Sat. Nov 23rd, 2024

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைரவாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித்தலைரவாக அவரே பதவியேற்கவுள்ளார். தனது எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அதிருப்தியடைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக சட்டமன்றத்தில் தேர்தலில் தனித்து பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் (125) பெற்றதையடுத்து, ஆட்சியமைத்துள்ளது திமுக. 65 தொகுதிகளில் வெற்றிப் பெற்ற அதிமுக, எதிர்க்கட்சி இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள அதிமுக.வுக்கு அமைச்சருக்கு உரிய அதிகாரத்தோடு கூடிய மரியாதை கிடைக்கும். அதனால், அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக யார் தேர்வு செய்யப்படுகிறார்களோ,அவர்களே எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட முடியும் என்பதால், இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தால், எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தனக்கு தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கைக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த 7 ஆம் தேதி இரவு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இடையே கருத்து மோதல் எழுந்ததால், எந்த முடிவும் எடுக்காமல் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள், ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இ.பி.எஸ்.ஸை வாழ்த்தியும் முழக்கங்களை எழுப்பினார்கள் கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள்.

இதனிடையே, கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் எல்லோரும் நினைவிடத்திற்குச் சென்று சேர்ந்த பிறகு 15 நிமிடத்திற்கு மேல் காலதாமதமாகவே ஓ.பன்னீர்செல்வம் அங்கு வந்தார். அப்போதும், இருதரப்பு ஆதரவாளர்களும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால், அங்கும் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்வு செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், எம்.எல்.ஏ.க்களிடையே தேர்தல் வைத்து, எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்வு செய்து கொள்வோம் என்று இ.பி.எஸ். தரப்பில் இருந்து ஓ.பி.எஸ்.ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இ.பி.எஸ்.ஸை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டால் தாம் தோற்றுவிடுவோம் என்பதை உணர்ந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், அரைகுறை மனதோடு எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய ஒப்புக் கொண்டார்.

அதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சட்டமன்றக் கூட்டம் முறைபடி தொடங்கியவுடன் எதிர்க்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொள்வார்.