Sat. Nov 23rd, 2024

சிறப்புச் செய்தியாளர் ……..

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் எதைச் செய்தாலும் பாராட்டுவதற்கு என்று ஒரு கூட்டம் இருப்பதைப்போலவே, அதனை விமர்ச்சிப்பதற்கு இருக்கும் கூட்டமும் சமபலத்துடனேயே இருக்கிறது.

தமிழகம் எத்தனேயோ தலைமைச் செயலாளர்களின் நியமனத்தைப் பார்த்து இருக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.ஸுக்கு கிடைத்து வரும் பாராட்டுகளைப் போல, இதற்கு முன்பு பதவி வகித்தவர்களுக்கு கிடைத்திருக்கிறதா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக மட்டும் இருந்திருந்தால், இந்தளவுக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்குமா? என்பதும் சந்தேகமே..அவரின் குடும்ப பின்னணி, எழுத்துப்பணி, இலக்கியச் சொற்பொழிவுகள், உதவும் குணம், பதவிக்காக ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்து கொள்ளாத மனப்பான்மை போன்றவைகளால்தான், இன்றைக்கு அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களும் இறையன்பு ஐஏஎஸ்.ஸை இடைவெளியில்லாமல் கொண்டாடி கொண்டிருக்கிறன.

அவருக்கு இணையாகவே, முதலமைச்சர் அலுவலக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரன் ஐஏஎஸ்.ஸையும் சமூக ஊடகங்கள் கொண்டாடி வருகின்றன.

அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர் மீது அளவுக்கடந்து வீசப்படும் ஒளி (புகழ்) வெளிச்சத்தால், மற்ற துறைகளில் பணிபுரியும் நேர்மையாளர்களைப் பற்றிய செய்திகள், பரவலான கவனத்தை பெற முடியாத ஆபத்தும் இருக்கிறது.

அப்படிபட்டவர்களில் ஒருவர்தான், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரைக்கண்ணன் ஐபிஎஸ்.. 1987 ஆம் ஆண்டில் துணை காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற நாள் முதல், அதிரடியான நடவடிக்கைகளால், அவர் பணிபுரிந்த ஊர்களில் எல்லாம் பொதுமக்களின் பாராட்டுக்களை தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளார்.

1993 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அந்தஸ்து பெற்ற தாமரைக்கண்ணன், துறை ரீதியிலான பதவி உயர்வுகளை அதற்குரிய காலங்களில் படிப்படியாக பெற்று வந்தவர், இன்றைக்கு கூடுதல் காவல்துறை இயக்குனராக (அடிஷனல் டைரக்டர் ஆப் போலீஸ்), தமிழக காவல்துறையில் செல்வாக்கு மிக்க இரண்டாம் இடத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரின் பெயரைக் கேட்டாலே, கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் அஞ்சி நடுங்குகிறார்கள். டெரர் ஆபிசர் என்று பயம் விலகாமலேயே பேசுகிறார்கள். எந்தப் பதவியில் தன்னை நியமித்தாலும், அந்தப் பிரிவின் கீழ்மட்டம் வரை தனது நேரடி பார்வையை செலுத்தி, தன் கீழ் உள்ள காவல்துறை அலுவலர்களை விரட்டி விரட்டி வேலைவாங்குவது அவரது பிறவிக்குணமாகவே அமைந்துள்ளது என்கிறார்கள் அவரிடம் இருந்து அத்தி பூத்தாற் போல பாராட்டுக்களைப் பெற்ற எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவர்.

தனது தலைமையை ஏற்றுப் பணிபுரியும் காவல்துறை அலுவலர்கள் எந்த தப்பும் செய்யக் கூடாது, நேர்மையாகவும், விழிப்புணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்பதை தராக மந்திரமாக கொண்டிருக்கும் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஐபிஎஸ்., யாராவது தவறு செய்தால், அதை தெரிந்தே செய்தால், அவர்கள் தனது அன்பிற்கு பாத்திரமானவர்களாக இருந்தாலும் சரி, பின்னணி செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தாலும் சரி, துறை ரீதியிலான தண்டனை வழங்குவதற்கு ஒருநிமிடம் கூட யோசிக்கவே மாட்டார் என்று இன்றைக்கும் அதிர்ச்சி விலகாமலேயே பேசுகிறார் அவரால் 10 ஆண்டுகளுக்கு முன்பு தண்டிக்கப்பட்ட காவல்துறை அலுவலர் ஒருவர்.

நடிகர் விஜயகாந்த், ரமணா படத்தில் சொல்வதைப் போல, மன்னிப்பு என்ற வார்த்தையையே விரும்பாதவர் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் என்பதுடன், காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், அதாவது மாமூல் வசூலிப்பது, லஞ்சம் கொடுத்தால்தான் கடமையையே செய்வேன் என்று திமிரோடு திரியும் காவல் அதிகாரிகளை எல்லாம் விரட்டி விரட்டி வெளுக்கும் குணம் படைத்தவர் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் என்கிற குரல் பரவலாகவே கேட்கிறது.

சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல், உளவுத்துறை, சிபிசிஐடி என பல்வேறு துறைகளில், அதுவும் சென்னையிலேயே அதிக ஆண்டுகள், பணிபுரிந்து இருப்பதால், திமுக மட்டுமின்றி அதிமுக.விலும் முன்னணி தலைவர்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர் கூடுதல் டிஜிபி. அரசியல் தொடர்பு இருந்தாலும் கூட, தனது மனசாட்சி சொல்கிற படிதான் வேலை பார்ப்பாரே தவிர, யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிந்து ஒருபோதும் நடந்து கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கை 100 சதவிகிதம் இருப்பதால்தான், டெரர் ஆபிசராக இருந்தாலும் கூட அவரின் தலைமையின் கீழ் பணியாற்ற நேர்மையான அதிகாரிகள் இன்றைக்கும் தயாராகவே இருக்கிறார்கள்.

பொதுவாகவே, திமுக ஆட்சி என்றால் காவல் நிலையங்களில் திமுக நிர்வாகிகளின் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விடும் என்ற விமர்சனம் எழுவது உண்டு. பத்தாண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாத போதும் இன்றைக்கும் கூட அந்த விமர்சனம் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அந்த பேச்சு இனிமேல் தமிழகத்தின் எந்த மூலை முடுக்கிலும் எழாதவாறு பார்த்துக் கொள்வார் கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரைக்கண்ணன் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள் அவரின் கீழ்பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள்.

நிறைவாக தலைப்புக்கு வருகிறேன்…2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி. அப்போது சென்னையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் தாரைக்கண்ணன் ஐபிஎஸ். 2009 ம் ஆண்டில் ஈழப்போர் முடிவுக்கு வந்த பிறகு சென்னையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சீமான் தலைமையிலும் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலம். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சீமானை அனுமதித்தனர் காவல்துறையினர். ஆனால், தடையை மீறி தலைமைச் செயலகத்திற்குச் செல்வேன் என்று சீமான் சீற்றம் காட்ட, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள், அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அவர் அமைதியாகவில்லை. கீழ்நிலை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத சூழலில், தகவல் அப்போதைய இணை ஆணையர் தாமரைக்கண்ணனுக்கு தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வு இடத்திற்கு வந்த அவர், காரில் அமர்த்தபடியே, கடைசி வாய்ப்பாக மீண்டும் ஒரு முறை சீமானிடம் பேச சொல்கிறார். அப்போதும் உடன்படாததால், வேறுவழியின்றி சீமான் மற்றும் அவருடன் வந்தவர்களை கைது செய்ய உத்தரவிட, சீமான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுகின்றனர்.

காவல்துறை அதிகாரி தாமரைக்கண்ணன் ஐபிஎஸ்.ஸுக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடாது. எல்லை மீறுவோரை லத்தியால் அடித்து விரட்ட ஒரு நிமிடம் கூட யோசிக்க மாட்டார் என்பதுதான், அவரின் ஒட்டுமொத்த காவல்துறையின் பயணத்தில் எழுதப்படாத தீர்ப்பாக உள்ளது.

ஆளும்கட்சி திமுக நிர்வாகிகளே உஷார்.. அதைவிட உஷராக இருக்க வேண்டியவர்கள் லஞ்ச மழையில் நனைந்து கொண்டிருக்கும் தமிழக காவல்துறை அலுவலர்கள்தான்…

கட்டுரை விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் சீமானின் கைது நிகழ்வை சுட்டிக்காட்டினேன். மற்றபடி இன்றைய தமிழகத்திற்கு டெரர் ஆபிசர்ஸ்தான் அதிகமாக தேவை….நேற்று வரை நிலப் புரோக்கராக இருந்தவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் பதவியை வாங்கிக் கொண்டு நேரடியாக போகிற இடம் காவல்நிலையங்களாகதான் இருக்கிறது.

அவர்களின் வாலை எல்லாம் ஒட்ட நறுக்க தில்லு உள்ள காவல்துறை உயரதிகாரிதான் தமிழகத்திற்கு தேவை. ரவுடி ராஜ்ஜியததை ஒழித்தது திமுக என்ற நற்பெயரை உருவாக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
பட்டையை கிளப்புங்க கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஐபிஎஸ் சார்…