கர்நாடக மாநிலத்திலும் கொரோனோ தொற்றின் தாக்கம் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தலைநகரான பெங்களூருவிலும் 24 மணிநேரமும் ஆம்பலன்ஸ் சத்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டே இருக்கிறது..கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கொரோனோ தொற்று அறிகுறி கண்டறியப்பட்டவர்களில் 3 ஆயிரம் பேர் தங்களது கைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டள்ளது என்றும் அம்மாநில பாஜக அரசு ஒரு குண்டை தூக்கிப் போட்டது.
கடந்த 24 மணிநேரத்தில், கர்நாடகாவில் 40 ஆயிரம் பேர் புதிதாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 349 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கட்டுக்கடங்காத வகையில், கொரோனோ தொற்று பரவி வருவதால், அம்மாநிலத்திலும் முழுமையாக ஊரடங்கு கடந்த பல நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் வாகனங்களில் செல்வோரை எச்சரித்து வந்த கர்நாடக போலீசார், அதன் பிறகு கடுமையாக தாக்கத் தொடங்கினார்.
ஊரடங்கு விதிகளை மீறியவர்களை கண்மூடித்தனமாக லத்தியால் தாக்கும் காட்சிகள் கைபேசியில் பதியப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அந்தக் காட்சிகளைப் பார்த்த மனித உரிமை ஆர்வலர்கள், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் காவல்துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் காவல்துறைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது தடியடி நடத்தக் கூடாது என்றும் அவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும், திரும்ப திரும்ப தவறு செய்பவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட போக்குவரத்து பிரிவின் சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை கூறியது.
இதனையடுத்து, பெங்களூரில் இன்று காவல்துறையினர் அனைவரும் சாதுக்களாக மாறி, ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவற்றை கொண்டு நெற்றியில் திலகமிட்டும், மாலையணிவித்தும், கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டியும், வாகனங்களில் வந்தவர்களை கூனி குறுகிப் போக செய்துவிட்டார்கள்.
விதியை மீறியவர்களுக்கு உண்மையாகவே நடத்திய பூஜை வழிபாட்டை செல்போனில் படம் பிடித்து, பெங்களூருவில் உள்ள அனைத்து கைபேசி வாடிக்கையாளர்களின் வாட்ஸ் அப் குரூப்பிலும் அனுப்பி வைத்தனர்.
கரடு முரடனான கர்நாடக போலீசார், ஒருநாளில் பரம சாதுவாக மாறி பூஜை யுக்தியை கையில் எடுத்தது எப்படி.,, இந்த ஐடியாவை கொடுத்த புண்ணியவான் யார் என்றும் பெங்களூரில் உள்ள இளைஞர்கள் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்….