Sat. Nov 23rd, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கொரோனோ நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, ZOHO நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குமார் வேம்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, ரூ.5 கோடிகளை வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பரவிய கொரோனோ தொற்றை விட நடப்பாண்டில் தொற்றின் வேகம் அதிமாக இருக்கிறது. குறிப்பாக இளம்தலைமுறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களாக அதிகரித்து வருவதால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

நோய் தொற்று பாதிப்போடு வருபவர்களுக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சை மையங்களை, தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்களில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உருவாக்கி வருகிறது. எதிர்பாராத இந்த பேரிடரை சமாளிக்க, பொருளாதார நிலையில் உயர்த்து இருப்பவர்கள், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி செய்யுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்று பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிதியுதவி வழங்கி வரும் நிலையில் நேற்றைய தினம் நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியை நடிகர்கள் சூர்யா, கார்த்திக் மற்றும் சிவக்குமார் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர்.

தொடர்ந்து, திமுக.வும் ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று ZOHO நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குமார் வேம்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, ரூ.5 கோடிகளை வழங்கியுள்ளார்.