Sat. Nov 23rd, 2024

பிரபல போலி சாமியார் சிவசங்கர் பாபாவை நிறுவனராக கொண்டு செயல்பட்டு வரும் சென்னை சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள புகழ்பெற்ற பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் புகாரில் சிக்சி கைதானதைப் போல, தொடர்ந்து பல்வேறு தனியார் பள்ளி மாணவிகள் தெரிவித்து வரும் பாலியல் புகார்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் கைது படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராகவும் பாலியல் புகார்களை அந்த பள்ளியின் மாணவிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்களை பதிவு செய்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. சிவசங்கர் பாபாவுக்கு எதிரான பாலியல் புகாரில் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்து கொண்டதையடுத்து, அவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மூன்று தனித்தனி புகார்களின் பேரில் சிவசங்கர் பாபா மீது சென்னை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலி சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டை கடந்து வேறொரு மாநிலத்திற்குச் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்பதால், சென்னை மாநகர காவல்துறையை விட சிறப்பு அதிகாரங்கள் கொண்ட சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.