Sun. Nov 24th, 2024

மதுரையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் பயணம் செய்யும் பொதுமக்களுக்கான அறிவிப்பு இது…..

அரசுப் போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு உத்தரவின்படி கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை முதல் இரவு நேர ( இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களிலிருந்து இரவில் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் அன்று பேருந்து இயக்கப்படாது.

இதையடுத்து நாளை(20-ஏப்ரல்-21) முதல் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில், திருச்செந்தூருக்கு மாலை 5 மணி வரையும்,

ராமேஸ்வரம், தென்காசிக்கு மாலை 6 மணி வரையும்,

திருச்சி, ராமநாதபுரம், நெல்லைக்கு மாலை 7 மணி வரையும்,

இராஜபாளையத்திற்கு மாலை 7.30 மணி வரையும்,

கோவில்பட்டி, சிவகாசிக்கு இரவு 8 மணி வரையும்,

அருப்புக்கோட்டை, நத்தத்துக்கு இரவு 8.30 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், கோவை, ஈரோட்டிற்கு மாலை 5 மணி வரையும்,

கொடைக்கானலுக்கு மாலை 5.45 வரை,

திருப்பூர், பொள்ளாச்சிக்கு மாலை 6 மணி வரை,

கரூர், கம்பம், பழனிக்கு மாலை 7 மணி வரை,

தேனி, பெரியகுளம், திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணி வரையும்,

சோழவந்தான் வழியாக நிலக்கோட்டைக்கு இரவு 8.30 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும்.


திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு நாளை 20.04.2021 முதல் அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி / தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

இவை தவிர தொலைதூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என்ற விபரம் திருநெல்வேலி அரசுபோக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்துகளில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதை கண்காணிக்க பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பேருந்து நிலையங்களிலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யவும், கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பின்வாசல் வழியாக ஏறி முன்வாசல் வழியாக இறங்கி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.