Wed. Nov 27th, 2024

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதி ஒரு மாத ஊதியத்தை அனுப்பி வைத்தார் அன்புமணி இராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்தவாறு, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் தமது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அனுப்பி வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுதிய கடிதம்:

முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதும், அதிலிருந்து மக்களைக் காப்பதும் மிகவும் சவாலான பணி என்பதில் ஐயமில்லை. கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கும்படி தாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என்று மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்.

மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்தவாறு எனது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
வங்கிப் பரிமாற்ற விவரம்:

Bank: State Bank of india
Neft – Transfer UTR NO: SBIN321138113148
Amount: Rs. 1,89,000/=
Chief Minister’s Public Relief Fund

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, பொது மக்களைக் காப்பாற்றுவது தான் நமது முதல் பணியாகும். அதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் என்ற முறையில் நானும் அனைத்து வழிகளிலும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

                    
                                         

                   இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்...