மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனின் தன்னலமற்ற மக்கள் நலப்பணிகளைப் பார்த்து அதிமுக முன்னணி நிர்வாகிகளே, கதிரவன் எம்.எல்.ஏ.வை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருவதால், திருச்சி மாவட்ட அதிமுக கரையத் தொடங்கிவிட்டது என்று பட்டாசு கொளுத்துகிறார்கள் கலைஞரின் உடன்பிறப்புகள்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற திமுக எம்எல்ஏ சீ. கதிரவனின் செயல்பாடுகளை பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ். முருகானந்தம் மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் ஒட்டிய போஸ்டர்களே, கதிரவன் எம்.எல்.ஏ.வின் மக்கள் சேவைக்கு மகத்தான சாட்சி.
கட்சி பேதமின்றி, அரசியல் கலப்பின்றி மக்களின் மேல் அன்பு செலுத்தி வரும் அரசியல் தலைவர்களை கொண்டாடும் பண்பாட்டிற்கு அழுத்தமாக அடிக்கல் நாட்டியிருக்கிறார் அதிமுக முன்னணி நிர்வாகி எஸ்.முருகானந்தம்.
வழக்கறிஞராகவும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் எஸ்.முருகானந்தம், அரசியல் நாகரிகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர். சொந்த தொகுதிகளுக்குள் அரசியல் பகைமையை மனத்தில் தாங்கிக் கொண்டு, மனப்பூர்வமாக மக்கள் பணி செய்பவர்களைக் கூட அரசியல் கண்ணோட்டத்தோடு விமர்சனம் செய்யவோ, புறக்கணிப்பு செய்யவோ விரும்பாமல், தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.,வான கதிரவன் எம்.எல்.ஏ.வை மனம் திறந்து பாராட்டிய பண்பை, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசியலுக்கு அப்பாற்றட்ட மக்கள் சேவர்கள் பெருமிதத்துடன் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக நிர்வாகியே பாராட்டும் அளவிற்கு திமுக எம்.எல்.ஏ. கதிரவன் அப்படி என்னதான் செய்து விட்டார்.
மண்ணச்சநல்லூர் சட்ட மன்றத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் முதல்முறையாக போட்டியிட்ட சீ. கதிரவன் , தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதியை தோற்கடித்தவர். மேலும், அவரை எதிர்த்த 28 பேரும் முகவரியில்லாமல் போனார்கள்.
முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட போதே சுமார் 59 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சீ. கதிரவன் வெற்றிப் பெற்று எம்எல்ஏ ஆனார். இத்தனைக்கும் திமுக.விற்குள்ளேயே தேர்தல் நேரத்தில் அவருக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதையும் கடந்து தனது மனிதநேய செயல்களால், நடவடிக்கைகளால், மண்ணச்சநல்லூர் மக்களின் மனங்களை வென்றார் கதிரவன் எம்.எல்.ஏ.
திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில், கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. மக்கள் அன்றாட வாழ்விற்கே கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர். அரசு அறிவித்த கொரோனா பொது முடக்கத்தால் மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனை அறிந்த தொகுதி திமுக எம்எல்ஏ சீ. கதிரவன் தொகுதியில் உள்ள பரவலான மக்களுக்கு அரிசி, பருப்பு , மளிகைப் பொருட்கள் , காய்கறிகள் மற்றும் உடுக்க உடைகள் தனது சொந்த செலவில் வாரி வழங்கினார். பொது மக்கள் மட்டுமல்லாது தனது சொந்த கட்சிகாரர்களுக்கும் உதவினார்.
இது மட்டுமல்லாது கடந்த 5 ஆண்டுகளாகவே பூட்டிய நிலையில் இருந்த சட்ட மன்ற அலுவலகத்தினை தூய்மைப் படுத்தி மக்கள் பயனளிக்கும் வகையில் திறந்து வைத்து மக்கள் குறைகளை தினசரி கேட்டரிந்து வருகிறார். மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற அலுவலகத்திலும், சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியிலும், மக்களுக்கு எங்கு உணவு உள்ளிட்ட தேவைகள் உள்ளதோ அவற்றினை அறிந்து ரூ. 75 லடசத்திற்கு மேல் கொரோனா பரவல் காலத்தில் தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொல்லும் தாரகை மந்திரமான மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வார்த்தைக்கு ஏற்ப மக்களால் எம்எல்ஏ வான சீ. கதிரவன், அவரது தொகுதி மக்களுக்காகவே தினமும் ஏதாவது உதவிகள் மட்டுமல்லாது, தொகுதியில் மக்கள் குறைகளை கட்சியினர் புடை சூழ சென்று கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் இவரது செயலைப் பாராட்டி திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ். முருகானந்தம் மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
இது குறித்து அதிமுக பிரமுகர் முருகானந்தனிடம் கேட்ட போது, மண்ணச்சநல்லூர் தொகுதியில் இது வரை இருந்த எம்எல்ஏக்கள் யாவரும் செய்யாததனை இவர் தனது சொந்த செலவில் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். அவரது செயலை பாராட்டுவதில் எவ்வித தவறும் இல்லை. இது குறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன் என்றார் முருகானந்தம்.
திமுக எம்.எல்.ஏ. கதிரவனை பாராட்டி முருகானந்தம் போஸ்டர் ஒட்டிய விவகாரம், அதிமுக இரட்டை தலைமைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. முருகானந்தம் போல முன்னணி அதிமுக நிர்வாகிகள் பலர், திமுக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியையும் பாராட்ட தொடங்கினால், தங்களின் தலைமைக்கு ஆபத்து வந்து விடும் என்று பயந்து போய் உள்ளதாகவும், முருகானந்தத்தை உடனடியாக அழைத்து விசாரணை நடத்துமாறும் அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியை கேட்டுக் கொண்டுள்ளார்.
பரஞ்சோதியின் விசாரணையை எதிர்கொண்ட முருகானந்தம், மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கதிரவன் எம்.எல்.ஏ.வை தொடர்ந்து பாராட்டுவோம் என துணிச்சலாக பதிலளித்துள்ளார். தான் போட்டியிட்ட தொகுதியிலேயே அதிமுக முன்னணி நிர்வாகியான முருகானந்தத்தை தனது ஆதரவாளராக கதிரவன் எம்.எல்.ஏ மாற்றி விட்டதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் பரஞ்சோதி. முருகானந்தம் வழியில் திமுக ஆதரவாளர்களாக இன்னும் யார் யாரெல்லாம் மாறப் போகிறார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம் பரஞ்சோதி.
ஆக, மொத்தத்தில் திருச்சி மாவட்ட அதிமுக கரையத் தொடங்கிவிட்டதாகவே, கலைஞரின் உடன்பிறப்புகள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள்.