Fri. Nov 22nd, 2024

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக பெற்ற மகத்தான வெற்றியை கடந்த 24 மணிநேரத்திற்கு மேலாக மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், உற்சாமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் மட்டுமே வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில், அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற சேலம் மாநகர மத்திய மாவட்டச் செயலாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான வழக்கறிஞர் ஆர். ராஜேந்திரன் மட்டுமே மீண்டும் வெற்றிப் பெற்றுள்ளார். எஞ்சிய பத்து தொகுதிகளிலும் திமுக ( ஓமலூர் காங்கிரஸ் வேட்பாளர் போட்டி) தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.

இதில், முக்கியமாக, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த ஊரான பூலாவரியை உள்ளடக்கிய வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட, அவரது மகன் வழி மருமகன் மருத்துவர் தருணும் தோல்வியை தழுவினார். அந்த தோல்வியை கொண்டாடும் விதமாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் மகன் பாரப்பட்டி சுரேஷ்குமாரின் ஆதரவாளர்கள் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் நேற்று மாலை வீரபாண்டி தொகுதி முழுவதும் ஆரவாரத்தோடு சுற்றி வந்து திமுக வெற்றியை வெகு விமர்ச்சையாக கொண்டாடியுள்ளனர்.

வெளிப்பார்வைக்கு திமுக.வின் மகத்தான வெற்றியும், முதல்வராக பதவியேற்கவுள்ள அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்வதற்காகவும் நடத்தப்பட்ட கொண்டாட்டங்கள் மாதிரி காட்டிக் கொள்ளப்பட்டாலும், அந்த வெற்றி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரின் முகத்திலும் மருத்துவர் தருணை தோற்கடிக்கப்பட்டதற்கான கொண்டாட்டமாகவே அமைந்திருந்தது என்று மனம்நொந்து பேசுகிறார்கள் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள்.

மற்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், சேலம் மாவட்டத்திற்கு ஏற்பட்ட அவமானத்தில் இருந்து மீள முடியாத நிலையில், சிறிய அளவில் மட்டுமே பட்டாசு வெடித்து, ஒட்டுமொத்த திமுக வெற்றியை கொண்டாடியுள்ளனர். திமுக.வுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே அவப்பெயரை தேடி தந்துவிட்ட பாரப்பட்டி சுரேஷ், இப்போதும் அட்டகாசம் செய்து வருவதை பொறுக்க முடியாமல் ஆவேசமாக பேசுகிறார்கள் சேலம் முன்னணி திமுக நிர்வாகிகள்…

சேலம் மாவட்டத்தில் திமுக இன்றைக்கு அடைந்திருக்கும் மிகப்பெரிய பின்னடைவுக்கு முழுக்க, முழுக்க காரணகர்த்தாவே பாரப்பட்டி சுரேஷ்குமார்தான். கடந்த 2010 ஆம் ஆண்டு சேலத்தில் ஓய்வுப்பெற்ற காவல் ஆய்வாளர் குப்புராஜை உள்ளடக்கி அவரது குடும்பத்தில் ஆறுபேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வில், பிரதான குற்றவாளியாக வழக்கில் சிக்கியவர் சுரேஷ்குமார்.

மருத்துவர் தருண்….

4 ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகு 2014ல் சுரேஷ்குமார் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், கொலை நிகழ்வுக்கு முன்பாக குப்புராஜும் அவரது மகன் ரத்தினமும் கொடுத்த பல்வேறு பேட்டிகள் மூலம் சுரேஷ்குமாரைதான் கொடூர மனிதராக அடையாளம் காட்டியிருந்தார்கள்.

2010 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் திமுக.வின் செல்வாக்கு சேலம் மாவட்டத்தில் மளமளவென சரிந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகும் சரிந்த செல்வாக்கை தூக்கி நிறுத்த முடியவில்லை என்பதற்கு உதாரணமாகதான் இன்றைக்கு வெளியான தேர்தல் தீர்ப்பு இருக்கிறது.

இப்படிபட்ட நேரத்திலும், வீரபாண்டி தொகுதியில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காமல், மருத்துவர் தருணுக்கு வாய்ப்பு அளித்த திமுக தலைமை மீது கோபத்தை நேரடியாக காட்ட முடியாத சுரேஷ்குமார் உள்ளிட்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் நேரடி வாரிசுகள், மருத்துவர் தருணின் தோல்வியை நேற்று உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். வீரபாண்டி தொகுதி முழுவதும் களேபரத்தை ஏற்படுத்திய இந்த வெற்றி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எல்லாம் சுரேஷ்குமார் வீட்டில் நேற்றிரவு செம விருந்தும் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் தருணை மறைந்த பேராசிரியர் அன்பழகனிடம் அறிமுகப்படுத்தும் வீரபாண்டி ஆறுமுகம்….

கொங்கு மண்டலத்தில் விழுந்து கிடக்கும் திமுக.வை தூக்கி நிறுத்துவதற்கு தேவையான அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் முன்பாகவே சேலம் மாவட்டத்தில் திமுக.வின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருககும் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள், விசுவாசிகளை தயவுதாட்சண்யம் இன்றி தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக குரல் கொடுக்கிறார்கள் உண்மையான திமுக விசுவாசிகள்.

பாரப்பட்டி சுரேஷ்குமார்…

இல்லையென்றால், உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது மாதிரி, திமுக வண்ணத்தில் வேட்டியை கட்டிக் கொண்டு, திமுக காரராக வேடம் தரித்துக் கொண்டு திமுக ஆட்சியில் ஆதாயம் அடைவதற்காக பெரும் திரளாக வருவார்கள். அந்தக் கூட்டத்தில் சிக்கி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மீது உண்மையாக பக்தி கொண்டவர்களும், அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி காலத்து விசுவாசிகள் எல்லோரும் செல்லா காசாகி விடுவார்கள் என்ற ஆதங்கத்தோடு பேசி வருகிறார்கள் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள்.

One thought on “திமுக தோல்வியை கொண்டாடிய வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவுகள்.. பாரப்பட்டி சுரேஷ் வீட்டில் செம விருந்து…இது சேலம் கலாட்டா…..”
  1. […] எம். எல். ஏ. வின் ஆதரவாளர்கள்… திமுக தோல்வியை கொண்டாடிய வீரபாண்டி ஆ… வீரபாண்டியார் குலக் கொழுந்து […]

Comments are closed.