Sat. Nov 23rd, 2024

வி. கே. சசிகலா வருகையொட்டி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி…

இப்படி தான் வி. கே. சசிகலா ஆதரவுக் கூட்டம் உற்சாகமாக பேசிக் கொண்டு இருக்கிறது..

வி. கே. சசிகலாவை கண்டு எதிர்க்கட்சி தலைவர் – அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறாரா? இரண்டு பிரபலங்களும் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, செய்தி சேகரிக்கும் பணிக்காக அங்கே இருந்த நடுநிலை நாளிதழின் மூத்த ஊடகவியலாளரிடம் பேசினோம்.. செய்தியை பதிவு செய்யும் அவசரத்தில் இருந்த போதும் நிதானமாக பேசினார், மூத்த ஊடகவியலாளரான நெருங்கிய நண்பர்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்…இன்று காலையில் இருந்தே அவர் காலமாகிவிட்டதாக வதந்தி பரபரப்பப்பட்டது..அந்த வதந்திக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது..அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், காலையிலேயே மருத்துவமனைக்குச் சென்று உடல்நலம் விசாரித்தார்.

அதேநேரத்தில், அபாய கட்டத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் உடல்நிலை குறித்து அங்கிருந்த அதிமுக முன்னணி நிர்வாகிகளிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்து வந்த எடப்பாடி பழனிசாமி பிற்பகலில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தார்..இந்த தகவலை ஊடகங்கத்தினரும் உறுதிப்படுத்திக் கொண்ட செய்தியாளர்கள், வாட்ஸ் அப் குரூப்பில் இ.பி.எஸ்., மருத்துவமனை வருவதாக தொடர்பான தகவலை பரவவிட்டனர். .

மாலையில் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வரும் நேரத்திற்கு முன்பாகவே அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று காத்திருந்தோம்.. இயல்பான மன நிலையிலேயே வந்த எடப்பாடி பழனிசாமியை சென்னை மாவட்ட அதிமுக பொறுப்பாளர்களும் முன்னாள் எம். எல். ஏ. க்களான விருகம்பாக்கம் வி. என். ரவி, தி. நகர் சத்யா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் வரவேற்றனர்.. இதனையடுத்து மருத்துவமனைக்கு உள்ளே சென்று மதுசூதனனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இ.பி.எஸ்., அவரது உறவினர்களையும் சந்தித்து சிகிச்சை முறை குறித்து கேட்டுக் கொண்டிருந்தார்..

அந்த நேரத்தில் மருத்துவமனையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.. வாட்ட சாட்டமான பலர் வந்து மருத்துவமனையில் பதற்றமாக நடமாடினார்கள்.. சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவசர அவசரமாக தங்கள் வாகனத்தில் ஏறி புறப்படுவதற்கு தயாராகிய போது எடப்பாடி பழனிசாமியும் இறுக்கமான முகத்தோடு வந்து காரில் ஏறினார்.. அந்த நிமிடத்திலேயே அதிமுக கொடி கட்டிய மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா பயன்படுத்தி காரில் சசிகலா மருத்துவமனை நுழைவு பகுதிக்கு வந்தார்..

அவரின் காரும் எடப்பாடி பழனிசாமி காரும் எதிரும் புதிருமாக பயணிக்கும் நிலை ஏற்பட்டது.. அப்போது இபிஎஸ். ஸின் பாதுகாப்பு அதிகாரிகள், சாமர்த்தியமாக செயல்பட்டு சசிகலாவின் காரை மறிக்கும் வகையில் தங்கள் வாகனத்தை நிறுத்தி இபிஎஸ் கார் புறப்பட்டு செல்ல வழி ஏற்படுத்தினர்..

மேலும் சசிகலா வந்திருக்கும் தகவலையும் காரில் காத்திருக்கும் தகவலையும் தனது காரில் இபிஎஸ் ஏறுவதற்கு முன்பாகவே சத்யாவும் வி. என். ரவியும் காதோடு காதாக சொல்ல ,இபிஎஸ்.ஸின் முகம் சிவந்து விட்டது.. தனக்கு வணக்கம் தெரிவித்த கட்சி நிர்வாகிகளுக்கு பதில் வணக்கம் சொல்லாமலேயே புறப்பட்டு விட்டார்.. எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பாதுகாப்பு படை இல்லாமல் இருந்திருந்தால், வி.கே. சசிகலாவின் கார், இ.பி.எஸ்.ஸின் காரை மறித்து அவருக்கு எந்தளவுக்கு தில் இருக்கிறது என்பதை சின்னம்மா சோதித்துப் பார்த்திருப்பார்.

இ.பி.எஸ்.ஸுடன் மோதும் எண்ணத்தோடுதான் வி.கே.சசிகலா வந்திருக்கிறார் என்பதை எப்படி யூகிக்க முடிகிறது என்று சொல்கிறேன் என்றால், தந்தி டிவிக்கு சசிகலா கொடுத்த பேட்டியின் போது அவர் சொன்ன ஒரு நிகழ்வை வைத்துதான் கூறுகிறேன்.

எம்.ஜி.ஆர். மரணமடைந்த போது, ஜெயலலிதா சென்ற காரை ராமாவரம் தோட்டத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் கேட்டை இழுத்து மூடியபோது, அந்த கேட்டையே அடித்து தூக்கு என்று சொன்னேன் என்று வி.கே.சசிகலாவே சொல்லியிருக்கிறார். மோதிப் பார்ப்பது என்பது வி.கே.சசிகலாவுக்கு பிறவிக்குணமாக இருப்பதாக, அவரது பேட்டி மூலம் உணர்ந்து கொள்ள முடிவதால், இன்றைக்கும் அதுபோன்ற ஒரு அசாதாரண நிகழ்வு, அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடும். ஆனால், அதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காரணமாக, வி.கே.சசிகலாவிடம் இருந்து தப்பித்துக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

இன்றைய தேதியில் வி.கே.சசிகலாவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது எடப்பாடி பழனிசாமிதான். அதனால்தான், அவர் மருத்துவமனைக்கு வரும் நேரத்தை தனது விசுவாசக் கூட்டம் மூலம் அறிந்துகொண்டே அவரும் அங்கு வந்திருக்கிறார்.. உண்மையிலேயே இ.மதுசூதனின் உடல்நலத்தின் மீது அவருக்கு அக்கறை இருந்திருக்குமானால், காலையிலேயே மருத்துவமனைக்கு வந்து மதுசூதனனின் உடல்நிலை குறித்து வி.கே.சசிகலா கேட்டறிந்திருப்பார்.

வி.கே.சசிகலாவின் திடீர் வருகையால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, உடல் முழுவதும் பரவியிருந்த சினத்தில் இருந்து விடுபட பலமணிநேரம் ஆகிவிட்டதாம். வி.கே.சசிகலாவின் அரசியல் குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு, அதிமுக.வுக்கும் வி.கே.சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, காரில் அதிமுக கொடி கட்டி சென்றது ஏற்புடையதல்ல என்று சொல்லும் அளவிற்கு தூண்டிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதுவரை வெறும் ஆடியோக்களை மட்டுமே வெளியிட்டு இ.பி.எஸ். கூட்டத்திற்கு கிலி ஏற்படுத்தி வந்த வி.கே.சசிகலா, இ.பி.எஸ். கூட்டத்தோடு மோதி பார்க்க தயாராகி விட்டார் என்பதை இன்றைய நிகழ்வின் மூலம் பகிரங்கமாக தெரிவித்துவிட்டார் வி.கே.சசிகலா.

நேருக்கு நேர் சந்திக்க வி.கே.சசிகலா தயாராகிவிட்ட போது, அதே பாணியில் அவரை எதிர்கொள்ளும் துணிச்சல், தைரியம் இ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்களுக்கு இருக்கிறதா? இனிதான் இ.பி.எஸ்.ஸுக்கு அக்னிப் பரீட்சை காத்திருக்கிறது.

இன்றைய நிகழ்வை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தோடு பொருத்தி பார்த்தால் என்ன காட்சிகள் அரங்கேறியிருக்கும். வி.கே.சசிகலாவைப் பார்த்து ஓ.பி.எஸ். பதற்றமே ஆகியிருக்க மாட்டார். வழக்கமான அவரின் ரெடிமேட் புன்னகையோடு, வி.கே.சசிகலாவுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு கடந்து போயிருப்பார். ஓ.பி.எஸ். ஸை டார்கெட் செய்யவில்லை என்பதற்கு இன்றைய நிகழ்வே சாட்டி. காலையில் ஓ.பி.எஸ்., மருத்துவமனைக்கு வந்த போது வி.கே.சசிகலா வரவில்லை. எப்படியும் இ.பி.எஸ். பொறியில் சிக்குவார் என்றே இன்றைக்கு காத்திருந்திருக்கிறார் வி.கே.சசிகலா. அவர் விரித்த வலையில் தானாக போய் விழுந்து மாட்டிக் கொண்டிருக்கிறார் இ.பி.எஸ்.

இன்றைய டி.20 மேட்ஜில் வி.கே.சசிகலாவே ஸ்கோர் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி சொதப்பல் செய்ததுடன் பதற்றமாகிறார் என்பதையும் வெளிப்படையாக உணர்ந்து கொள்ள முடிந்தது என்று முடித்தார் ஊடக நண்பர்.

ஆக, மொத்தத்தில், ராஜமாதா என்று வி.கே.சசிகலாவை அழைத்துக் கொண்டிருக்கும் அவரது ஆதரவுக் கூட்டம், இன்றைய சசிகலாவின் ஒன்மேன் ஆர்மி படையைப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல அதிரடிகளை வி.கே.சசிகலா அடிக்கடி காட்டுவார் என்றும் சந்தோஷமாக கூக்குரலிடுகிறார்கள்.

நாளை முதல் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு நாட்களும் வி.கே.சசிகலா எனும் சக்தி, இ.பி.எஸ்.ஸின் கூடாரத்தை ஆட்டம் காண செய்யப் போகிறது என்கிறார்கள். எதிரணியினர் ஆட்டம் அதிரி புதிரியாக இருக்குமா, சொதப்புமா?

வான வேடிக்கைகள் காண தயாராக வேண்டியதுதான்….