தென் மாவட்டங்களில் விசுவாசிகளை அடையாளம் காண்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நான்காண்டுகளாக கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். அவரால் முடியாததை அவரது மகன் மிதுன் சாதித்துவிட்டதாக அவரது குடும்ப உறவுகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றன.
மிதுனின் நம்பிக்கைக்குரிய நண்பராக மாறியிருப்பவர், மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன்தான். இருவரும் நெருங்கிய சிநேகிதர்களாக மாறியதையடுத்து, இ.பி.எஸ்.ஸுக்கு எதிரான மோதல் போக்கை குறைத்துக் கொண்டு, எடப்பாடியின் விசுவாசியாக மாறியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.
இ.பி.எஸ்.ஸுக்கும் ராஜன் செல்லப்பாவுக்கும் இடையே உருவான நட்பிற்கே ஒன்றரை வயசுதான். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றபோது, அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் முன்னிலையில், ராஜன் செல்லப்பா முறுக்கிக் கொண்டு போனதை, அப்போதே ஊடகங்கள் விரிவாக பதிவு செய்திருந்தன.
தனது மகன் ராஜ் சத்யனுக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோருடன் முட்டி மோதியவர் ராஜன் செல்லப்பா. அவர்களுடனான வாக்குவாதத்தின்போது, ராஜன் செல்லப்பா கர்ஜித்த ஆக்ரோஷ குரலால் அதிமுக அலுவலகமே ஆடிப்போனது. அந்த நேரத்தில், ராஜன் செல்லப்பாவை பகைத்துக் கொள்ளாமல், ராஜ் சத்யனை நாடாளுமன்ற வேட்பாளராக அறிவித்தார் இ.பி.எஸ்.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் எலியும், பூனையுமான நட்பில் இருப்பவர்கள். மூன்று பேருக்கும் பொதுவான குணம் ஒன்று உண்டு என்றால், யாரை எப்போது தூக்கிக் கொண்டாடுவார்கள், எப்போது கீழே தள்ளி குழிப்பறிப்பார்கள் அவர்கள் என்று யாராலுமே யூகிக்க முடியாது. அதனால், மூன்று பேரில் யாராவது ஒருவருக்கு அதிமுக மேலிடத்தில் செல்வாக்கு கிடைப்பது மாதிரி ஒரு சூழல் உருவானலேயே மற்ற இருவரும் இ.பி.எஸ். ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள்.
இப்படி முக்கோன மோதலில் மதுரை அதிமுக சிக்கியிருப்பதால், யாருடனும் அதிக நட்பு பாராட்டாமல் ஒதுங்கியே இருந்து வந்தார் இ.பி.எஸ். கடந்த ஓராண்டாக அமைச்சர் உதயகுமார் இ.பி.எஸ்.ஸுடன் அதீத நெருக்கம் காட்டியதால், அவரை தனது நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொண்டார் இ.பி.எஸ்.
இதே காலகட்டத்தில், தனது மகன் மிதுன் நட்பு வளையத்திற்குள் ராஜ் சத்யன் தவிர்க்க முடியாத நண்பராக உயர்ந்து நின்றதால், ராஜன் செல்லப்பாவும், இ.பி.எஸ்.ஸின் விசுவாசிகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.
பெருசுகள் நட்பு பாராட்டிக் கொண்டதை அறிந்து இளம்தலைமுறையினருக்குள்ளான நெருக்கம் அடர்த்தியானது. அதன் பலனை ராஜ் சத்யன் நன்றாகவே அனுபவித்து வருகிறார். கடந்தாண்டு ஜூலை மாதம், அதிமுக.வில் ஐடி விங் அமைக்கப்பட்டது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு பிரபலங்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் மதுரை மண்டலத்திற்கு விவிஆர் ராஜ் சத்யன் நியமிக்கப்பட்டார். அவரின் நியமனத்திற்காக மிகவும் மெனக்கெட்டவர் முதல்வர் இ.பி.எஸ்.ஸின் மகன் மிதுன்.
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள், அரசியல் ரீதியாக நெருக்கமானதில் ஒன்றும் வியப்பில்லை என்றாலும், ராஜ்சத்யன், மிதுன் ஆகிய இருவருக்கும் இடையேயான புரிதல், மிகவும் ஆழமானதாக மாறியதையடுத்து, இருவரும் இணைந்து தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான திட்டத்தோடு, கடந்த பல மாதங்களாக பல்வேறு தொழில்கள் குறித்து அந்தந்த துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களோடு ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார்கள்.
முதல்வர் இ.பி.எஸ்.ஸின் மகன் மிதுன் பெரும்பாலான நாட்கள் சேலத்தில் இருந்தாலும் கூட சென்னை வரும் நேரங்களில் முதல்வரின் இல்லமான அடையாறு இல்லத்தில் தங்காமல், ஆழ்வார்பேட்டையில் உள்ள அடையாறு கேட் (க்ரவன் பிளாஸா)ஹோட்டலில் (பழைய பெயர்) அறை எடுத்து தங்குவாராம். அங்கு சென்று ராஜ்சத்யன் நீண்ட நேரம் தொழில் தொடர்பாக விவாதிப்பாராம். சில நாட்களில் கிண்டியில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலான ITC GRAND CHOLA விலும் விவாதங்கள் நடந்திருக்கிறது. இப்படி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை, சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக நிறைவு வடிவத்தை எட்டியிருக்கிறதாம்.
உதாரணத்திற்கு சன் டிவி போல, விமான சேவை, டிவி சேனல், ஏர்டெல், ஜியோ போன்ற தகவல் தொடர்பு நிறுவனம், டிவி சீரியல் தயாரிப்பு, திரைப்படம் தயாரிப்பு என பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது என ஆளும்கட்சியைச் சேர்ந்த இரண்டு வாரிசுகளும் தீவிர எண்ணத்தில் இருக்கிறார்களாம். சட்டமன்றத் தேர்தல் குறுக்கிட்டதால், தங்கள் தொழில் ஆர்வத்தை தள்ளி வைத்திருக்கிறார்களாம். மே 2 ஆம் தேதியன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளுக்காக மிதுனும், ராஜ் சத்யனும் பதைபதைக்க காத்திருக்கிறார்களாம்.
தேர்தல் முடிவுகள் அதிமுக.வுக்கு சாதகமாக வந்தால், மே மாத இறுதிக்குள் தொழில் முதலீடுகள் படோடபமாக தொடங்கப்படுமாம். தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தினால், மே 2 க்குப் பிறகு நடைபெறும் அரசியல் மாற்றங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு ஆற அமர தொழில்களில் முதலீடு செய்ய மிதுனும் ராஜ் சத்யனும் கலந்து பேசி முடிவு செய்திருக்கிறார்கள் என்று இருவருக்குமான பொதுவான நண்பர்கள், இருவருக்கும் இடையே கான்கிரீட்டாக இருக்கும் நட்புப் பாலத்தை போட்டு உடைத்தார்கள்…
மிதுனுக்கு தொழில் புத்தி இருக்கிறதோ இல்லையோ, ராஜ் சத்யன் அதில் கில்லாடி என்று கூறும் பொதுவான நண்பர்கள், ராஜன் செல்லப்பா கல் என்றால் ராஜ் சத்யன் கனி போன்ற குணமுடையவர். அதனால், மிதுனுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்று உறுதியாக நம்பலாம் என்றும் இருவரின் நட்பிற்கு மரியாதை கொடுக்கும் விதமாக வார்த்தைகளை தூவிச் சென்றனர்.
நல்லா இருக்கட்டும்…