டெல்லியில் கொரோனோ பாதிப்பு கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், கடந்த 19 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காலத்திலும் கொரோனோ பாதிப்பு குறையாததால், ஆயிரக்கணக்கானோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதியில்லாததால், மணிக்கணக்கில், நாள் கணக்கில் ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.
உடனடியாக மருத்துவச் சிகிச்சைக் கிடைக்காததால் நூற்றுக்கணக்கானோர் கடந்த வாரத்தில் மட்டும் உயிரிழந்தனர். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பதை அறிந்து, டெல்லி உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.
ஒருகட்டத்தில், ஆவேசத்தையும் வெளிப்படுத்த தயங்கவில்லை டெல்லி உயர்நீதிமன்றம். அதன் வெளிப்பாடாக அமைந்ததது தான், ஆக்சிஜின் விநியோகத்தை தடுப்பவரை தூக்கில் போடுவோம் என்றும் எச்சரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 24,331 பேர் புதிதாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உயர்மட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். அதன் முடிவில், கொரோனோ தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மேலும் ஒரு வார காலம் ஊரடங்கை நீட்டிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ள டெல்லி முதல்வர், வரும் மே 3 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.