Sat. Nov 23rd, 2024

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியவுடன் அஞ்சல் வாக்குகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவிட்டது. தொடர்ந்து வாக்குகள் பதிவான எந்திரங்களின் சீல்கள் அகற்றப்பட்டு ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

முதல் மற்றும் இரண்டு சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே காலை 10 மணியளவில் திமுக 109 தொகுதிகளிலும் காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் சிபிஐ 2 சிபிஎம் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் திமுக கூட்டணி 135 இடங்களில் முன்னிலை பெற்று தொடர்ந்து முன்னிலையிலேயே இருப்பதால், திமுக தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது.

அதிமுக 80 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் பாமக 8 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதன் மூலம் அதிமுக வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் நிலை உருவாகியுள்ளது.

தொடர்ந்து ஒவவொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நண்பகல் ஒரு மணிக்கு மேலாக திமுக.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமடைய தொடங்கியது. பகல் 2 மணியளவில் 146 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலைப் பெற்றுள்ளது. திமுக தனித்தே 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இன்னும் 3 இடங்களை திமுக கைப்பற்றினால், அக்கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுவிடும். அதற்கான சூழல் பிரகாசமாக இருப்பதாக தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக.வும் அதன் கூட்டணியும் காலை நேரத்தில் முன்னணியில் இருந்த பல இடங்களில், திமுக.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முன்னேறி, அதிமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 156 இடங்களிலும் 124 இடங்களில் திமுக தனித்தும் முன்னிலையில் உள்ளது. ஆளும்கட்சியான அதிமுக 68 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 78 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.

இந்த மாற்றம், தொடர்ந்து இருக்கும் என்றும், மாலை 6 மணிக்குள் தெளிவான முடிவுகள் வெளியாகிவிடும் என்றும் அரசியல் கள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.