கொரோனோ தொற்றின் 2வது அலையால் தமிழ்நாடே ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ ஒரு மாத ஊரடங்கை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், வறிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் வருமானம் இல்லாததால் விளிம்பு நிலை மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை பல கோடி பேர், வறுமையை வெளிப்படுத்த முடியாமல், உள்ளுக்குள்ளே புகைந்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டில் இருந்து இன்றைய தேதி வரை ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த அளவுக்கு பொருளாதார உதவிகளை ஒருபக்கம் செய்து வரும் வேளையில், தன்னார்வலர்கள் உள்பட பலர், ஏழை எளிய மக்களுக்கு மூன் று வேளை உணவு வழங்கும் பணியிலும் இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருபக்கம் மனிதநேய மக்கள், வறிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் நேரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கொரோனோ நிவாரண நிதியாக ரூ. 4000 மற்றும் உணவுப்பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ஆகியவற்றை வழங்கி, ஏழை எளிய மக்களின் வறுமையை விரட்ட முயன்றுக் கொண்டிருக்கிறார்.
2 ஆவது அலை ஏற்படுத்திய அச்சத்தை உள்வாங்கிக் கொண்டுள்ள வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கூட, தாங்கள் ஈட்டிய பணத்தில் இருந்து சிறிய அளவிலான நிதியுதவியை திரட்டி தமிழ்நாடு அரசுக்கு தொடர்நது நன்கொடையாக கோடிக்கணக்கில் வழங்கி வருகிறார்கள்.
கொரோனோ தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலினும் வெளிப்படையாக நன்கொடை தாரீர் என அறிவிப்பு வெளியிட்டு, தொழில் அதிபர்களிடம் இருந்து நிவாரண நிதியை திரட்டிக் கொண்டிருக்கிறார்.
அவரது மகனும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் பெருமக்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதியை திரட்டி வருகின்றனர்.
இந்த நேரத்தில், தங்களது சொந்த வருவாயில் இருந்து ஒரு தொகையை தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள கொரேனோ நெருக்கடியை சமாளிக்க அரசுக்கு உதவ முன்வரும் அனைத்து மக்களும், உண்மையிலேயே பெரிய மனிதர்கள்தான். அப்படிபட்டவர்களின் உணர்வுகளை போற்றி பாராட்ட வேண்டிய கடமை பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெருமளவில் உண்டு.
ஆனால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக உள்ள விஷ்ணு ஐஏஎஸ்.ஸுக்கு அத்தகைய மனப்பாங்கு இல்லையோ… அரசு அதிகாரி என்ற ஆணவப் போக்குதான் நிலவி வருகிறதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது. அந்த நிகழ்வை சுட்டிக் காட்டி வேதனையோடு பேசுகிறார்கள் சமூக ஆர்வலர்கள் பலர்.
நெல்லை மாநகர இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 65 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் V.விஷ்ணு IAS ஐ சந்தித்துள்ளனர். பொதுமக்களின் துயர் துடைக்க, தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து நன்கொடை கொடுக்க வந்தவர்களை நிற்க வைத்தவாறே, தனது இருக்கையில் அமர்ந்து கொண்டே நிவாரண நிதிக்கான காசோலையை வாங்கியதுதான், மனதை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது என்று நொந்து கொள்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதுவும், சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர்
T.பாலாஜிகிருஷ்ணசுவாமி, இந்து வியாபாரிகள் நலச்சங்க நெல்லை மாநகர தலைவர்
N.காசி முருகன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் M.சுடலை, இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநகர பொருளாளர் R.மூர்த்தி, பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் N.மணிகண்டமகாதேவன் என சமூக சேவையில் ஆர்வம் உள்ள முக்கிய பிரமுகர்கள் சென்றிருந்த போதும், ஆட்சியர் விஷ்ணு ஐ.ஏஎஸ், உரிய மரியாதை வழங்காமல், மாவட்ட ஆட்சியர் என்ற அதிகார தோரணையிலேயே நடந்து கொண்டது, மக்கள் சேவையில் ஆர்வம் உள்ள பிரமுகர்களை சோர்வடையச் செய்து விடும் என்று ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்கள் நெல்லையில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள்.