Mon. Nov 25th, 2024

நல்லரசு தமிழ் செய்திகளைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்போ, வெறுப்போ கிடையாது. கிடைக்கிற தகவல்களை நம்பிக்கைக்குரிய நலம் விரும்பிகள் மூலம் ஐந்தாறு முறை சரி பார்த்த பிறகே, நல்லரசுவிற்கு உண்மையென தெரிய வந்தால், அதை அப்படியே பதிவு செய்கிறோம். செய்தியின் கதாநாயகராக இருக்கிற பிரமுகர்களின் கருத்தை அறிந்து, அதை பதிவு செய்வதில் பெரும்பாலும் விருப்பம் காட்டுவதில்லை…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையப்போகிறது என்று உறுதியான நேரத்தில், சென்னையில் யார் யாருக்கு எல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று யூகங்கள் வெளியான போது, தற்போதைய அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோரின் பெயர்கள் பெரும்பாலான ஊடகங்களில் வெளியானது. அவர்களுக்கு இணையாக கூட இல்லை, 50 சதவீதம் குறைவாகதான் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர் பெயர் ஊடகங்களில் வெளியானது.

ஆயிரம் விளக்கு தொகுதி எழிலன் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரபல எம்.எல்.ஏ.க்கள் பெயர்களும் உத்தேச அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்களில் சிலர் மீது வைத்திருந்த நம்பிக்கையை விட அதிகமான நம்பிக்கையை ஆவடி மு.நாசர் மீது திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வைத்திருந்ததால்தான், அரசாங்க காரில், தேசிய கொடியோடு இன்றைக்கு பயணித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ஆவடி மு.நாசர்.

தன் மீது தலைவர் வைத்திருக்கிற நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறாரா, ஆவடி மு நாசர் ?என்ற கேள்வியை எழுப்புபவர்கள் நாமல்ல, அவருடைய நலம் விரும்பிகளே. அமைச்சர் பதவியேற்று நூறு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அமைச்சர் ஆவடி மு.நாசரின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து மனம் வெதும்பி பேசுகிறார்கள் ஆவடி தொகுதி திமுக உடன்பிறப்புகள். அவர்களின் மனக்குமறல்களை அப்படியே பதிவு செய்கிறோம்.

முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த படித்த மேதாவி மாஃபா பாண்டியராஜன் வெளிப்பார்வைக்கு நேர்மையாளராக காட்டிக் கொண்ட போதும், விருதுநகரில் இருந்து தனது சொந்த பந்தங்களில் இளைஞர்களாக பார்த்து பத்துக்கும் மேற்பட்டவர்களைசென்னைக்கு வரவழைத்து தனது தனிப்பட்ட உதவியாளராக நியமித்து, ஆவடி மாநகராட்சி உள்பட நகராட்சிகள், பேரூராட்சிகளில் மாதந்தோறும் மாமூல் வசூலித்தவர் மாஃபா பாண்டியராஜன் என்று அதிமுக ஆட்சிக்காலத்திலேயே பரவலாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இப்போது, அதே பாணியை பின்பற்ற தொடங்கிவிட்டார் அமைச்சர் ஆவடி மு.நாசர் என்பதுதான், அவரின் அரசியல் வளர்ச்சிக்காக உழைத்த திமுக உடன்பிறப்புகளின் கோபமாக இருக்கிறது. அமைச்சர் பொறுப்பை ஏற்ற இந்த இரண்டு மாதத்தில் தனது துறையான பால்வளத்துறையில் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை எல்லாம் கண்டுபிடித்து, முந்தைய அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டிய மிகப்பெரிய கடமை ஆவடி மு.நாசர் முன்பு இருக்கிறது.

ஆனால், ராஜேந்திர பாலாஜியுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்து, தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைய ஆவடி மு.நசார் துணிந்துவிட்டார் என்பதுதான் ஆவடி திமுக முன்னணி நிர்வாகிகளிடம் எழுந்துள்ள பரவலான சந்தேகமாக இருக்கிறது. பால்வளத்துறையில் ஊழல்கள் நாற்றமெடுக்க,  கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு யார் யாரெல்லாம் துணை போனார்களோ அத்தனை அதிகாரிகளுக்கும் தண்டனை பெற்று தராமல், அந்த அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதுடன், அவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்குமா என்ற எண்ணத்தில்தான் அமைச்சர் ஆவடி மு.நாசர் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார் என்று பால்வளத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி அமைச்சர் பதவி கொடுத்த திமுக தலைமைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசுவாசமாக இல்லாமல், சட்டத்திற்குப் புறம்பாக இப்போதிருந்தே சொத்து சேர்க்க ஆரம்பித்துவிட்டார் என்று தொகுதிக்குள் பரவலாக எழுந்துள்ள பேச்சுகள் மூலம் திமுக.வுக்கு அவமானம் ஏற்பட்டதை போல உணருகிறார்கள் திருவள்ளூர் மாவடட திமுக முன்னோடிகள்.

இதற்கு மேலாக, அமைச்சர் ஆவடி மு.நாசரின் மகன், மனைவி ஆகியோரும் பால்வளத்துறையின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட்டு வருவதுடன் ஆவடி தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் உயரதிகாரிகள் மாதந்தோறும் மாமூல் வசூலித்து கொடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவது தொடர்பாக நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை கூப்பிட்டு அமைச்சர் கண்டித்தால்தான், திமுக ஆட்சியின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் நலத்திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது கிடைத்து வரும் நல்ல பெயர் மேலும் பெருகும்.

ஆனால், அதற்கு மாறாக, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஊழல் செய்து கொள்ளுங்கள். அதைப் பற்றி எனக்கு துளியும் கவலையில்லை, மாதந்தோறும் லட்சக்கணக்கில் ஊழல் பணம் தனக்கு மாமூலாக கொடுத்துவிட வேண்டும் என்று அமைச்சர் ஆவடி மு.நாசரின் மகன் கேட்டு மிரட்டுவதாக நகராட்சி அதிகாரிகளே வருத்தப்பட்டு பேசுகிறார்கள்.

இப்படி, அமைச்சரின் அதிகாரத்தை வைத்து அவரது மகன் ஒருபக்கம் அதிகாரிகளை மிரட்ட, அமைச்சரின் மனைவியும், ஆவடி தொகுதி உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள், புதிய கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து, ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் அளவுக்கு செயல்பட்டு வருவதுதான் திமுக முன்னணி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய அதிமுக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜனை விட அதிகமாக மாமூல் வசூல் செய்ய வேண்டும் என்று போட்டியில் குதித்துவிட்டாரா அமைச்சர் ஆவடி மு.நாசர்? என்ற பயமே திமுக நிர்வாகிகளிடம் அதிமாக காணப்படுகிறது.

பால்வளத்துறையிலும், திருவள்ளூர் மாவட்ட அரசு நடவடிக்கைகளிலும் மகன் மற்றும் மனைவி தலையீட்டை தடுத்து நிறுத்தாமல், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில்தான், மகன், மனைவி ஆகியோரிடம் இருந்து வரும் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி வையுங்கள் என திருவள்ளூர் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறார். அமைச்சர் ஆவடி மு.நாசருக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக புகார்கள், அண்ணா அறிவாலயத்திற்கு பாதிப்பட்ட ஒப்பந்ததாரர் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினர் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அமைச்சர் ஆவடி மு.நாசரின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள விசுவாசி.

சென்னையில் உள்ள அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக இதுபோன்ற புகார்கள் எழாத இந்த நேரத்தில், அமைச்சர் ஆவடி மு.நாசருக்கு எதிராக மட்டும் திமுக நிர்வாகிகள், திமுக ஆதரவு ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவிக்க துணிந்து விட்டார்கள் என்றால், இத்தகையான புகார்கள் ஊடகங்களில் பரவலாக வர தொடங்கினால், முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்குதான் அவமானம் ஏற்படும் என்பதுதான் ஆவடி தொகுதி திமுக முன்னணி நிர்வாகிகளின் மிகப்பெரிய மனவருத்தமாக இருக்கிறது என்கிறார்கள் நல்லரசுக்கு செய்திகளை அனுப்பி வைக்கும் சமூக ஆர்வலர்கள்.