சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளி செயல்பட்டு வருகிறது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினருக்கு சொந்தமான இந்த பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆன் லைன் வாயிலாக வகுப்பு எடுத்தபோது, அந்த பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அதுதொடர்பாக மாணவிகள் சமூக ஊடகங்களில் தகவல் தெரிவித்தனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வரும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர்.
இதனிடையே, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் சமூக ஆசிரியர் ராஜகோபாலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார், ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபாலனை இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், அந்த பள்ளி நிர்வாகத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகளான மதுவந்தியும்.