Sun. Apr 20th, 2025

கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயல் டவ்-தே, இன்று காலை 5.30 மணியளவில் கிழக்கு மத்திய அரபிக் கடலில் பஞ்சிம் கோவுக்கு மேற்கு -தென்மேற்கு திசையில் 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இன்றிரவு கோவை நெருங்கும் டவ் தே புயல், நாளை காலைக்குள் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

டவ் தே புயல் காரணமாக கேரளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், அங்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவுக்கு அருகே அரபிக்கடலில் உருவான மிகத்தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. டவ் தே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

கடல் கொந்தளிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மணிமலை ஆறு, அச்சன்கோவில் ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், 17-ஆம் தேதி வரை கேரளா முழுவதும் மழை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவனந்தபுரம், எர்ணாகுளம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக பேரிடர் நிவாரண படையினர், கடற்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மக்களை, தங்களின் உயிரை பணயம் வைத்து பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தொடர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை வீடுகளின் மீதும் சாலைகளிலும் விழுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளின் குறுக்கே விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதேபோல், இடிந்து விழுந்த வீடுகளை சீரமைப்பது, துண்டிக்கப்பட்ட சாலைகளை இணைப்பது உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.