அதிமுக.வின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது 99 சதவிகிதம் உறுதியாகிவிட்டதாக, அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள்.
தர்மயுத்த நாயகன் திட்டமிட்டு செய்யும் சதிச் செயல்கள் எல்லாம், அதிமுக தலைவர்களுக்கு மட்டுமல்ல, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதாக கொதிப்போடு பேசுகிறார்கள் இ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
கடந்த 7 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பெரியளவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு எழவில்லை. தொடக்கம் முதல் கடைசி நிமிடம் வரை முன்னாள் சபாநாயகர் மறைந்த பி.ஹெச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு இருந்தார்.
அன்றைய கூட்டத்திலேயே எம்.எல்.ஏ.க்களிடையே தேர்தல் நடத்தி யார் எதிர்க்கட்சித்தலைவர் என்பதை முடிவு செய்யலாம் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாரானபோது, தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, அதிமுக அலுவலகத்தில் கோஷ்டி மோதல் என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம் என்று ஆவேசமாக பேசுகிறார்கள் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர்.
தனக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக நினைத்து, அதிமுக.வை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டும் வடமாவட்ட அதிமுக நிர்வாகிகள், எதிர்க்கட்சித்தலைவராக இ.பி.எஸ்.ஸை தேர்ந்தெடுக்க பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. தற்போதைய சூழ்நிலையில், 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு செய்ய தயாராகவே இருக்கிறார்கள்.
மற்ற எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் இன்றி ஒருமனதாக எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பேசி வருகிறார்கள். அதுவும், தர்மயுத்தம் நடத்தியபோது, ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமியே, எதிர்க்கட்சித்தலைவராக தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்ற ஓ.பி.எஸ்.ஸின் கருத்துக்கு எதிராகதான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தேர்தலில் செலவழிக்கப்பட்ட பணம் எல்லாம் கட்சிப் பணம் தானே, இ.பி.எஸ்.ஸின் சொந்த பணமா ? என்ற கேள்வியை எழுப்பும் ஓ.பி.எஸ். தரப்பினருக்கு சுடச்சுடச் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் இ.பி.எஸ்., ஆதரவு தலைவர்கள்.
கடந்த 4 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியத்தை வைத்துக் கொண்டு பல நூறு கோடியை ரூபாயை சுருட்டிய ஓ.பி.எஸ்., கட்சி நிதியாக எவ்வளவு பணம் கொடுத்தார், கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக நிர்வாகிகளுக்கு என்னவெல்லாம் சலுகைகளை வழங்கினார், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது எத்தனை அதிமுக வேட்பாளர்களுக்கு அவரது சொந்த பணத்தில் இருந்து நன்கொடை கொடுத்தார் என்றெல்லாம் நாங்கள் கேள்வி எழுப்பினால், அவரது மானம் கப்பலேறிவிடும் என்று ஆவேசமாக பேசுகிறார்கள் கொங்கு மண்டல அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
தனக்கு ஒரு கண் போனாலும் எதிராளிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற நல்ல மனதுடன் ஓ.பி.எஸ். அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்கவில்லை என்றால், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக.வில் பிளவு ஏற்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவரின் இந்த அரசியல் சித்துவிளையாட்டு எல்லாம், எடப்பாடி பழனிசாமியிடம் எடுபடாது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வுக்கு கிடைத்தது அவமானகரமான தோல்வி அல்ல. எடப்பாடி பழனிசாமி தலைமையை அதிமுக.வினர் மட்டுமல்ல மக்களும் விரும்புகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகதான் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. பாஜக இல்லாமல் தேர்தலைச் சந்தித்து இருந்தால், அதிமுக மீண்டும் ஆட்சியை அமைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கும்.
வெகு விரைவாக உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதில் அதிமுக மகத்தான வெற்றிப் பெற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று கொண்டு செயல்படுவதுதான் ஓ.பி.எஸ்.ஸின் எதிர்கால அரசியலுக்கு நல்லதாக இருக்கும். அதைவிட்டுவிட்டு குறுக்குப் புத்தியோடு செய்தால், அவரது தலையில் அவரே மண்ணைக் அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாக தான் இருக்கும்.
ஓ.பி.எஸ்.ஸின் எந்தவிதமான சதித்திட்டதையும் எதிர்கொள்ள இ.பி.எஸ்.தலைமையிலான போர்ப்படை தயாராகவே இருக்கிறது என்று ஆவேசம் அடங்காமல் பேசுகிறார்கள் அதிமுக முன்னணி தலைவர்கள்.
ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுவது மற்றும் மதுபானக் கடைகள் மூடுவது தொடர்பாக திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டவுடனேயே, அக்கட்சியோடு கூட்டணி வைத்திருந்த கட்சிகளே நன்றி தெரிவித்தோ, பாராட்டு தெரிவித்தோ அறிக்கைகள் விடவில்லை.
ஆனால், ஓ.பி.எஸ். முந்திக் கொண்டு திமுக அரசை பாராட்டி அறிக்கை விடுகிறார். அப்படியொரு அறிக்கை வெளியிடுவது குறித்து இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியிடமோ, மற்ற அதிமுக முன்னணி தலைவர்களிடமோ ஓ.பி.எஸ். கலந்து ஆலோசிக்கவே இல்லை.
தன்னை மிகப்பெரிய அரசியல் ராஜதந்திரியாக என்று நினைத்துக் கொண்டு அவர் செய்யும் கோமாளித்தனத்தை எல்லாம் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அதிமுக நிர்வாகிகள். நாங்களும் அவர் எந்தளவுக்கு செல்வார் என்று விட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அம்மாவுக்கு விசுவாசமாக இல்லாமலும், அதிமுக.வுக்கு துரோகம் இழைப்பதற்கு அவர் துணிந்தாலும், பாழும் கிணற்றில் போய் அவராகவே போய் விழுவதை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று நெற்றிக்கண்களை திறக்கிறார்கள் இ.பி.எஸ். ஆதரவுத்தலைவர்கள்…