Mon. Nov 25th, 2024

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பான விவகாரத்தில் கடந்த 22 ஆம் தேதி எக்காரணத்தை கொண்டும் அந்த ஆலையை திறக்கவே கூடாது என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நான்கு நாட்களுக்குள் தனது முடிவை மாற்றிக் கொண்டு, அனைத்துக்கட்சித் கூட்டத்தில், ஆலையை திறப்பதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியவுடன், வைகோவும் ஆலையை திறக்கலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதலில் போராட்டத்தை தொடங்கியவர் வைகோ., உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றிப் பெற்ற வைகோ, திடீரெனறு தனது நிலையை மாற்றிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருப்பதை கண்டு தூத்துக்குடி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வைகோ நிலைப்பாட்டை அவர்கள் கடுமையாக எதிர்க்கவும் செய்துள்ளனர்..

ஆதரவு அறிக்கை இன்று…..

ஆலையை, தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும்!வைகோ அறிக்கைஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு உரிமத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன்பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்து, அண்ணா தி.முக. அரசிடம் உரிமம் பெற்று, தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தொடங்கினார்கள். ஆனால், காற்று, நீர் நிலம் அனைத்தையும் மாசுபடுத்தி, புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தியதால், ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், பொது நல அமைப்புகளும் தொடுத்த வழக்கில், ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டெம்பர் 28 இல் தீர்ப்பு அளித்தது. அதன்பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மீண்டும் வழக்கு, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. ஆலையை மூடச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி, மூடப்பட்டது. தற்போதும், ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. தடை ஆணை நீடிக்கின்றது. ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜன் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டு, கள்ளத்தனமாக ஆலையைத் திறப்பதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது. ஆனால், அதே நேரத்தில், ஆக்சிஜன் ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாடு அரசே அந்த ஆலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும். அதற்குத் தேவையான பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது, ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே பணி ஆற்றிக்கொண்டு இருக்கும் பொறியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடாது.

வைகோபொதுச் செயலாளர்,மறுமலர்ச்சி தி.மு.க‘தாயகம்’26.04.2021

எதிர்ப்பு அறிக்கை 22.04.2021

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை;ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது!வைகோ அறிக்கைகொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சிஜன்) தட்டுப்பாடு இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலரும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். ‘அனைத்து இந்திய அளவிலும் கூட, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; போதுமான அளவு இருக்கின்றது; ஆனால், அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள்தான் தேவை’ என்று, இந்தியாவின் முன்னணி ஆக்சிஜன் ஆக்க நிறுவனமான ஐநோக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் ஜெயின் கூறி உள்ளார். இதுகுறித்த அவரது கருத்துகள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏட்டில், இன்று விரிவாக வெளிவந்து இருக்கின்றது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 7000 டன் ஆக்சிஜன் தொழிற்கூடங்களில் ஆக்கப்படுகின்றது. அதில், ஐநோக்ஸ் நிறுவனம் மட்டும், 2000 டன் ஆக்கித் தருகின்றது.இந்தியாவில் ஆக்சிஜன் ஆக்குவதில், மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. அங்கே உள்ள நிறுவனங்கள், 25 முதல் 50 விழுக்காடு அளவிற்கு ஆக்சிஜனைக் கூடுதலாக ஆக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 27 நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் தேவைக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கின்றது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், இதேபோன்ற கொரோனா முற்றுகையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. அண்மையில், இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு 8828 மெட்ரிக் டன்னும், வேறு பல நாடுகளையும் சேர்த்து, மொத்தமாக 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றது. சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை உயிர்க்காற்று ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7200 லிட்டர் உயிர்க்காற்று ஆக்கித் தரும்; ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36000 லிட்டர் ஆக்க முடியும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தார்கள்; அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் கேடு விளைவித்து வருகின்றது என்பதை, சென்னை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. எனவே, அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோபொதுச் செயலாளர்,மறுமலர்ச்சி தி.மு.க‘தாயகம்’சென்னை – 22.04.2021