிகளை மீண்டும் தற்க்கொலை நிலைக்கு தள்ளிவிடும் செயல் ஆடும்.
தமிழக அரசு கூற்றுப்படி காப்பீடு திட்டத்திற்கு மாற்றாக பாதிப்புக்கு ஏற்ப பேரிடர் நிதியில் இழப்பீடு கொடுப்பது உண்மையாக இருக்குமேயானால், இடுபொருள்
இழப்பீட்டிற்கும், அறுவடை இழப்பீடு வழங்குவது குறித்தும், விவசாயிகளின் பங்களிப்பு குறித்தும் விரிவான விவாதத்திற்கு உட்படுத்தி உரிய விளக்கம் அளித்திருக்க வேண்டும்.அவசர கோலத்தில் அறிக்கை விடுவதால் விவசாயம் அழிவதற்கு மற்றுமே வழிவகுக்கும்.
2020- 21 க்கானகாப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு
தெளிவுபடுத்த வேண்டும். காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையில் மத்தியஅரசின் பங்கீட்டில் 16 சதவீதத்தை குறைத்து கொண்டதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு இழப்பீடு வழங்குவது குறித்தான நடவடிக்கைகள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கிறது.
மத்திய அரசு அறிவிப்பை ஏற்றுக்கொண்டுதான்சென்ற ஆண்டு இப்கோ டோக்கியோ நிறுவனத்தோடு தமிழக அரசு போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விவசாயிகளிடம் பிரீமியம் பெற்றுள்ளனர்.இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது.
கடந்த ஜனவரி மாதம் பெய்த பேரழிவு பெரும் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு இடுபொருள் இழப்பீட்டை தமிழக அரசு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கி வருகிறது.காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு இப்போ டோக்கியோ நிறுவனம் மூலம் பெற்றுத்தரப்படும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசல் உறுதியளிக்கப்பட்டது.
தற்போது புதிதாக பொறுப்பேற்ற முக,ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இழப்பீடு வழங்குவது குறித்து வாய் திறக்க மறுப்பது, நம்பிய விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கும் செயலாகும்.காப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும்,
எனவே காப்பீடு குறித்து தமிழக அரசாங்கம் திறந்த மனதோடு விவசாயிகளோடும், சட்டமன்றத்திலும் விவாதிக்க முன்வரவேண்டுமென வலியுறுத்துகிறேன். மறுக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இதனை தங்கள் ஊடகம் பத்திரிகையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்…