Sun. Nov 24th, 2024

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கடந்த பல மாதங்களாக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்தார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மற்றும் தேர்தல் பிரசாரத்தையொட்டி தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக சுற்றி வந்த அவர், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நாளில் இருந்து வேறு எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் சென்னையிலேயே தங்கியிருந்து, திமுக வெற்றி வாய்ப்புகள் குறித்து கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று காலை தனி விமானத்தில் அவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் தனி விமானத்தில் மதுரைப் புறப்பட்டுச் சென்றனர். மொத்தம் 17 பேர் தனி விமானத்தில் பயணம் செய்ததாக, விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலின், வழக்கமான வேட்டி, சட்டையில் இல்லாம் நீலக் கலரில் சட்டை, பேண்ட் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்ததை விமான நிலையத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, மகள் செந்தாமரை , மருமகள் கிருத்திகா, உதயநிதி மகனும் பேரனுமான உதயநிதி, பேத்தி தன்மயா, மகள் வழி பேத்தி நிலானி, பேரன் நளன் என குடும்ப உறவுகளோடு தனி விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கிருந்து கொடைக்கானல் செல்லும் மு.க.ஸ்டாலின் தனது மனைவி, மகள், மருமகள், பேரக் குழந்தைகளோடு வரும் 19 ஆம் தேதி கொடைக்கானலில் இளைப்பாறுகிறார்.

இதேபோல, இன்னொரு தனி விமானத்தில், மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவரின் மாப்பிள்ளை சபரீசனும் மதுரைச் சென்று அங்கிருந்து கொடைக்கானல் புறப்பட்டுள்ளனர்.

கொடைக்கானலில் தங்கியிருக்கும் நாட்களில், அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்வது, ஐஏஎஸ், ஐபிஎஸ் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக திமுக முன்னணி தலைவர்கள் தகவல் தெரிவித்தனர்.