தமிழகத்தில் எதிர்பார்த்தைவிட கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் இணைந்து தங்களது முழு சக்தியையும் பயன்படுத்தி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களை உருவாக்கி வந்தாலும், அதை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு கொரோனோ தொற்று பரவல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த பேரிடர் காலத்தில் அரசின் பொருளாதார சக்திக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்தாலும், வரும் காலங்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய சிகிச்சைகளை வழங்க, தனியாரின் பங்களிப்பும் அவசியமாகி இருக்கிறது.
இந்த இக்கட்டான நேரத்தில், பொருளாதார வசதி படைததவர்கள், அரசுக்கு நிவாரண நிதி வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் பல்வேறு தரப்பினர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது, நடிகர் சிவகுமார், அவரது மகன்களும் பிரபல நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்கினார்கள்.
அவர்களிடம் இருந்து நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் சிவக்குமார் மற்றும் சூர்யா, கார்த்திக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
முதல்வருடான சந்திப்பின் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் உடனிருந்தார்.
திரையுலக பிரபலங்களில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்தான் முதன் முதலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதி அளித்துள்ளனர்.
பேரிடர் காலத்தில் அரசிற்கு உதவும் வகையில் மூவரும் மனமுவந்து நிவாரண நிதி வழங்கியுள்ளதால், அவர்களைப் பின்பற்றி வரும் நாட்களில் திரையுலக பிரபலங்கள் பலரும் நிவாரண நிதியை வாரி வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.