Sun. Nov 24th, 2024

75 வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றினார். அதன் விவரம் இதோ:

இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்க, உயிரையும் ரத்தத்தையும் வாழ்க்கையும் அர்ப்பணித்த இந்தியர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்.

கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த நான் தமிழக மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.17,000த்தில் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சுக் காற்றை கொண்டு கட்டப்பட்டது தான் நினைவுத் தூண்.

சுதந்திர தின தூண் வெறும் கல்லாலும் சிமெண்டாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல; விடுதலைப் போராட்ட வீரர்களின் இரத்தத்தால், எலும்பால், சதையால் உருவாக்கப்பட்டது.

கொரோனா எதிர்ப்பு போரில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி வீணடிக்கப்பட்ட நிலையை மாற்றி கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளோம்.

சமூகம்-அரசியல்-பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் தமிழ்நாடு ஒருசேர வளர வேண்டும் என்பதுதான் நம்முடைய கனவு; அதனை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு முதல்வர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார்..

காவல்துறை அணிவகுப்பு மரியாதை…

தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்கு முன்பாக காவல்துறை வாகனத்தில் சென்று காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நினைவுத்தூண் திறந்து வைப்பு….

சுதந்திர தின விழா நிறைவுப் பெற்றதையடுதது, சென்னை பல்கலைக்கழகம் அருகில் 75 வது சுதந்திர தின விழா நினைவுத்தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நினைவுத் தூணை சுற்றிப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முகப்பு பகுதியில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.