Sat. Nov 23rd, 2024

கோவை மாவட்டத்தின் சிம்ம சொப்பனமாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, அவரது சிஷ்ய கோஷ்டியே பாஜக மேலிடத்திடம் வசமாக மாட்டி விட்டுள்ளார்கள். மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு பல்வேறு நெருக்கடிகள் பாஜக தரப்பில் இருந்தே வரும் என்று கண்கள் சிவக்கப் பேசுகிறார்கள் கோவை தெற்கு தொகுதி பாஜக நிர்வாகிகள்.

ஏனுங்க இவ்வளவு கோபம் என்று விசாரணையை தொடங்கினோம். பல நாட்களாக மனதுக்குள் கொதி நிலையாக இருந்த கோபத்தை எல்லாம் கொட்டினார்கள், கோவை தெற்கு தொகுதி பாஜக நிர்வாகிகள்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக. மகளிரணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற்று விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திமுக முன்னணி நிர்வாகிகள் வேலை பார்த்தனர். வானதியை எதிர்க்கிற அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் வொர்த் இல்லை என்றபோதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு முன்பாக கோவை வந்து இரண்டு நாள் தங்கியிருந்தார்.

கோவை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான மயூரா ஜெயக்குமார், பின்தங்குகிறார் என்பதை விசாரித்து அறிந்து கொண்ட அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பெருந்தொகை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து கடைசி 2 நாட்களில் மட்டும் கோவை தெற்கு தொகுதியில் உள்ள 70 சதவிகித வாக்காளர்களுக்கு முறையாக பணத்தை விநியோகம் செய்தனர்.

70 சதவிகித வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பிறகும் மிஞ்சமிருந்த பல லட்ச ரூபாய்களை ஆட்டை போடாமல், அப்படியே கொண்டு சென்று சபரீசனிடம் ஒப்படைத்தனர். அவரே ஆச்சரியப்பட்டு, ஏன் பணத்தை திருப்பி கொடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது, இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள பகுதியில், 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வாக்களிக்க பணம் தேவையில்லை. அவர்கள் அனைவரும் கைச் சின்னத்திற்குதான் வாக்களிப்பார்கள். அதற்கு அந்த பகுதி திமுக நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளதால். பணம் மிச்சமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள்.

இப்படி, தங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடாத போதும் திமுக தலைமைக்கு உண்மையான விசுவாசத்தோடு கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் வேலை பார்த்த விவகாரம் எல்லாம் கடந்த சில நாட்களாகதான் வெளியே வந்துக் கொண்டிருக்கிறது.

திமுக தலைமை தனிக்கவனம் செலுத்தியதைப் போலவே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற வேண்டும் என உண்மையாகவே விரும்பினார். ஆனால், அவரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவது போல நடித்து வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு பாஜக.வின் காலை வாரி விட்டுள்ளனர் என்ற தகவல் இப்போதுதான் எங்களுக்கு கிடைத்தது.

அமைச்சரின் விசுவாசிகளே, பாஜக. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு உண்மையாக உழைக்கவில்லை என்பதும், அதிமுக.வினரையே டார்ச் லைட் சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லிய தகவலும் நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தாமதமாகதான் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அதைகேட்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

குறிப்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிரமான ஆதரவாளர்களே கடைசி நேரத்தில் வானதி சீனிவாசனின் வெற்றிக்காக வேலை பார்க்க வில்லை என்ற தகவல்தான் தங்களை அதிர்ச்சியடை வைத்துள்ளது. அவர்களின் நம்பிக்கை துரோகத்தை நினைத்தால் ஆத்திரமாகதான் இருக்கிறது.

வானதி சீனிவாசன் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ., ஆனால், டெல்லி பாஜக மேலிடத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டுமானால் நல்ல பெயர் கிடைக்கும். ஆனால், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தொழிலதிபர்கள், தங்களை மதிக்க மாட்டார்கள். பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஆகியவற்றை உயர்த்திய மத்திய பாஜக அரசுக்கு அடிமை வேலை பார்க்கிறீர்களே, உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா என்று பொதுமக்களும் திட்டுவார்கள். அவர்களுக்கு எல்லாம் எப்படி பதில் சொல்ல முடியும்.

அதனால், கமல்ஹாசன் வெற்றி பெற்றால் கூட பரவாயில்லை என்று அதிமுக தொண்டர்களிடம், உங்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு வாக்களித்துக் கொள்ளுங்கள் என்று அதிமுக நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.

கூடவே இருந்து குழிப்பறித்த அதிமுக நிர்வாகிகளைப் பற்றி கிடைத்த தகவலை, வானதி சீனிவாசனின் கவனத்திற்குகூட கொண்டு செல்லவில்லை. மே 2 ஆம் தேதி எந்தெந்த வார்டில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்பதை பார்த்த பிறகுதான், அதிமுக.வின் உள்ளடி வேலைகளை பாஜக வேட்பாளருக்கும், கட்சித் தலைமைக்கும் தெரிவிப்போம்.

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற்றுவிட்டால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எந்த சிக்கலும் வராது. தப்பித்தவறி தோற்றுவிட்டால், அமைச்சருக்கு எவ்வளவு சிக்கல் வரும் என்பதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை என்று மொத்தமாக மனதில் இருக்கும் கோபத்தை ஒட்டுமொத்தமாக கொட்டினார் கோவை தெற்கு தொகுதி பாஜக நிர்வாகி ஒருவர்.

கோவை தெற்கில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம். நம்மிடம் எரிந்து விழுந்தார்கள்.

கோவை மாவட்டத்தில் பாஜக மூன்று நான்கு கோஷ்டியாக இருக்கிறது. முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் கோஷ்டி வானதிக்கு எதிரி. லோட்டஸ் டிவி செல்வகுமார் கோஷ்டி அவருக்கு எதிரி. மாவட்ட பாஜக பொறுப்பாளர் நந்தகுமார் 3 வது எதிரி. இவங்கதான் வானதிக்கு எதிராக நிறைய வேலை பார்த்திருக்காங்க..

கூட்டணி தர்மத்தோடு நாங்கள் எல்லாம் உண்மையாகதான் வேலைப் பார்த்தோம். அமைச்சர் மீது வேறு ஏதோ கோபம் போல. அதனால் எங்களை கோர்த்து விடறாங்க.. பாஜக காரங்க காட்டுற பூச்சாண்டிக்கு அமைச்சர் வேண்டுமானால் பயப்படலாம். நாங்கள் எல்லாம் பயப்பட மாட்டோம் என்று ஆவேசம் காட்டுகிறார்கள் அமைச்சர் எஸ்..பி.வேலுமணியின் விசுவாசக் கூட்டத்தினர்.

மே 2 ஆம் தேதிக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணிக்கு எல்லா பக்கமும் இருந்து சிக்கல் எழும் போல….பாவம் மனிதர்….