மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும்மத்திய அரசுக்கு ஆணையத் தலைவர் அடிபணியக்கூடாது பிஆர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது. காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்டி தமிழகத்தை ஒழிக்க நினைப்பதை தடுத்து நிறுத்த தவறும் ஆணைய தலைவரை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற
பிஆர் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
கர்நாடகம் சட்டவிரோதமாக மேகதாது அணை கட்டுவதற்கு முயற்சி எடுக்கிறது. மறைமுகமாக மத்திய அரசும், பிரதமரும் துணை போகிறார்கள். மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆணையத் தலைவர் அடிபணியக்கூடாது என எச்சரிக்கிறேன்.
ஓராண்டு காலமாக ஆணையம் முடங்கி இருக்கிறது.குறிப்பாக கர்நாடகமும் மத்திய அரசும் கூட்டு சேர்ந்து ஆணையத்தின் செயல்பாடுகளை அதிகாரத்தை பறிப்பதற்கு மறைமுக முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்கு ஆணையத் தலைவர் இடமளிக்கக்கூடாது.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் முழு செயல்பாட்டுக்கு முன்வரவேண்டும்.
தற்போது தமிழகத்தில் கருகும் பயிரை காப்பாற்ற மாதாந்திர அடிப்படையில் நமக்கு தர வேண்டிய தண்ணீரையும், ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீட்டையும் உடனடியாக பெற்றுத் தர ஆணையம் முன்வர வேண்டும்.
நாளை நடைபெற இருக்கின்ற ஆணையக் கூட்டம் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது சட்டவிரோதம் என பகிரங்கமாக அறிவிக்க முன் வர வேண்டும்.அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.
மீறுமேயானால் உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் வழக்கு தொடர முன்வர வேண்டும்.ஆணையம் மறுக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்வோம்.
கடந்த காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு காவிரி பிரச்சனையில் பிரதமரை சார்ந்து தனது அணுகுமுறைகளை பின்பற்றியதால் ஆணையம் முடக்கப்பட்டது.தற்போது முக ஸ்டாலின் தலைமையிலான அரசு அதற்கு இடமளிக்கக்கூடாது. பிரதமரோ மத்திய நீர்வளத்துறை அமைச்சகமோ காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கைகளில் நுழைய அனுமதிக்கக் கூடாது.தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஆணையம்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதை உணர்ந்து, ஆணையத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
ஆணையம் செயல்பட மறுக்கும் பட்சத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடருவோம் என நான் எச்சரிக்கிறேன் என்றார்.
மன்னார்குடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ்,
நகர தலைவர் தங்கமணி,செயலாளர் போஸ்,நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் ராதா, செயலாளர் பன்னீர்செல்வம், உயர்மட்ட குழு உறுப்பினர் அசேஷம் குணசேகரன் உள்ளிட்ட விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.