Sat. Nov 23rd, 2024

சிறப்புச் செய்தியாளர் …

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்றிரவு வெளியான நிமிடத்தில் இருந்து தமிழகத்தில் அரசியல் பரபரப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது.

காட்சி ஊடகங்கள், எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பை வைத்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை காலத்தை ஓட்டி விடுவார்கள். எக்ஸிட் போல் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லையா? என்ற கேள்வி எழும்போது, அதிமுக ஆட்சியை இழக்கும். திமுக ஆட்சிக்கு வரும..அவ்வளவுதான். இப்படிதான் மாற்றம் இருக்கும் என்ற மனநிலைக்கு நான் வந்து 8 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த எண்ணவோட்டத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலையோடு பார்த்தால், மே 2 ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பாலும், தேனும் ஓடும் என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு சுத்தமாக கிடையாது.

எட்டு மாதங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி வசமிருக்கும் துறைகளில் ஒன்றை நிர்வகித்து வரும் 20 ஆண்டுகளுக்கு மேலான அறிமுகமுடைய ஐஏஎஸ உயரதிகாரி ஒருவரை சந்தித்தேன். கூடவே மற்றொரு ஊடக நண்பரும் வந்திருந்தார். வழக்கமான நலம் விசாரிப்புக்குப் பிறகு பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற கேள்விக்கு, அதிமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நான் சொன்னேன். அதனை ஆணித்தரமாக மறுத்த ஐஏஎஸ் அதிகாரி, திமுக.தான் ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.

ஐஏஎஸ் அதிகாரியை சந்திப்பதற்கு முன்பாக கொரோனோ தொற்று பரவலின் காரணமாக நான் எனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் இருந்தேன். அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் எடப்பாடி உள்ளது. எனது ஊரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜலகண்டாபுரம் என்ற ஊர் வழியாகதான் எடப்பாடிக்கு செல்ல வேண்டும். ஜலகண்டாபுரமும் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட ஊர்தான். இருசக்கர வாகனத்தில் எடப்பாடி தொகுதியை குறுக்கும், நெடுக்குமாக இருமுறை சுற்றி வந்தேன்.

கிராமங்கள் நிறைந்த எடப்பாடி தொகுதியில், சென்னை போன்ற மாநகரங்களுக்கான சாலை வசதிகள் அட்டகாசமாக இருந்தன. எடப்பாடி ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்த நன்மைகளில் சாலை வசதியும் ஒன்று. (அந்த திட்டத்தில்தான் குறுகிய காலத்தில் பதமாக கமிஷன் பார்க்கலாம் என்பது வேறு விஷயம்)

விவசாயமும் வஞ்சனை செய்யவில்லை. கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமாளிக்க முடியாத அளவிற்கு நெருக்கடிகள் இல்லை என்பதை கலந்துரையாடலில் அறிந்து கொள்ள முடிந்தது. அதேநேரத்தில், நகரப்புறங்களில் வேலையிழப்பு அதிகமாகி வருவாய் இழந்தவர்களின் துயரங்களை காது கொடுத்து கேட்க முடியாத நிலையில்தான் இருந்தது.

எனது அனுபவத்தின் அடிப்படையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். ஆனால், கூட்டணி கட்சிகளின் பலம், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவைவிட செல்வாக்கு மிக்க தலைவராக எடப்பாடி பழனிசாமி இல்லை, பத்தாண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்களிடம் இயல்பாகவே எழும் ஒருவிதமான அதிருப்தி அலை என்ற காரணிகளை அடுக்கி, திமுக.தான் ஆட்சிக்கு வரும் என்று உறுதியாக கூறினார், மூத்த ஐஏஎஸ் அதிகாரி.

கடந்த சில மாதங்களாக, அதிமுக அமைச்சர்களுக்கு எல்லா வகையிலும் உதவிக்கரமாக இருந்து வந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களை புலனாய்வு இதழ்கள் வெளியிட்டு வந்தன. அந்த பட்டியலில் நான் சந்தித்த உயரதிகாரியின் பெயர் இடம் பெறவில்லை என்பதில் எனக்கொரு நிம்மதி.

பிப்ரவரி 2 ஆம் தேதி என் மீது அன்பு கொண்ட மூத்த ஊடகவியலாளரின் அழைப்பின் பேரில் விருதுநகர் மாவட்டத்தில் கருத்து கணிப்பு மேற்கொள்வதற்காக சென்றிருந்தேன். 5 கல்லூரி மாணவர்களின் குழுவை மேற்பார்வையிடும் பணிதான் என்ற போதிலும், முதல்நாளே அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கோவில்பட்டியில்தான் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டோம். அன்றைய தேதியில் அமமுக வேட்பாளராக டிடிவி தினகரனே போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கவில்லை.

தீப்பெட்டி தயாரிப்பு, குடிசைத் தொழில் போல் மேற்கொள்ளப்பட்ட வீடுகள் நிறைந்த பகுதியில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் உண்மையாகவே கருத்துக் கணிப்பில்தான் ஈடுபடுகிறார்களா என்பதை பார்வையிடுவதற்காக ஒரு தெருவில் நடந்து சென்றேன். முதல் இரண்டு மூன்று வீடுகளை கடந்து நுழைவு வாயிலில் இரும்பு கதவு போட்ட ஒரு வீட்டில் இளம்வயது பெண்மணி தலை கண்ணில் பட்டது. கருத்து கணிப்பு கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பினேன். இல்லையே என்று கூறிவிட்டு வாசலை கடந்து வீட்டிற்குள் செல்ல முயன்றவரிடம், இரும்பு கதவை திறந்து உள்ளே நுழைந்து, கருத்துக் கணிப்புக்காக வந்திருக்கிறோம் என்றேன்.

வீட்டிற்குள் நடந்து சென்றவாரே எனது குரலை பிரதிபலித்தவாறே மறைந்து போனார் அந்த பெண்மணி. வீட்டு வாசலுக்கும் இரும்பு கேட்டுக்கும் இடையேயான பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. 65 வயது மதிக்கத்தக்க மனிதர் வந்தார். விவரத்தைச் சொன்னேன். கருத்துக் கணிப்புக்கான நோட்டீஸை வாங்கி அதில் பேனாவால் டிக் அடித்து நோட்டீஸை மடித்து கொடுத்தார். நாகரிகம் கருதி, அதை அங்கேயே பார்க்காமல், தெருவில் சிறிது நேரம் நடந்து சென்ற பிறகு எந்த சின்னத்தில் டிக் அடித்திருக்கிறார் என்று பார்த்தேன்.

மக்கள் நீதி மய்யம் என்று அச்சடிக்கப்பட்டிருந்த இடத்தில் டிக் அடித்திருந்தார். நான் ஆச்சரியப்பட்டு போனேன். அப்போது நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டாத நேரம். வசதியான, கல்வியறிவு உள்ள அந்த குடும்பத் தலைவருக்கு கமல்ஹாசன் மீது எப்படி நம்பிக்கை வந்தது ? பல வருடங்களாக தேர்தலில் பங்கெடுத்து, ஆட்சியாளர்கள் மீது சலிப்பு வந்துவிட்ட நிலையில், மாற்றத்தை விரும்பும் மக்கள், கமல்ஹாசன் கூறும் நேர்மையான ஆட்சி என்ற வார்த்தைகள் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேர்மையான ஆட்சி அமைந்து விடாதா?, ஊழலற்ற ஆட்சியை பார்த்து விட முடியாதா? என்ற ஏக்கம், வாழ்வின் நிறைவில் இருக்கும் மக்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை, விருதுநகர் மாவட்டத்தில் 10 நாட்கள் கருத்துக் கணிப்பில் ஈடுபட்ட போது புரிந்து கொள்ள முடிந்தது.

அனைத்து நாட்களிலும் கிராமங்களில்தான் சுற்றி வந்தோம். அதிமுக மீதான ஈர்ப்பு கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு குறையவே இல்லை என்பதும், இ.பி.எஸ்., எடப்பாடியார் என்ற வார்த்தையை குக்கிராமங்களில் உள்ள பெண்கள், பொதுமக்கள் உச்சரிப்பதையும் அதிர்ச்சியுடனேயே நான் கேட்டுக் கொண்டிருந்தேன். உணர்ச்சிக் கொந்தளிப்பில் அம்மாவை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடியார் என்பதை கேட்கும் துர்பாக்கியமும் எனக்கு ஏற்பட்டது.

அந்த வகையில், தேசியத் தலைவர்களால் ராஜதந்திரி என்று புகழப்பட்ட மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதியின் நிழலில் வளர்ந்தவர், அவரது மறைவுக்குப் பிறகு அவராகவே அடையாளப்படுத்தப்படும் 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு இணையாக தனது பெயரையும் மக்கள் உச்சரிக்கும் வகையில், அதுவும் நான்காண்டுகளில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றால், அது தேர்தல் வெற்றியை விட மகத்தானது என்றே நான் கருதுறேன்.

கிராமப்புறங்களில் திமுக.வை விட கூடுதலாக ஒன்றிரண்டு வாக்குகள் அதிமுக.வுக்கு கிடைத்துக் கொண்டே இருந்தன. கருத்துக் கணிப்புக்காக நாங்கள் கொடுத்த நோட்டீஸில், அமமுக.வின் குக்கர் சின்னமும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

10 நாள் கருத்துக் கணிப்பில் எனக்கு கிடைத்த அனுபவம், பத்தாண்டுகளுக்கு மேலான அரசியல் பயணத்தில் உள்ள டிடிவி தினகரன், நாம் தமிழர் சீமானை விட, இரண்டு ஆண்டுக்கு முன்பு கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் மீது மக்கள் அதிமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு, டிடிவி தினகரன் மற்றும் நடிகர் சீமானை விட அதிகமான வாக்குகள் நடிகர் கமல்ஹாசனுக்கு விழுந்திருந்தால், நான் அதிர்ச்சி அடைய மாட்டேன்.

அதிமுக.வின் செல்வாக்கு நகரப்புறங்களில் முழுமையாக சரிந்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான, முதன்மையான காரணமாக இரண்டை சொல்வேன். ஒன்று, பாஜக.வை தோளில் தூக்கி சுமந்தது. இரண்டாவது, கொரோனோ காலத்தில் நடுத்தர மக்களை நட்டாற்றில் விட்டது. அன்றாட சாப்பாட்டுக்கே திண்டாடிக் கொண்டிருந்த போது மதுபானக் கடைகளை திறந்தது. மதுபானக் கடைகளை மட்டும் திறக்காமல் இருந்தால், அதிமுக. இவ்வளவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது.

தலைப்புக்கு வருகிறேன்.. முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்களைப் பற்றி நிறைய விவாதங்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. 3 வது இடத்தைப் பிடிப்பவர் யார் என்ற கேள்விக்கு, எனது பதில் நடிகர் கமல்ஹாசனுக்குத்தான் கிடைக்கும் என்பதுதான்.

இந்த மூன்று பேரின் மீதும் எள்ளளவும் எனக்கு நம்பிக்கை கிடையாது. இவர்கள் நேர்மையாளராகவும் இல்லை. எளிமையானவராகவும் இல்லை. வரும் ஐந்தாண்டுகளிலும் அப்படிபட்ட ஒரு தலைவர், தமிழகத்திற்கு கிடைப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

மே 2 க்குப் பிறகு வரும் ஒவ்வொரு நாளும் திமுக.வுக்கு அக்னிப் பரீட்சை போன்றதுதான். பத்தாண்டு கால அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற வெறுப்பில் இருந்து வந்த மக்கள்தான், வேறு வழியின்றி திமுக.வுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.

கொரோனோ தாக்குதலால் மனமுடைந்துள்ள மக்கள், எதிர்காலத்தை கண்டு அச்சமுற்று இருக்கிறார்கள். அதனை நினைவில் கொண்டு, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதையும், தமிழக நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சிப் புரிந்தால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ஏன் அதற்கு முன்பாகவே, பாஜக எனும் பாசிசம், தமிழகத்தை சிதைக்க தீட்டியிருக்கும் சதித்திட்டத்திற்கு சாவு மணி அடித்து விட முடியும்

திமுக தலைமைக்கு அந்தளவுக்கு மனவலிமை இருக்கிறதா.. வரும் நாட்கள்தான் அதனை நிரூபிக்கும்..