தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தின விழா, திருக்குவளையில் அவரது பிறந்த இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் தனது நிர்வாகிகளுடன் நேரில் சென்று மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது..
கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் புகழ் அஞ்சலி செலுத்துவதை விவசாயிகள் பெருமையாகக் கருதுகிறோம். விவசாயிகளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர், விவசாயிகளுக்கு பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறைவேற்றியவர். காவிரிக்கு நடுவர் மன்றம் அமைத்து தீர்வு கண்டவர்.அவர் வழியை பின்பற்றி புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தளபதி மு க ஸ்டாலின், கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலக தமிழர்களே வியர்ந்து பார்க்கும் வகையில், இந்திய அரசியல் ஆளுமைகள் அதிர்ச்சியோடு எதிர்பார்க்கும் நிலையில் முதன் முதலில் தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.. இதனை போற்றும் வகையில் மூன்றாம் ஆண்டு கலைஞரின் நினைவு நாளில் பெருமையாக கருதுகிறோம்.
மத்திய அரசு வேளாண்மையில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவெடுத்து செயல்படுகிற போது விவசாயிகளுக்கான அரசு தமிழக அரசு என்று நிரூபிக்கும் வகையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டு வருவது மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கிறோம், அதனை இன்றைய புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு நன்றியுடன் நினைவு கொள்கிறோம்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், கௌரவத் தலைவர் செல்வராஜ், கீழையூர் ஒன்றிய செயலாளர் அஜீஸ், தலைவர் சபா, வெங்கடேசன், த கோட்டூர் ஒன்றிய தலைவர் எஸ் வி சேகர் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கச்சனம் தவமணி, மன்னார்குடி மனோகரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்