திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகும்,
கொசஸ்தலை ஆறு வட ஆற்காட்டை நீர்பிடிப்புப் பகுதியாக கொண்டது. இதன் மொத்த நீளம் 136 கி.மீ ஆகும். சென்னை நகருக்குள் 16 கி.மீ ஓடும் இந்த ஆறு, ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து திருவள்ளூர், சென்னை வழியாக ஓடி எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது.
தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூர் அருகே சீமாபுரம் அணைக்கட்டு ஆகியவை மூலம் பாசனத்திற்கு பயன்படுகிறது. இதன் நீர்பிடிப்புப் பகுதி 3,757 சதுர கிலோமீட்டர், ஆற்றுப் படுக்கையின் அகலம் 150 முதல் 250 மீட்டர் வரை ஆற்றின் அதிகப்டச கொள்ளளவு வினாடிக்கு 1,25,000 கன அடி, சராசரி கொள்ளளவு 1,10,000 கன அடியாகும்,
இதேபோன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்ணித் மலை பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை அடைந்து அதன் வழியாக பழவேற்காடு பகுதியில் வங்கக்கடல் சென்று அடைகிறது.
ஆரணி ஆற்றின் மொத்த நீளம்,114.8 கிமீ ஆகும், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் 4,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
கொசஸ்தலை ஆற்றில் 2 தடுப்பணைகள், ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம், பாலீஸ் வரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தலா 5,000 கனஅடி தண்ணீர் மட்டுமே சேகரிக்க முடியும், இந்த ஆறுகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவை பொறுத்து 7 முதல் 12 டிஎம்சி தண்ணீர் வரை வீணாகச் சென்று கடலில் கலக்கிறது
இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளை காரணமாக கட்டாந்தரை யான, ஆரணி ஆற்றை அப்பகுதி இளைஞர்கள் மட்டைப்பந்து விளையாடும் மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை வழங்கிய பொக்கிஷத்தை உதாசீனப்படுத்தியதால்வெள்ளமாக புரண்டோடும் ஆற்று வழித்தடத்திலேயே நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பூமியில் உப்புநீர் அதிகரித்துவிட்டது..
இதன்காரணமாக மூன்று போகம் விளைந்த நிலத்தில் தற்போது ஒரு போகம் பயிர் செய்வதே கடினமாக இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்.
முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது லட்சுமிபுரம் அணைக்கட்டின் தடுப்பு சுவர்களில் செடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டு அதன், நீர் வெளியேற்றும் கால்வாயில் பாறைகள் சரிந்து காணப்படுகிறது இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அணைக்கட்டு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது..
மேலும் ஆற்றின் பல பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் முளைத்து வனம்போல் காணப்படுவதாலும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பொன்னேரி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஆற்றில் கொண்டுவந்து கொட்டப்படுவதால், குப்பை மேடுகள் அதிகமாகி ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் திடீர் குன்றுகள் உருவாகி விட்டன..
நீர் வரத்து துணைக் கால்வாய்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், நீரோட்டம் தடைப்பட்டு ஊருக்குள் பெருவெள்ளம் பாயும் ஆபத்து உள்ளது இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள் பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பாக தமிழக அரசு ஆரணி ஆற்றில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில் இரு ஆறுகளிலும் போதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும், ஆற்றின் நடுவே மழைநீரை சேகரிக்கும் வகையில் நூறு அடிக்கு ஒரு போர்வெல் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் நீர் வளத்துறை ஒன்றை தனியாக உருவாக்கியதிலும் அந்த துறையின் அமைச்சராக அரசியலிலும் அதிகாரத்திலும் பழுத்த அனுபவம் பெற்ற துரைமுருகனை நியமித்திருப்பதன் மூலமே நீர் வளத்தை எப்பாடாவதுபட்டு பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இருப்பது புரிகிறது.
முதல்வரின் கனவை, இலட்சியத்தை நிறைவேற்றி வைப்பாரா, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.. விவசாயிகளின் நீண்ட கால கண்ணீர் கானல் நீராக மாற வேண்டும்..