Mon. Nov 25th, 2024

சேலம் மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க, காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி), சேலம் மாநகர காவல் ஆணையர், சேலம் புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தனித்தனியாக ஸ்கெட்ச் போட்டு, பட்டாசு வெடிக்க தயாராகி விட்டதாக, சேலம் போலீஸ் தரப்பில் பகீர் கிளப்பப்படுகிறது.

சேலம் சரக டிஐஜி ஆக பொறுப்பு ஏற்றுள்ள மகேஸ்வரி ஐபிஎஸ், சத்தமில்லாம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட சேலம், நாமக்கல்,தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாடுகளையும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சமூக விரோதிகளின் பட்டியலையும் தயாரித்து வருகிறாராம். மிகவும் அபாயகரமான ரவுடிகளின் பட்டியலை தயாரித்து, மேல் நடவடிக்கைக்காக உயரதிகாரிகளின் அனுமதிக்காக அனுப்பி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் டிஐஜி மகேஸ்வரி என்று சந்தோஷமான மனநிலையில் நல்லரசுக்கு தகவலை தட்டிவிட்டார் சேலத்தில் உலாவரும் உளவுத்துறை அதிகாரி ஒருவர். அவரிடம் பேசினோம்.

டிஐஜி மகேஸ்வரி ஐபிஎஸ்.ஸின் அதிரடி திட்டத்தை விவரிக்க, விவரிக்க, விழிகள் விரித்தன.

டிஐஜி மகேஸ்வரி ஐபிஎஸ், பார்வைக்கு சாதாரணமாகதான் தெரிவார். ஆனால், அழுத்தமான அதிகாரி. சத்தமில்லாமல் சக்ஸஸ் பாயின்டுகளை அள்ளி குவித்துவிடுவார். ஏத்தாப்பூர் சோதனைச் சாவடியில் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி காட்டுமிராண்டிதனமாக அடித்ததில், முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரத்தை, ஊதி பெரிதாக்க சாதி அமைப்புகள் தயாராகி வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன், நிகழ்விடத்திற்கு விரைந்துச் சென்று, முருகனின் உறவினர்களுடன் பரிவோடு பேசி, சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு நிவாரண உதவிகள் காலதாமதமின்றி உரிய காலத்தில் கிடைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அவரின் அன்பான, ஆதரவான வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, முருகேசனின் உறவினர்கள் அமைதி காட்டியதால், சாதிய அமைப்புகளின் சதித்திட்டங்கள், ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டன.

டிஐஜி மகேஸ்வரி ஐபிஎஸ்.ஸின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உடனடியாக செயல்திட்டங்களை வகுத்து, அசம்பாவித நிழ்வுகள் எதுவும் தலைகாட்டிவிடாமல் துரிதமாக செயல்பட்டதில் புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ்வின் பங்கும் அளப்பரியது.

சேலம் மாவட்ட காவல்துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கு அவப்பெயரை தேடி தந்த ஏத்தாப்பூர் சோதனை சாவடி நிகழ்வுக்குப் பிறகு, சேலம் உள்பட தனது அதிகாரத்திற்குட்பட்ட மாவட்டங்களில் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்கொத்தி பாம்பாக கவனிக்கத் தொடங்கினார் டிஐஜி மகேஸ்வரி. அவரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆளாகிவிடக் கூடாது என்று உஷாராகி, மண்டலத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள், தங்கள் அதிகார திமிரை எல்லாம் சுருக்கி கொண்டுள்ளனர்.

டிஐஜி மகேஸ்வரி ஐபிஎஸ்.ஸிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், சேலம் புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்வும், அவரது அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தும் பணியை ஒரு சுற்று முடித்துவிட்டார். ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திய எஸ்.பி. அபிநவ், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் உள்ள கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பழையக் குற்றவாளிகள் முதல் புதிதாக முளைத்துள்ள சமூக விரோதிகள் வரையிலான பட்டியலை எல்லாம் தயாரித்து உடனடியாக மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சேலம் புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஐபிஎஸ்…

மேலும், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அமர வைத்து, அவர்களின் குறைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும், எந்தவொரு சூழ்நிலையிலும் பதற்றமாகாமல், மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் காவல் ஆய்வாளர் முதல் கடைநிலை காவலர் வரை டியூசன் எடுத்துள்ளார்.
இளம் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீ அபிநவ்வின் நடவடிக்கைகள் அலட்டல் இல்லாமல் அதே சமயம், எஸ்.பி.யின் அதிகாரம் எப்படியிருக்கும் என்பதையும் உடல்மொழியாக காட்டிய விதத்தைக் கண்டே, காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள், பழைய அலட்சியங்களில் இருந்து விடுபட்டு, புதிய அதிகாரியின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் சுதாரித்துக் கொண்டுள்ளனர்.

டிஐஜி மகேஸ்வரி, ரூரல் எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் ஆகியோரின் அதிரடிகளைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள், அதே வியப்போடு, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா ஐபிஎஸ்.ஸின் புது பாய்ச்சலையும் பார்த்து, சேலம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசம் வெகு விரைவில் அடக்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள்.

சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் முதல் சுற்று ஆய்வை முடித்துவிட்ட ஆணையர் நஜ்மல் ஹோடா, காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அனைத்து அலுவலர்களையும், சட்டத்திற்குட்பட்டுதான் செயல்பட வேண்டும். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல, காவல்துறை திமிரை பொதுமக்களிடம் காட்டக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

அதேபோல, வாகன சோதனை, இரவு நேர ரோந்து ஆகிய பணிகளின் போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும், அவர்கள் ஆளும்கட்சி என்று அடையாளப்படுத்திக் கொண்டு அதிகாரத்தை காட்டினாலும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்பவர்களாக இருந்தால், அவர்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கறாராக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

காவல்துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவரான சேலம் சிட்டி கமிஷனர், எவ்வளவு செல்வாக்குமிக்க மனிதராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர். தன்னைப் போல, தனது தலைமையின் கீழ் பணியாற்றும் காவல்துறை அலுவர்களும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து வருகிறார்.

சமூக விரோதிகளின் நடமாட்டம் இல்லாத நகராக, சேலம் மாநகரை மாற்ற முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா ஐபிஎஸ், ஆளும்கட்சி என்ற போர்வையில் செயல்படுவோரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார். அந்த பட்டியலில் அரசு அதிகாரிகளை மிரட்டும் ஆளும்கட்சி பிரமுகர்களும் சிக்கியிருப்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல் என்று சஸ்பென்ஸ் வைத்தார் அந்த உளவுத்துறை அதிகாரி.

கன்னங்குறிச்சி பேருராட்சி திமுக செயலாளர் குபேந்திரன்…..

சில நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் அவரே பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்பந்தம் பெறும் விவகாரத்தில் கன்னங்குறிச்சி பேருராட்சி செயலாளர் குபேந்திரன், அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை தடுக்கும் வகையில் நடந்து கொண்டார். மேலும், தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கும் குபேந்திரனுக்கு எதிராக நிலுவையில் இருப்பதும் இந்த நிகழ்வுக்குப் பிறகு தூசு கட்டப்பட்டுள்ளது..சட்டத்தை கையில் எடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் குபேந்திரன் குறித்தும் திமுக தலைமைக்கும், காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கும் ரகசிய குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேபோல, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக எம்.பி தயாநிதி மாறன் சேலம் வந்திருந்த போது, கூட்டணி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது பாமக குறித்து அடித்த கமென்ட்டிற்கு எதிர் வினையாற்றும் வகையில், அவரது காரின் மீது பாமக நிர்வாகிகள் சிலர் கல்லெறிந்தனர். இந்த நிகழ்வு குறித்து அப்போதே மாநகர திமுக நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரும் தூசி தட்டியெடுத்து பாமக எம்.எல்.ஏ.அருளின் விசுவாசிகளான கோபால், பூபதி உள்ளிட்டோரையும் தட்டி தூக்க ஸ்கெட்ச் போட்டு இருக்கிறது மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம்.


பா.ம.க நிர்வாகி கோபால்

இப்படி, டிஐஜி, மாநகர காவல் ஆணையர், புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய மூவரும் முப்படைகளைப் போல, சமூக விரோதிகளின் கொட்டத்தை அடக்க, தயாராகி விட்டார்கள். காவல்துறை தலைமையின் அனுமதி கிடைத்தவுடன், சட்ட விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிரான பட்டாசு சத்தம் (துப்பாக்கிச் சூடு) வெகு சத்தமாக கேட்கும். சேலம் மாவட்ட காவல்துறைக்கு கொண்டாட்டமாக அமையவுள்ள குறிப்பிட்ட அந்த நாளைதான் எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று உற்சாகமாக பேசினார் சேலம் உளவுத்துறை அதிகாரி ஒருவர்.

பட்டையை கிளப்புங்க காவல்துறை ஆபிசர்ஸ்…