முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று கூறி பொறுமை காத்து வருகிறார்களாம். ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மட்டும் நிலை கொள்ளாமல் தவித்து வருகிறாராம்.
கொரோனோ 2 ஆம் அலை கோரத்தாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் அமைச்சர் அதிகாரத்தை செலுத்த முடியாத அளவுக்கு கை, கால்களை தேர்தல் ஆணையம் கட்டிப் போட்டுவிட்டதே என புலம்புகிறாராம் டாக்டர் விஜயபாஸ்கர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் களத்தில் இருந்தால்தான் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், செவிலியர்களும் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள் என்ற செய்தியை மக்களிடம் பரப்ப, தனக்கு நெருக்கமான பிரபல நாளிதழ்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினாராம்.
ஒருசிலர், அவரின் கவனிப்புக்கு ஆசைப்பட்டு, அமைச்சரிடம் பேட்டி வாங்கி, தங்கள் நாளிதழ்களில் வெளியிட்டுள்ளனர். அப்போதும், அமைச்சரின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையாம். கொரோனோ அச்சுறுத்தலா, கூப்பிடுங்கள் அமைச்சர் விஜஸ்பாஸ்கரை என்று தலைமைச் செயலகத்தில் ஒரு உயரதிகாரியும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
நாளிதழ்கள் கை கொடுக்காத நிலையில் காட்சி ஊடகங்களைச் சேர்ந்த ஒரு சில செய்தியாளர்களுக்கு வலை வீசினாராம் டாக்டர் விஜயபாஸ்கர். கொரோனோ தொடர்பாக விரிவான பேட்டிக்கு உங்களுக்கு டிவியில் ஏற்பாடு செய்யுங்கள். பேட்டி எவ்வளவு நேரம் ஒளிப்பரப்பாகுமோ, அதற்கு தகுந்த மாதிரி கவனிப்பு பலமாக இருக்கும் என்றும் ஆசை காட்டியுள்ளார் டாக்டர் விஜயபாஸ்கர்.
கடந்த காலங்களில் தனிப் பேட்டி என்று டாக்டர் விஜயபாஸ்கரிடம், 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆட்டையைப் போட்ட ஒரு சில ஊடகவியலாளர்களும், தாங்கள் பணிபுரியும் டிவி நிறுவனங்களில் பேசினார்களாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த மாதிரி அனுமதி கிடைக்காததால், ஆப்பத்தை இழந்த குரங்கு மாதிரி, சோகமாக சுற்றி வருகிறார்கள் அந்தந்த டிவி நிருபர்கள்.
ஊடகங்கள் கைவிட்டுவிட்ட நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு தூது விட்டாராம், டாக்டர் விஜயபாஸ்கர். தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் போகும் கொரோனோவை கட்டுப்படுத்த தனது சேவை அவசியம் என்பதை தேர்தல் ஆணையத்திற்கு உணர்த்தி, சுகாதாரத்துறை அமைச்சருக்கு மட்டும் அரசுப் பணியை தொடர்ந்து செய்திட விதிவிலக்கு பெற்றுத் தாருங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரின் விருப்பத்திற்கு தொடக்கத்திலேயே நோ சொல்லி விட்டாராம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர். மேற்கு வங்கத்தில் இன்னும் தேர்தலே முடிவடையவில்லை. இந்த நேரத்தில் அந்த மாநிலம் உள்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறை அமலில் உள்ள போது, தமிழகத்திற்கு மட்டும் தனி விலக்கு பெற்று தருவது சாத்தியமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கை விரித்துவிட்டாராம்.
மத்திய அரசும் கைவிட்டதால் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள் சிலரை தொடர்பு கொண்டு, சென்னையில் உள்ள சுகாதாரத்துறை உயரதிகாரிகள் என்ன செய்கிறார்கள், எந்தெந்த விஷயத்தில் பணத்தை சுருட்டுகிறார்கள் என கேட்டு நச்சரிக்கிறாராம்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா, விஜயபாஸ்கருக்கே மீண்டும் சுகாதாரத்துறை கிடைக்குமா என்பதே நிச்சயமாக தெரியாத நிலையில், அமைச்சருக்குப் பயந்து, தங்கள் துறையின் உயரதிகாரிகள் எப்படி காட்டிக் கொடுப்பது, அவர்கள் செய்யும் கோல்மால்களை எப்படி தெரிவிப்பது என்று தவிக்கிறார்களாம் மாவட்ட அளவிலான சுகாதாரத்துறை அதிகாரிகள்.
அமைச்சர் பதவியில் இருந்தபோதும், கொரோனோ 2 வது அலையில் காசு பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே என்று புலம்பிக் கொண்டிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் நிலையைப் பார்த்தால், பரிதாபமாக இருக்கிறது என்று கிண்டலாக கூறுகிறார்கள், மாவட்டங்களில் பணிபுரியும் சுகாதாரத்துறை அதிகாரிகள்.