சேலம் மாவட்டத்தில் கொரோனோ தொற்று தடுப்பு கண்காணிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை கூட அடக்கி ஓரம் கட்டி விட்டார். ஆனால், திமுக நிர்வாகிகளின் முந்திரிக்கொட்டைத்தனமான செயல்களை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு விசுவாசமான கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
கரூர் வரைக்கும் எட்டிவிட்ட சேலம் மாவட்ட திமுக உட்கட்சிப் பூசலின் சங்கதி என்ன? என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன், கரூர் மாவட்ட திமுக நிர்வாகி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். கிண்டலும் கேலியுமாக சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளின் அன்றாட நடவடிக்கைகளை விலாவாரியாக விவரித்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை தவறவிட்டு விட்டது. சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல, தற்போதைய தேர்தலிலும் சேலம் மாநகர மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் வெற்றிப் பெற்றிருக்கிறார். இவர் உள்பட மற்ற மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களான, முறையே டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் திமுக எம்.பி.பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு ஏற்ற எஞ்சிய 10 தொகுதிகளிலும் திமுக.வுக்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸுககும் வெற்றி கிடைக்கவில்லை.
அதிமுக ஆட்சியின் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் திமுக.வுக்கு ஏற்பட்ட தோல்வியை, தளபதி மு.க.ஸ்டாலினால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த கோபத்தில்தான், தளபதிக்கு மிகவும் நெருக்கமாக அறியப்படும் வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் தவிர்த்துவிட்டார்.
சேலம் மாவட்ட திமுக.வில் உள்ள கோஷ்டிப் பூசலை சரி செய்து, மிகுந்த எழுச்சியுடன் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் ஆற்றும் வகையில் திமுக நிர்வாகிகளை தயார் செய்யும் பணியை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார் முதலவர் மு.க.ஸ்டாலின். அமைச்சரின் அதிரடி பற்றி எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றிலும் வேகம் காட்டுவதுதான் அவரது பிறவிக்குணம். இருந்தாலும் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளைப் பொறுத்தவரை, டி.எம்.செல்வகணபதி,வழக்கறிஞர் ராஜேந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய மூன்று பேருமே சீனியர்கள்.
இந்த மூன்று பேரையும் லாவகமாக கையாளும் கலையை அமைச்சர் செந்தில்பாலாஜி கற்றிருந்தாலும், மூன்று பேரும் மூன்று திசைகளில் நிற்பதால், கொரோனோ தடுப்புப் பணிகளை கையாள்வதை விட , சீனியர்களான மூன்று நிர்வாகிகளையும் கையாள்வதுதான் அமைச்சருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்கறிஞர் ராஜேந்திரனைப் பொறுத்தவரை, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியுடனேயே இருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வுக் கூட்டத்திற்கு செல்லும்போது அவரது காரில் ஏறுவதற்கே கூச்சப்படுகிறார். தேசியக் கொடி கட்டிய காரில் தனித்து பயணிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு இல்லாததால், அவருடைய சொந்தக் காரிலேயே அமைச்சரை பின்தொடர்கிறார்.
எம்.எல்.ஏ., என்பதால், ராஜேந்திரனுக்கு ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் உரிய மரியாதை கிடைப்பதால், அவரளவுக்கு அவர் ஹேப்பிதான்.
ஆனால், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. 1991-96 ஆம் ஆண்டுகளிலேயே அமைச்சராக இருந்தவர். இப்போது எம்.எல்.ஏ., எம்.பி பதவி போன்றவை இல்லாததால், அரசு உயரதிகாரிகள் மத்தியில் அவருக்கு மரியாதை கிடைப்பதில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரைச் சுற்றி அரசு அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்திற்கு டி.எம்.செல்வகணபதி சென்றார். அவரைப் பார்த்ததும் அமைச்சர் வணக்கம் சொல்லி, ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில், அங்கேயே அமரச் சொல்லியிருக்கிறார். ஆனால், அங்கு காலியான இருக்கைகள் எதுவும் இல்லாததால், சிறிது நேரம் நின்று விட்டு திரும்பிவிட்டார் டி.எம்.செல்வகணபதி. அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் அதிகமாக அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
கிழக்கு மாவட்டச் செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம், பழுத்த அரசியல்வாதி. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடமே குப்பை கொட்டியவர் என்பதால், நெளிவு, சுழிவுடன் நடந்து கொள்கிறார். இருந்தாலும் கூட அமைச்சர் செந்தில்பாலாஜியோடு அதிகமாக நெருங்குவதில்லை. இப்படி மூன்று மாவட்ட பொறுப்பாளர்களும் அமைச்சர் செந்தில்பாலாஜியோடு தாமரை இலை தண்ணீர் போல பழகி வருவதால், திமுக எம்.பி. பார்த்திபனும், முன்னாள் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய புதல்வருமான வீரபாண்டி ஆ.ராஜாவும் அமைச்சர் செந்தில்பாலாஜியோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டார்கள்.
இவர்கள் இரண்டு பேரும் செய்து வரும் சேட்டைகளால், வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பல நேரங்களில் கடுப்பாகிவிடுகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இந்த கூத்து எல்லாம் தெரிந்தாலும் கூட, இப்போதைக்கு உட்கட்சி பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம் என்ற சிந்தனையோடு, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார் என்றார் கருர் மாவட்ட திமுக நிர்வாகி.
தலைப்பு செய்திக்கான விஷயத்தை கறக்க வேண்டிய கடுப்பில் நாம் இருந்தோம்..
சிறிதுநேர ஆசுவாசப்படுத்தலுக்குப் பிறகு அவரே மீண்டும் தொடர்ந்தார்.
சேலம் மாவட்டத்தின் ஒன்மேன் ஆர்மியாக வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோது, அவரது படைத்தளபதிகளில் ஒருவராக இருந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் திடீரென்று கோலியாத்தை எதிர்த்த தாவீது கணக்காக வீறுகொண்டு எழுந்து நின்றார். வழக்கறிஞர் ராஜேந்திரனின் துணிச்சலைப் பார்த்து வியந்து போய், அன்றைய தினத்தில் இருந்து ராஜேந்திரனை தட்டிக்கொடுத்து வளர்ந்து வந்தார் தளபதி மு.க.ஸ்டாலின். வீரபாண்டி ஆறுமுகம் மறைந்ததையடுத்து, அவரது எதிரணியினர் முழுமையாக ராஜேந்திரன் பின்னால் அணிவகுத்தனர்.
ஆனாலும், அவரது இளைய மகன் வீரபாண்டி ஆ.ராஜா, தனது தந்தையின் செல்வாக்கை வைத்து சேலம் மாவட்டத்தில் அரசியல் செய்தார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் எழுந்த வண்ணமே இருந்தன. இந்தநேரத்தில்தான், கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது வீரபாண்டி ஆ.ராஜாவிடம் இருந்த மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் சென்னையில் தங்கியிருந்த டி.எம்.செல்வகணபதியை சேலத்திற்கு அனுப்பி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டது.
தன்னிடம் இருந்த பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டதால் மனம் நொந்து போன வீரபாண்டி ஆ.ராஜா, அரசியலில் இருந்து துறவறம் பெற்றதைப் போல கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அமைதியாகிவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் உற்சாகமாக களப்பணியாற்றவில்லை. சேலம் மாவட்டத்தில் தனது பரம வைரியான ஆ.ராஜேந்திரன் மட்டும் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ., ஆனதால், எப்படியும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடும். சேலம் மாவட்ட திமுக.வில் அவரது செல்வாக்கு ஓங்கிவிடும். வீரபாண்டி ஆறுமுகத்தின் புகழ் மங்கிவிடும் என்றெல்லாம் நினைத்து கவலையிலேயே மூழ்கியிருந்திருக்கிறார் ஆ.ராஜா.
ஆனால், ராஜேந்திரனுக்கு திமுக அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்காமல் தவிரிக்கப்பட்டதை கண்டு துள்ளிக்குதித்த வீரபாண்டி ஆ.ராஜா, அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் டக்கென்று ஒட்டிக் கொண்டார். ஆய்வுக் கூட்டமாக இருந்தாலும், பயணியர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும் அமைச்சர் செந்தில்பாலாஜி அருகிலேயே அமர்ந்து உற்சாகமாக பேசுகிறார். நிறைய ஆலோசனைகளைக் கூறுகிறார். மற்றொரு பக்கம் திமுக எம்.பி. பார்த்திபனும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உதவிக்கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
அமைச்சர் ஆய்வுப் பயணங்களுக்கு செல்லும் போது இருவருமே அவரது காரிலேயே பயணிக்கிறார்கள். சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் விலகி நிற்க, முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, ஏற்கெனவே தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை மீண்டும் பெற்றுவிடும் எண்ணத்தோடு, அமைச்சர் செந்தில்பாலாஜியை தாஜா செய்து வருகிறார். மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ கட்சிப் பதவியை பெறுவதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆசியை முழுமையாக பெற ஓடியாடி வேலைப் பார்க்கிறார் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன்..
சேலம் மாவட்டத்தின் திமுக நிர்வாகிகள் நவக்கிரகங்களைப் போல ஆளுக்கொரு திசையில் பயணிப்பதை கண்டு நொந்து போய்விட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. சீனியரான டி.எம்.செல்வகணபதியை சேலத்திலேயே முடக்கிப் போடாமல், சென்னைக்கு அழைத்து அண்ணா அறிவாலயத்தில் முக்கிய பதவியை கொடுக்க வைக்க வேண்டும் என்பதுதான் அமைச்சரின் யோசனையாக இருக்கிறது. அதேசமயம், சேலத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்குகூட மாவட்ட அளவில் பதவி வழங்காமல், கடந்த பத்தாண்டுகளாக அரசியல் செய்து வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைப் போல, திமுக.விலும் மாவட்டப் பொறுப்புகளில் பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கும் யோசனையும் அமைச்சரிடம் எழுந்துள்ளது.
கொரோனோ தொற்று கட்டுக்குள் வந்தவுடன், சேலம் மாவட்ட திமுக.வை சீரமைக்கும் நடவடிக்கைகளில் அதிரடி வேகத்தை காட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி முடிவு செய்திருக்கிறார். அப்போது யார் யாருடைய தலைகள் உருளப் போகிறதோ? என்று கேள்விக்குறியோடு பேசி முடித்தார் கரூர் மாவட்ட திமுக நிர்வாகி.
சேலம் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கட்சி முன்னோடிகளுக்கு தலைமையோடு போராடி பதவி வாங்கிக் கொடுத்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசான ஆ.ராஜா, கைவிட்டுப் போன பதவியை மீண்டும் பிடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கனவு நனவாகுமா? அமைச்சர் செந்தில்பாலாஜி மனசு வைத்தால் மட்டுமே சாத்தியமாகும்…