திமுக வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, வரும் தேர்தல் முடிவுகள் அமையும் என்றும் அந்த சாதனைக்கு தனிப்பட்ட முறையில் அங்கீகாரம் பெறும் தலைவராக மு.க.ஸ்டாலின் மட்டுமே திகழப் போகிறார்க என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். தேர்தலுக்கு முன்பு வரை வாய் திறக்காத மக்கள், கடந்த சில நாட்களாக அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசத் தொடங்கிவிட்டார்கள் என்றும் 100 பேரிடம் பேசினால் 98 பேர் திமுக.வுக்குதான் வாக்களித்தாகவும் கூறுகிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த அடிப்படையில், திமுக தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் சொல்லி வந்த மாதிரி, 180 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி கைப்பற்றும் என்பதும் அவர்களின் ஆணித்தரமான வாதம். அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவுக்கு கலைஞர் மு.கருணாநிதிக்கு கிடைக்காத வெற்றி வரலாறு, மு.க.ஸ்டாலின் பெயரோடு பொறிக்கப்படவுள்ளதாகவும் திமுக தலைவராக பதவியேற்ற குறுகிய காலத்திலேயே மு.க.ஸ்டாலின் நிகழ்த்தும் மகத்தான சாதனை இது என்றும் ஆய்வாளர்கள் ஆச்சரியத்தோடு பேசுகிறார்கள்.
கூட்டணியோடு 200 தொகுதிகளை திமுக கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அந்தளவுக்கு பத்தாண்டு கால அதிமுக ஆட்சி மீதான அதிருப்தியும், செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த நான்காண்டு காலம் எடப்பாடி பழனிசாமி, பாஜக.வுக்கு தூக்கிய காவடி வெறுப்பும், தமிழக மக்களை ஒரே அணியில் திமுக பக்கம் சாய்வதற்கு வழிவகுத்துவிட்டது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
சென்னை முதல் கன்னியாகுமரி ஒரே மாதிரியாகதான் அதிருப்தி அலை வீசும் என்றும் அந்த அலையில், முன்னணி அமைச்சர்களே காணாமல் போய்விடுவார்கள் என்றும் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள் அவர்கள்.
மே 2 ஆம் தேதி வெளியாகப் போகிற முடிவுகளில் எந்த சந்தேகமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லாததால்தான், கடந்த ஒரு வாரமாக மிகுந்த பொறுப்புணர்வுடன் மாவட்டந்தோறும் திமுக வேட்பாளர்களை, முன்னணி நிர்வாகிகளை அழைத்து அவர் பேசி வருகிறார் என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர்.
திமுக தலைவரின் விசாரணைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாவட்ட திமுக வேட்பாளர் ஒருவர் பேசும் போது, தலைவர் ஜாலியாக இருந்ததுடன், திமுக ஆட்சி அமைப்பது பற்றியும் உறுதியான தகவலை தெரிவித்தார். அமைச்சரவைப் பட்டியலைக் கூட தலைவர் தயாரித்துவிட்டார், பதவி ஏற்கும் நாளும், இடமும் கூட முடிவாகிவிட்டது என்ற மகிழ்ச்சிக்குரிய தகவல்கள்தான், நாங்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியேறும் போது எங்கள் செவிகளுக்கு எட்டும் வகையிலேயே கருத்துகள் பரிமாறப்பட்டன என்றார் அவர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெறும் அதிர்ஷ்டசாலிகள் யார் என்பதையும் பட்டும் படாமலும் திமுக முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அந்த வகையில், முன்னணி தலைவர்கள் துரைமுருகன் (நிதி அமைச்சர்), சுப்புலெட்சுமி ஜெகதீசன் (சமூக நலத்துறை )ஐ. பெரியசாமி (பொதுப்பணி) கே.என்.நேரு( போக்குவரத்து) எ.வ.வேலு (உணவு) க.பொன்முடி (உயர்க்கல்வி) உதயநிதி (உள்ளாட்சி) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்( மக்கள் நல்வாழ்வு) கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் (வணிகவரி) தங்கம் தென்னரசு (பள்ளிக்கல்வி) மா.சுப்பிரமணியம் (செய்தி ) மகேஷ் அன்பில் பொய்யாமொழி (இளைஞர் நலன் விளையாட்டு) தா.மே.அன்பரசன் (தொழிலாளர்), மாதவரம் சுதர்சனம் (பிற்படுத்தப்பட்டோர்) பெரியகருப்பன் (இந்து அறநிலை) கீதாஜீவன்(மீன்வளம்) மருத்துவர் எழிலன் (தகவல் தொழில்நுட்பம்) கிருஷ்ணகிரி செங்குட்டுவன் (தமிழ் வளர்ச்சி) தருமபுரி இன்பசேகரன் (பால்வளம்) ஈரோடு முத்துசாமி (நெடுஞ்சாலை) ஆர்.ராஜேந்திரன் (சட்டம் நீதித்துறை)
ரகுபதி (ஊரகத் தொழில்) சிங்காநல்லூர் கார்த்தி (தொழில்) சேனாதிபதி (சுற்றுச்சூழல்) குன்னூர் ராமச்சந்திரன் (சுற்றுலா) சாமிநாதன் (பால்வளம்) செந்தில்பாலாஜி (வருவாய்) பிடிஆர் பழனிவேல்ராஜன் (மின்சாரம்) சக்கரபாணி (வனத்துறை )தஞ்சாவூர் துரை சந்திரசேகரன் (விவசாயம்) தமிழரசி (ஆதிதிராவிடர்) அப்துல் வஹாப் (கைத்தறி) காதர் பாட்சா (கூட்டுறவு) என உத்தேசப் பட்டியல் நீள்கிறது.
இவர்கள் தவிர, லட்சுமணன், மதுரை தளபதி, ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், சேலம் டாக்டர் தருண், சிவசங்கரன், பூங்கோதை ஆலடி அருணா, கம்பம் ராமகிருஷ்ணன், தங்கதமிழ்ச்செல்வன்,பூண்டி கலைவாணன், வேதரத்தினம்,அணைக்கட்டு நந்தகுமார், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, சேகர்பாபு எனவும் காத்திருப்போர் பட்டியல் ஒன்றும் உள்ளதாம்.
ஆவுடையப்பன் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் ஒரு தகவல் அலையடிக்கிறது.
சீனியர்கள் பாதி, ஜூனியர்கள் பாதி என்ற கலவையில் அமைச்சரவைப் பட்டியல் இருக்கும் என்றும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சீனியர்களின் பெயர்கள் கூட ஒன்றிரண்டு கூட விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள் சிலர். மாவட்டம் வாரியாகவும், அனைத்து சாதியினருக்குமான பிரதிநிதித்துவ அடிப்படையில், அமைச்சரவை பட்டியல் இறுதி வடிவம் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.
இந்தப் பட்டியலில் நீக்கலும் இருக்கலாம். சேர்கையும் இருக்கலாம் என்கிறார்கள் அண்ணா அறிவாலயப் புள்ளிகள்.
மே 6 ஆம் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளதாகவும், அதற்கான விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தீவிர விசுவாசிகள் முன்னெடுத்து வருகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மாநில முதல்வர்கள் ஜெகன்மோகன் ரெட்டி(ஆந்திரா) சந்திரசேகர் ராவ் (தெலுங்கானா) உள்ளிட்ட தலைவர்களை பதவியேற்பு விழாவிற்கு அழைக்கும் பணியை மு.கஸ்டாலினின் மருமகன் சபரீசன் முன்னின்று மேற்கொண்டு வருவதாகவும், திமுக.வின் முன்னணி தலைவர்களின் விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.