ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அழுத்தமான வாதத்தை முன் வைத்துள்ளது.
ஆக்சிஜன் தயாரிப்புக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து உற்பத்தியை தொடங்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான வாதத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவுப் பிறப்பிக்கலாம் என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஆலையைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழும் என தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் வாதாடினார். .
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதிலாக நாட்டின் மற்ற பகுதியில் உள்ள ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் எடுத்துக் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பல முறை விதிகளை மீறியுள்ளது; ஆலையின் மீது நம்பிக்கை இல்லை என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது சரியா? – ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் கவலை இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து வாதாடிய தமிழக அரசின் வழக்கறிஞர் வைத்தியநாதன், நிறுவனத்தை நாங்கள் எடுத்து நடத்தினாலும் தூத்துக்குடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்கிறது என்பதையும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து மக்களின் கருத்துகளை தூத்துக்குடி ஆட்சியர் கேட்டு வருகிறார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை கூறி, ஆக்சிஜன் உற்பத்தியை செய்வதை தடுக்க முடியாது. நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னையை ஒரு மாநிலத்தின் பிரச்னையாக கருத முடியாது. வேதாந்தா நிறுவனமோ, தமிழகத்தின் எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல ; மக்களின் உயிர் தான் முக்கியம். எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கருத்து கேட்புக்கூட்டம் உள்பட அனைத்து விளக்கங்களும் உள்ளடக்கிய பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை வரு 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.