Sat. Nov 23rd, 2024

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிதாக அணை கட்டும் முயற்சியில் அம்மாநில அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக் கூடாது என்று கூறி அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், கர்நாடக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், 4.75 டி.எம்.சி தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தள்ளார்.

கர்நாடக முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் ;

தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் உங்கள் ( எடியூரப்பா) நோக்கத்தையும் பாராட்டுகிறேன்.

மேகதாது அணை விவகாரத்தில் 67.16 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கும் நோக்கம் கொண்டதாக கர்நாடக அரசின் திட்டம் உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவில், கர்நாடக மாநிலத்தால், மாநிலங்களுக்கு இடையேயான வழங்கப்பட வேண்டிய வருடாந்திர அளவு நீர் குறித்து மூன்று அம்சங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கர்நாடக சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் விவசாய சமூகத்தின் நலன்களை பாதிக்காது என்ற உங்கள் கருத்தை தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பெங்களூர் பெருநகரத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆற்றில் இருந்து தண்ணீர் இழுக்கப்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெங்களூரு நகரப் பகுதியின் தேவையைப் பூர்த்தி செய்ய கர்நாடகாவில் ஏற்கெனவே போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது. இப்படிபட்ட நிலையில், ​​4.75 டி.எம்.சியைக் குடிநீர் தேவைக்காக 67.16 டி.எம்.சி சேமிப்புத் திறன் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தின் தேவை என மேகதாது அணை கட்டப்படுவதாக நியாயப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைப்பதை கட்டாயம் பாதிக்கும்.

ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டிய நீரின் பங்கு குறித்து நீதிமன்றத்தால் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் காவிரி நீர்ப்பாசனத்தின் செயல்திறனை அதிக அளவில் மேம்படுத்த முடியவில்லை. நீர் பயன்பாட்டுச் செயல்திறனை அதிகரிக்க பல பழைய கட்டமைப்புகளை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும் என்பது தற்போதைய தேவை.

மேற்கண்ட உண்மைகளையும் இந்தச் சிக்கல்களின் உண்மைத் தன்மையையும் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன். எனது நல்வாழ்த்துகளைக் கர்நாடக மாநில மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் இரு மாநிலங்களுக்கிடையில் நல்ல ஒத்துழைப்பும் உறவும் மேலோங்கும் என்று ஆவலுடன் நம்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.