திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் முடிவுக்காக மே 2 ஆம் தேதி வரை காத்திருந்தாலும் கூட, அடுத்த முதல்வர் அவர்தான் என உறுதியாக நம்பும் தலைமைச் செயலகத்தில் உள்ள அரசுத்துறை உயரதிகாரிகள், கடந்த பல நாட்களாக, மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருவதாக, மிகுந்த நம்பிக்கைக்குரிய அதிகாரியிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அவர் பகிர்ந்து கொண்ட தகவல்களை அப்படியே இங்கு பதிவிடுகிறோம்.
மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் எந்தெந்த பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இரண்டாம் கட்ட தலைவர்கள், திமுக ஆதரவு மனநிலையில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அவரின் வேகத்தை விட, தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கியத் துறைகளைச் சேர்ந்த ஐஏஎஸ் உயரதிகாரிகளின் கீழ் பணியாற்றும் திமுக ஆதரவு அதிகாரிகள், தங்கள் துறை சார்ந்த ஊழல்களை, முறைகேடுகளை பட்டியலாக தயாரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு அனுப்பி வைப்பதில் படு ஸ்பீடாக இருக்கிறார்கள்.
அந்தவகையில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் கீழ் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையில், கடந்த நான்காண்டுகளாக நடைபெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை எல்லாம் பட்டியலாக தயாரித்து, திமுக தலைவரின் பார்வைக்கு, தற்போதைய திமுக எம்எல்ஏ ஒருவர் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்.
அந்த பட்டியலில், உணவுத்துறையில் இதுவரை வெளிவராத பல்வேறு முறைகேடுகளின் முழு விவரங்களும் அடங்கியிருப்பதாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் சுதாதேவி ஐஏஎஸ்.ஸின் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு நடவடிக்கைகளும், ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், அதிமுக மேலிடம் எப்படி துடிதுடித்ததோ, அதைவிட அதிகமாக வேதனைப்பட்டிருக்கிறார் அமைச்சர். அதற்கு காரணம் நிர்வாக இயக்குனர்தான். .
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நேரத்தில், குடும்ப உறவுகள் மற்றும் உறவினர்களிடம் கூட ஆர்.காமராஜ் அதிக நேரம் பேசவில்லை. நிர்வாக இயக்குனர் சுதாதேவி ஐஏஎஸ்.ஸிடம்தான் அதிகமாக பேசினாராம். அப்போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்களின் விவரம், அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காலத்தில் நிர்வாக இயக்குனர் அரசு துறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என அனைத்து விவரங்களும், திமுக தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
உணவுத்துறையில் உள்ள உயரதிகாரிகளின் அனுமதி கூட பெறாமல் நூறு கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தங்களில் அமைச்சரின் விருப்பத்தை பூர்த்தி செய்து தந்த நிர்வாக இயக்குனரின் , அதிகார வரம்பு மீறல்களை பார்த்து, அந்த திமுக எம்.எல்.ஏ.,வே அதிர்ச்சியடைந்து விட்டார்.
மே 2 ஆம் தேதிக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன், அதிமுக அரசில் உச்சசத்தில் இருந்த அமைச்சர்கள் மீது மட்டுமல்ல, ஜூனியர் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் தூசு தட்டியெடுத்து நடவடிக்கை எடுக்க தயாராக வருகிறார். அப்போது உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் நிச்சயம் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பார் என்று திமுக எம்.எல்.ஏ., உறுதியுடன் கூறியுள்ளார் என்று அந்த அதிகாரி ஒரு மூச்சில் பேசிவிட்டு வாட்ஸ் அப் கால் இணைப்பைத் துண்டித்தார்.
மே 2 ஆம் தேதிக்குள் இன்னும் என்னென்ன பூதங்கள் கிளப்ப போகிறதோ…
[…] உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜுக்கு … […]