Sat. Nov 23rd, 2024

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி 48 மணிநேரம் கூட கடந்துவிடவில்லை, அதற்குள் அதிமுக.வில் கோஷ்டிப் பூசல் தலை தூக்கிவிட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒரு கூட்டமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் திரள ஆரம்பித்திருக்கிறது.

அதிமுக.வில் கோஷ்டிப் பூசல் கானம் உரத்து கேட்பதற்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பவர் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி. 2016ல் ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கிய போது முதல் ஆளாக வீராவேசமாக குரல் கொடுத்து, அவருக்கு ஆதரவாக நின்றவர் கே.பி.முனுசாமி.

எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக அதிமுக நிர்வாகிகளை ஓ.பி.எஸ். பக்கம் திருப்ப, கடுமையாக போராடியவரும் அவரே. ஆனால், 2017ல் டிடிவி தினகரன் விலக்கி வைக்கப்பட்ட பிறகு, இ.பி.எஸ்.அணியுடன் ஓ.பி.எஸ் அணி இணைந்த போது, தனது சுயநலத்திற்காக மட்டுமே ஓ.பி.எஸ்.ஸையும், இ.பி.எஸ்.ஸையும் மாறி மாறிப் பயன்படுத்திக் கொண்டு அதிமுக.வில் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், கே.பி.முனுசாமி என்றும் அதிமுக.வில் ஒருதரப்பினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இருவருக்கும் பாலமாக இருப்பது போல நடித்து வந்த கே.பி.முனுசாமி, ஒரு கட்டத்தில் இ.பி.எஸ்.ஸின் ஆதரவாளராகவே மாறிவிட்டதைப் போல காட்டிக் கொண்டார். அவரின் விசுவாசத்தில் சொக்கிப் போன இ.பி.எஸ், ராஜ்யசபா எம்.பி. பதவியை, கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்த போதும் கே.பி.முனுசாமிக்கு தூக்கி கொடுத்தார்.

இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்து தான்தான் அதிமுக.வில் பவர் ஃபுல் மனிதர் என்ற தோற்றத்தை தானாகவே வலிந்து கட்டமைத்து, மற்ற அமைச்சர்களையும், முன்னணி தலைவர்களையும் ஏகத்துக்கு விரட்டிக் கொண்டிருந்தார்.

அவரின் ஆட்டத்தை இ.பி.எஸ்.ஸுக்கும் கண்டுகொள்ளவில்லை. சட்டமன்றத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட கூட்டணியில் சாதிப் பாசத்தோடு நடந்து கொண்ட கே.பி.முனுசாமி, அதிமுக கூட்டணியில் பாமக.வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காய்நகர்த்தி, அதில் வெற்றியும் பெற்றார்.

அதேநேரத்தில், தேமுதிக.வை அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிட மறைமுகமாக பல தில்லுமுல்லுகளை செய்து பிரேமலதா, சுதீஷ் ஆகியோரை வெறுப்பு ஏற்றினார். இதனால் மனம் நொந்து போன இருவரும், இ.பி.எஸ்.ஸை கடுமையாக வசைப்பாடிவிட்டு, இ.பி.எஸ்.ஸை பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையோடு அமமுக.வுடன் கூட்டணி அமைத்தனர்.

தேமுதிக.வையும் கூட்டணியில் சேர்த்திருந்தால், அதிமுக.வுக்கு கூடுதலான வெற்றிக் கிடைத்திருக்கும் என்று கூறும் அதிமுக.வில் ஒருதரப்பினர், அதிர்ஷ்டம் கை கொடுத்திருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் கூட ஏற்பட்டிருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்படி ஆட்சி அமைக்கும் வாய்ப்பையே அதிமுக இழப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த கே.பி.முனுசாமி, நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு, அதே வேகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு போடி சென்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.

முன்னதாக சேலத்தில் எடப்பாடியுடனான சந்திப்பின் போதே, கே.ஏ.செங்கோட்டையனை எதிர்க்கட்சித் தலைவராக்குவது தொடர்பாக கே.பி.முனுசாமியிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது எந்த கருத்தும் சொல்லாத கே.பி.முனசாமி, ஓ.பி.எஸ்.ஸிடம் நடத்திய ஆலோசனையின் போது எடப்பாடி தரப்பில் கே.ஏ.செங்கோட்டையனை எதிர்க்கட்சித் தலைவராக முன்னிறுத்தினால், உங்கள் தரப்பில் (ஓ.பி.எஸ்) என்னை (கே.பி.முனுசாமி) எதிர்க்கட்சித் தலைவராக முன்னிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விஷயம் கசிந்தவுடன் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். நேற்று வரை நம்முடன் இருந்து கொண்டு அனைத்துவிதமான ஆதாயங்களையும் அனுபவித்துவிட்டு ஒரே நாளில் துரோகியாகிவிட்டாரே கே.பி.முனுசாமி என்று கொதிக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்.

அதிமுக.வின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வமோ, வேறு யாராவது ஈடுபட்டாலோ அவர்களை கட்சியில் இருந்தே தூக்கியெறிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம் காட்டி வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்து அதிமுக.வில் கோஷ்டிப் பூசல் தொடங்கிவிட்டதை கண்டு தோல்வியில் இருந்து இன்னும் மீண்டு வராத முன்னாள் மாண்புமிகுகள் நொந்து போய் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பதில் உறுதியாக இருப்பதை வெளியுலகத்திற்கு காட்டும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட்டு சேலம் சென்று இ.பி.எஸ்.ஸுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பி.தங்கமணி, வளர்மதி, கருப்பண்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, சூடாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தின் போது தனிமனிதராக இருந்த ஓ.பி.எஸ்.ஸை, தூண்டி விடுவதற்காகவே கே.பி.முனுசாமி ஆள்பலம், படை பலத்தை திரட்டுகிறார். நம்பிக்கை துரோகியாக மாறிவிட்ட கே.பி.முனுசாமியை இனியும் மன்னிக்க கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலர் அனல் கக்கும் வகையில் பேசினார்களாம்.

அதிமுக முக்கிய கட்டத்தை நோக்கி பயணமாகும் நேரத்தில், எஸ்.பி.வேலுமணி ஒதுங்கியிருப்பது நல்லதல்ல என்று கவலைப்பட்ட எடப்பாடி பழனிசாமி, வேலுமணியை தேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளாராம்.

திமுக ஆட்சியைக் கண்டு பயந்து கிடக்கும் எஸ்.பி.வேலுமணியை ஆறுதல்படுத்தி, திமுக எந்தவிதமான நெருக்கடி கொடுத்தாலும் தைரியமாக எதிர்கொள்வோம். அதற்கு ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று ஆறுதல் வார்த்தைகளை கூறி, கோவையில் இருக்கும் எஸ்.பி.வேலுமணியை கையோடு அழைத்து வர சேலத்தில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவரை கோவைக்கே அனுப்பி வைத்திருக்கிறாராம், இ.பி.எஸ்.

எதிர்க்கட்சித் தலைவராக கே.ஏ.செங்கோட்டையனை நியமிப்பது தொடர்பாக எஸ்.பி.வேலுமணியிடமும் இ.பி.எஸ். விரிவான ஆலோசனை நடத்த விரும்புகிறார் என்கிறார்கள், சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள். தேர்தல் தோல்விக்குப் பிறகு இதுவரை செய்தியாளர்களையே சந்திக்காத எடப்பாடி பழனிசாமி, தனது வீட்டிற்கு செய்தியாளர்கள் வருவதற்கே தடை விதித்து இருக்கிறார்கள்.

தங்கள் கண்ணில் படாமல், மறைந்திருந்து புகைப்படக் கலைஞர்கள் யாராவது தனது வீட்டுக்கு வரும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை புகைப்படம் எடுத்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் எடப்பாடி பழனிசாமி, தனது வீடு உள்ள சாலையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அதிமுக நிர்வாகிகளை நியமித்திருக்கிறாராம்.

கலர் கலரான மைக்கை பார்த்த போதெல்லாம் சிரித்துக் கொண்டே பேட்டி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, ஊடகத்தை கண்டாலே இப்போது பயப்படுகிறார்.

பரிதாபம்தான்…