Fri. Nov 22nd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்ற நாள் முதலாக, கோயில் சொத்துகளை மீட்பதில் தொடங்கி, வழிபாடுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் வேகமெடுத்தள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மாநிலத்தில் உள்ள பிரபல கோயில்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, முனைப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கப்படும் என்றும் அர்ச்சகர்களாக பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது உள்பட பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்தார்.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுதொடக்கி வைத்தார். பல்லாண்டுகளுக்குப் பிறகு தமிழில் வழிபாடு நடைபெற்றதால், அங்கிருந்த பக்தர்கள் பரவசத்துடன் மனமுருக வழிபட்டனர்.

இதேபோல், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை குமரக்கோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இன்று நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு, அங்குள்ள பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது அறநிலையத்துறை ஆணையாளர் திரு.குமரகுருபரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், சென்னை தங்கசாலை பைராகிமடம் அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் வளர்ச்சி நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ஆவடியில் பைராகிமட கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.விரைவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கோயில்களின் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அந்த இடங்கள் அறம் வளர்க்கும் பணிக்காகவும், திருக்கோயில்களின் வருவாயை பெருக்கவும் பயன்படுத்தப்படும். விரைவில் திருக்கோயில்களின் வரவு, செலவு கணக்கு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.