Sat. May 18th, 2024

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்று கலைஞர் கருணாநிதியின் திரு உருவ படத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது.

படத்திற்குக் கீழே ’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியது:

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.

உண்மையில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்றதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஜனநாயாக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டசபை மிகவும் சிறப்பான அமைப்பாக உள்ளது.

பல முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இந்த சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நம் நாடு இந்த ஆண்டு பல துறைகளில் சாதணை படைத்துள்ளது.

தமிழக மக்களின் சிறப்புக்களையும் பெருமைகளையும் திறமைகளையும் மகாகவியின் பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசினார் குடியரசுத்தலைவர், “மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம் வான அளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்று குறிப்பிட்டார் குடியரசுத்தலைவர்.

தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் பெரும்பங்காற்றியவர் கருணாநிதி என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், தனது புரட்சிகரமான கருத்துக்களால் சமூக சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.

அவரது உருவப்படத்தை நூற்றாண்டு விழா காணும் இந்த சட்டசபையில் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.

இந்த சட்டசபையில் மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், எம்ஜிஆர், ஜெயலலிதா,வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

16வது தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.