Sat. Nov 23rd, 2024

வி.கே.சசிகலாவுக்கு எதிராக ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக பதிலளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரும், இப்போது சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரும் 14 ஆம் தேதி சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று காலை அவர், கடற்கரைச் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜெயக்குமார் கூறியது:

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடம் பேசியவர் அதிமுகவைச் சேர்ந்த யாரிடமும் அவர் பேசவில்லை. ஆடியோ பேச்சு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். சசிகலா விலக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்திலும் அதிமுக எழுச்சியுடன் சிறப்பாக செயல்படுகிறது. இதே நிலை இனியும் தொடரும்.

அதிமுக.வுக்கு பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக எந்த எண்ணமும் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் எப்போதுமே நிரந்தரப் பொதுச் செயலாளர். இன்றைய தேதியில், அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து செயல்படும் நிலைதான் உள்ளது. இருவரின் தலைமையில்தான் கட்சி வழிநடத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு உள்ள அதிமுக.தான் உண்மையான அதிமுக என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. எங்களிடம்தான் இரட்டை இலை சின்னம் இருக்கிறது. உச்ச நீதிமன்றமே சொல்லிய பிறகு யாரும் அதிமுக.வுக்கு சொந்தம் கொண்டாடிவிட முடியாது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தாலே தெரியும், இரட்டை தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெளிவாக புரிந்துவிடும். அதனால்தான் ஆளும்கட்சியான திமுகவுக்கும் எங்களுக்கும் இடையே 3%தான் வாக்கு வித்தியாசம் இருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் வாக்காளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இரட்டைத் தலைமையோடு இயங்கும் அதிமுக.வை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்.

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் ஆளும்கட்சியை விட எதிர்க்கட்சியான அதிமுக.வுக்கு அதிக அக்கறை இருக்கிறது. அதனால்தான், தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து மருந்துகளையும் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக, மக்கள் பணியில் தனது கடமையைச் சரிவரச் செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடுப்பூசி இல்லை.

திமுக 39 எம்.பி.க்களை எதற்கு வைத்திருக்கின்றனர்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து கண் துடைப்பாக கடிதம் எழுதுகின்றனர். கரோனா குறைந்துவிட்டது என்று கூறி வரும் நிலையில், முழுமையான பரிசோதனை செய்தால்தானே கரோனா தொற்று எந்தளவுக்கு இருக்கிறது என்பது தொடர்பான உண்மை தெரியும். 400க்கு குறையாமல் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பது வேதனையை தருகிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.